/* */

அப்துல்கலாம் நிறுத்திய திருமணம்: அமெரிக்க வாழ் தமிழர் வெளியிட்ட தகவல்

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த போது ஒரு திருமணத்தை தடுத்து நிறுத்தியதுபற்றி அமெரிக்க வாழ் தமிழர் தகவல் வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

அப்துல்கலாம் நிறுத்திய திருமணம்:  அமெரிக்க வாழ் தமிழர் வெளியிட்ட தகவல்
X

அப்துல் கலாம்.

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்ற கலியமூர்த்தி அப்துல்கலாம் அறிவுறுத்தலின் பேரில் ஒரு திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இது பற்றி அமெரிக்க தமிழ் நண்பர் ஒருவர் வெளியிட்ட பதிவை அப்படியே தருகிறோம்.

நான் என் நண்பனிடம் சொன்னேன். ஜனாதிபதியாக இருந்த போது அப்துல்கலாம் ஒரு பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்தினார் தெரியுமா?

என்ன சொல்றே ?"

"ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி."

"எப்போ நடந்தது இது ?

எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?"

நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன்.

ஆம்.

அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.

அப்போது திருச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணி புரிந்து வந்த கலியமூர்த்திக்கு போன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.

'சொல்லுங்க சார்' என்று பணிவுடன் சொன்னார், கலியமூர்த்தி. கலாம் சொன்னார், அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும்.

காரணம் அந்த மணப்பெண்ணுக்கு வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள். மாப்பிள்ளைக்கு வயது 47. இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன். கலாம் தொடர்ந்தார்.

"கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம் அந்தப் பொண்ணு மேல் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுது. அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..." என்று முடிப்பதற்குள்

"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியமூர்த்தி.


"பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"

ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.

அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.

ஏற்கனவே முசிறி காவல்துறை அதிகாரிகளுக்கு போன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள்.

"சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."


"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. அதற்கான ஏற்பாடு பண்றோம்." அந்தப்பெண் கூறினார்.

கவனமாக குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

"ஓகே, நாங்க புறப்படறோம்.

அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."

"என்ன சார் ?"

"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே.

அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"

"நான்தான் சார்."

ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.

"எப்படீம்மா ?"

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் சார் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை. அந்த கூட்டத்திற்கு நானும் (சரஸ்வதி)ம் போயிருந்தேன் சார். அங்கு பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.

Only four students..."

கேள்வி கேட்ட நான்கு பேரில் நானும் ஒருவள்.

கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட எங்கள் நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம் சார்.

"இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."

அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன. எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தேன். இந்த ஆபத்துக் காலத்தில் எனக்கு உதவியிருக்கிறது என்றார் அந்த பிளஸ் 2 முடித்த சரஸ்வதி.

இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.

அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.

அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

சமீபத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி. அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

யார் இந்தப் பெண் ?

எங்கோ பார்த்தது போல இருக்கிறதே ! என்று மேடையில் நின்று அப்பெண்ணை கூர்ந்து பார்த்தார், கலியமூர்த்தி.

மேடையில் அந்தப் பெண் நின்றிருந்தாள்.

மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."

யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்? என்று எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி.

"கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.

மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.

நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?"

"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.

அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள்: "ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள். படிக்க வைக்கப்பட்டவள்.

நான்தான் துறையூர் சரஸ்வதி." இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.

"உங்களுக்கும் நன்றி.

உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."

சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண், சரஸ்வதி.

ஆச்சரியம்தான்.

அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

ஆம்.

அது ஒரு அழகிய கலாம் காலம்.

Updated On: 4 July 2022 10:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை