/* */

ஆளுநரின் அதிகாரம் என்ன ? சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விளக்கம்

ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு இயந்திரம் மாதிரி, நெருப்பு இருந்தால், கூப்பிட்டால் வந்து அணைக்க வேண்டும்

HIGHLIGHTS

ஆளுநரின் அதிகாரம் என்ன ?   சிறுபான்மை  ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விளக்கம்
X

தஞ்சையில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு இயந்திரம் மாதிரி, நெருப்பு இருந்தால் மட்டுமே வந்து அணைக்க வேண்டும் என சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி.

தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பலவீனமாகி கொண்டு வருவதால், அதனுடைய இடத்தை பாஜக கபளீகரம் செய்து தமிழகத்திலே தன்னை ஒரு எதிர்க்கட்சியாகவாவது நிலைநிறுத்திக் கொள்ள, நினைக்கிறது. சட்டசபை தேர்தலில் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட போதும், அண்ணா திமுகவின் இயலாமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு எதிர்க்கட்சி என்ற இடத்தினை பாஜக பிடித்துக் கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக தான், தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் மக்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய வகையிலும், நீண்ட நாட்களாக தூங்கிக் கிடந்த நிர்வாகத்தை தட்டி எழுப்பி, நடைபெற்று வருகின்ற ஆட்சியின் மீது இல்லாத, பொல்லாத குற்றச்சாட்டுகளைச் சொல்லி நிர்வாகத்தினுடைய கவனத்தையும், பொது மக்களுடைய கவனத்தையும் திசை திருப்ப நினைக்கிறார்கள். விடப்படாத டெண்டரிலேயே ஊழல் என்று சொல்கி றார்கள். அரசாங்கமே இன்னும் ஏற்றுக்கொள்ளாத ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக சொல்கிறார்கள். முறைகேட்டுக்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் நீதிமன்றத்திலேயே வழக்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள்.

ஆகவே, தமிழக அரசியலிலே குழப்பத்தை உருவாக்கி, இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக நிர்வாகத்தை உயர்த்துவதற்காக, தமிழக முதலமைச்சர் நாளும் பொழுதும், அயராது உழைத்துக் கொண்டிருக்கிற வேளையிலே, தமிழக அரசின் கவனத்தையும் நினைப்பையும், திசைதிருப்புகின்ற வகையில், தமிழகத்தினுடைய நிர்வாகத்தை சீர்குலைக்கும் முயற்சியில், பாஜக ஈடுபட்டு வருகிறது.

தமிழக ஆளுநர் மாநிலத்திலுள்ள அரசாங்கத்தின் அனைத்து துறைகள் பற்றிய தகவல்களும் தனக்கு வேண்டும். சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் தன்னிடம் வந்து விளக்க வேண்டும் என்று கேட்டிருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். இது சம்பந்தமாக தலைமைச் செயலாளரும், துறை செயலாளர்களுக்கு, ஆளுநருக்கு தேவைப்படுகின்ற தகவலை தர வேண்டும் என்று குறிப்பு அனுப்பியதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அதிமுக ஆட்சியில், பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்ற போது, மாவட்ட நிர்வாகத்தை நான் மேற்பார்வையிட போகிறேன் என்று புறப்பட்ட போது, அன்று எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் எல்லோரும் அதனை கண்டித்து, அதிலும் குறிப்பாக அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக இருந்த, இன்றைய முதலமைச்சர் அந்தப் பிரச்சினையை வன்மையாக கண்டித்து, தன்னுடைய ஆட்சி, அரசு அதிகாரம் இல்லை என்றாலும் கூட, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் அதிகாரங்களை, நியமனம் செய்யப்பட்ட ஒரு ஆளுநர் எடுத்துக் கொள்வது என்பது, வாக்களித்த மக்களுக்கு செய்யப்படுகின்ற மிகப்பெரிய அவமானம் என்று சுட்டிக்காட்டி, ஆளுநர் அதுபோன்ற சுற்றுப்பயணம் மேற்கொள்ள கூடாது. அதிகாரிகளை நேரடியாக அழைத்துப் பேசுவதற்கு, அரசியல் சாசனச் சட்டத்தின் மரபு அனுமதிக்கவில்லை என மிகத் தெளிவாக சுட்டிக்காட்டி ஆளுநர் போகின்ற இடத்திலே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் கூட நடத்தினோம்.

அதன்பிறகுதான் ஆளுநர் அது போன்ற ஆய்வுகளை நிறுத்திக்கொண்டார். அன்றைய தினம் வலுவற்ற முறையில், மிகவும் பலகீனமாக இருந்த அதிமுகஅரசின் அமைச்சர்களே கூட, உடன் நின்று அவர்களே சென்று, ஆளுநருக்கு வரவேற்பு கம்பளம் விரித்ததை தமிழக மக்கள் கைகொட்டிச் சிரித்தார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது எந்த அதிகாரியும் ஆளுநரை சென்று பார்க்கக் கூடாது என்று கடுமையான உத்தரவு போட்டார். காவல்துறை தலைவர் கூட ஆளுநரை சென்று பார்க்கக் கூடாது என்றார். ஆளுநர் பயணம் செல்லுகின்ற வழியில் அண்ணா திமுக தொண்டர்களை நிறுத்தி கவர்னரின் வாகன அணிவகுப்பை தடுத்து நிறுத்திய சம்பவமும் நடந்தது. ஆளுநர் டிஜிபியை அழைத்த போது கூட டிஜிபி அங்கு செல்லவில்லை.

