/* */

தேனியில் மறியலுக்கு முயன்ற 180 சத்துணவு பணியாளர்கள் கைது

தேனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலுக்கு முயன்ற 180 சத்துணவு பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் சத்துணவு பணியாளர்கள் சங்கம் இரண்டு பிரிவாக உள்ளது. இச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பேயத்தேவன் தலைமையில் ஒரு அணியும், மாநில பொதுச் செயலாளர் நுார்ஜகான் தலைமையில் ஒரு அணியும் உள்ளது. இந்த இரு அணித்தலைவர்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்ததோடு, போட்டி ஆர்ப்பாட்டங்களை அறிவித்தனர். இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் கலெக்டர் அலுவலக வாயிலில் ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால் இரு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தங்கள் உறுப்பினர்களை வரவழைத்தனர். உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் பெண்கள். அவர்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு கிடையாது. தலைவர்கள் அழைக்கிறார்களே என வந்தனர்.

இப்படி வந்தவர்களில் பலருக்கு எந்த பக்கம் நிற்கும் அணி, யாருடைய அணி என்ற விவரம் கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு கலெக்டர் அலுவலக வாயிலில் கடும் குழப்பம் நிலவியது. இந்நிலையில் போலீசார் இரு அணிகளும் ஆர்ப்பாட்டம், மறியல் நடத்தக்கூடாது என தடை விதித்தனர்.பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. நுார்ஜகான் தலைமையிலான அணியினர் நிலைமை சிக்கலாகி விடும் என்பதை உணர்ந்து, தங்கள் அணியினருடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்து நின்று பெருந்திரள் முறையீடு என அறிவித்து, கலெக்டரை சந்தித்து மனு மட்டும் கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

பேயத்தேவன் தலைமையிலான அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இதனை போலீசார் தடுத்தனர். இதனால் சத்துணவு பணியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதலும் தள்ளு, முள்ளும் ஏற்பட்டது. இந்த விஷயம் கலெக்டர், எஸ்.பி.,க்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தடையை மீறினால் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர். இதனை அறியாத பேயத்தேவன் தலைமையிலான அணியினர் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களில் 180 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்கின்றனர் என்பதை உணர்ந்ததும், பேயத்தேவன் அணியில் இருந்த சிலர் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டனர். நிலைமை சிக்கலாகிறது என்பதை உணர்ந்து கொண்டு விலகிச் சென்ற பணியாளர்களை போலீசார் எந்த தொந்தரவும் செய்யவில்லை.

முரண்டு பிடித்த 180 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அங்கு இரவு 8 மணி வரை வைத்திருந்தனர். கைதான பணியாளர்களை படம் எடுத்து, அவர்களின் விவரங்களை சேகரித்தனர். ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவது வழக்கம் தான். ஆனால் போட்டோ எடுத்து விவரங்களை சேகரித்தது ஊழியர்கள் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: -

அரசு பணியாளர்களாக இருந்து கொண்டு, மாவட்ட நிர்வாகம், போலீசார் விதித்த தடையை மீறி ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த 180 பேரின் மீதும் வழக்கு பதிய திட்டமிட்டுள்ளோம். வழக்கு பதிந்த பின்னர், இந்த பட்டியலை தலைமைச் செயலகத்தில் உள்ள சத்துணவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து, துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினர்.

இரு தரப்பிலும் உள்ள நிர்வாகிகள் மத்தியில் நடைபெறும் மோதலுக்கு சாதாரண நிலையில் உள்ள சத்துணவு பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறு என அரசு பணியாளர் சங்கங்களை சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மாறாக சங்க நிர்வாகிகளில் யார் தவறு செய்துள்ளார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விஷயத்தில் போட்டி ஆர்ப்பாட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுத்த கலெக்டர் முரளீதரன், தவறு செய்த நிர்வாகிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பாரா? அல்லது அப்பாவி பணியாளர்களின் மீதும் நடவடிக்கை எடுப்பாரா? என்ற பரிதவிப்பு பணியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நிர்வாகிகள் மீது எழுந்த புகார்கள் குறித்த விசாரணை தொடங்கப்பட்டு விட்டது என கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 14 Oct 2022 4:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...