சாலையில் கார் கதவு திறப்பு: டூவீலரில் வந்த இளைஞர் விபத்தில் பலி
கம்பம் அருகே மனைவியை அழைத்து வருவதற்காக டூவிலரில் சென்ற இளைஞர் சாலை விபத்தில் பலி, போலீசார் விசாரணை.
HIGHLIGHTS

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியன் மகன் ராகுல் (28). கூடலூரில் இருக்கும் தனது மனைவியை அழைத்து வருவதற்காக டூவிலரில் சென்று கொண்டிருந்த சமயம் கம்பம் அரசு மருத்துவமனை அருகே சாலை ஓரத்தில் நின்றிருந்த காரின் கதவை உள்ளிருந்து திறந்துள்ளனர். இதனால் கார் கதவின் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழ முயன்ற ராகுல் மீது, குமுளியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ராகுல் உயிரிழந்ததாக தெரிவித்ததையடுத்து உடல் பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து ராகுலின் சகோதரர் திலீப்குமார் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட கார் டிரைவர் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநர் பெரியகுளம் கந்தசாமி ஆகிய இருவர் மீதும் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.