இப்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சியும் அல்ல, எடப்பாடி ஆட்சியும் அல்ல. அரசியல் சாசன சட்டம் என்ன கேட்கிறதோ, என்ன அதிகாரத்தை ஆளுநருக்கு கொடுத்திருக்கிறதோ, அதனை மதிப்பதற்கு முதலமைச்சர் தயாராக இருப்பார். ஒரு நாளும் தயங்கமாட்டார். அதே நேரத்தில் மத்திய அரசின் அல்லது ஆளுநரின் அதிகாரம் வரம்பு மீறினால் அதற்கு பழனிச்சாமி போல் பயப்படக்கூடிய முதலமைச்சர் அல்ல. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சொன்னதுபோல் உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம். அந்த அடிப்படையில் இந்த ஆட்சி தொடர்ந்து நடக்கும்.

இன்றைக்கு மத்திய அரசு இந்தி பேசாத மாநிலங்கள் மீது ஒரு மாற்றாந்தாய் மனப்போக்குடன் பின்பற்றி வருவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். நேற்று கூட இதனை உயர் நீதிமன்றம் கண்டித்து இருக்கிறது. கல்வி உதவித் தொகைக்காக மத்திய அரசு நடத்தும் ஒரு தேர்வு ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடத்துவோம் என்று சொல்கின்றனர். மத்திய அரசினுடைய ஆட்சிமொழி பட்டியலிலே, பல மாநில மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட சூழ்நிலையில், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான நடத்தப்படுகின்ற ஒரு தேர்வை, ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே தான் நடத்துவோம் என்று ஒரு அரசு சொல்கிறது என்றால் இந்தி பேசாத மாநில மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக மத்திய அரசு நினைக்கிறதா என உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு எங்களிடம் உள்ள தமிழ் மொழி தெரிந்த ஊழியர்கள் இல்லை என மத்திய அரசு பதில் சொல்லியிருக்கிறது. சிபிஎஸ்இ தேர்வில் கூட முக்கியமான பாடம், முக்கியமற்ற பாடம் என மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது. முக்கியமான மொழி என்று இந்தியையும் ஆங்கிலத்தையும் சொல்கின்றனர். முக்கியமற்ற பாடம் என்பது இந்தி அல்லாத மாநில மொழிகள், மாணவர்கள் அந்த மொழியை படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி இந்த தேர்வை அந்த பள்ளிக்கூடங்களை வைத்துக் கொள்ளலாம். தேர்வில் ஆங்கிலத்தையும், இந்தியையும் மட்டுமே தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம் என்று சொன்னால் அது மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு இயந்திரம் மாதிரி, நெருப்பு இருந்தால், கூப்பிட்டால் வந்து அணைக்க வேண்டும். அமைதியான ஒழுங்கான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கும் போது, மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக முன்னேற்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, ஆளுநருடைய தலையீடு என்ற அவசியமே இல்லை. இதை அரசியல் சாசன சட்டமும் ஏற்றுக் கொள்ளவில்ல. ஆளுநர் என்ன காரணம் சொன்னாலும் சரி, அவர் அதிகாரிகளை நேரடியாக அழைத்து பேசுவது என்பது இரண்டு அரசாங்கங்கள் செயல்படுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும்.

அது தமிழ்நாட்டைப் போல புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, பெருவாரியான அபிமானத்தைப் பெற்றிருக்கின்ற அரசை, அதிலும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை விட இரண்டு மடங்கு அதிகமாக ஒப்புதலை முதலமைச்சரின் ஆட்சி நிர்வாகத்திற்காக பொதுமக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், ஆளுநர் அரசாங்கத்தின் கவனத்தை திசை திருப்புவதன் மூலமாகவும் அல்லது மக்களுடைய முனைப்பை சீர்குலைப்பது மூலமாகவோ ஆளுநரின் நடவடிக்கைகள் இருந்து விடக் கூடாது என நாங்கள் ஆசைப்படுகிறோம். இது தவறான சமிக்கை வந்து விடக்கூடாது. தவறான புரிதல் ஏற்பட்டு விடக்கூடாது. இடைஞ்சல் செய்யக்கூடாது என்பதுதான் எங்களுடைய அச்சம்.

பாஜக தலைவர் அண்ணாமலை இன்னும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் போல் நடந்து கொள்ளவில்லை. லோக்கல் போலீஸ்காரர் போல்தான் நடந்து கொண்டிருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு, பதவியில் இருக்கும் போது, மத்தியில் ஆட்சி செய்யக்கூடிய, பிரதிநிதியாக இங்கு இருக்கக் கூடியவர், இன்னும் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அது போன்ற கடினமான வார்த்தைகளை அவர் தவிர்ப்பது அவருக்கும் நல்லது, ஜனநாயகத்துக்கும் நல்லது.

சசிகலா தமிழக அளவிலே சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பது என்பது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை. அதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், அதனால் ஏற்படுகின்ற அரசியல் விளைவுகளை பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். அதிமுக கட்சி தொடர்ந்து பலவீனம் ஆகிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுடைய பலவீனத்தை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த இடத்தை அபகரிக்க பார்க்கிறது. அது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

Updated On: 26 Oct 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  2. அரசியல்
    மோடிக்கு ஓட்டு சேகரிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அலுவலக பதற்றமா? மன அழுத்தத்தை சமாளிக்க 3 உணவுகள்
  4. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  5. சேலம்
    மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  6. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்