/* */

போக்குவரத்து ஓய்வூதியர்களின் பஞ்சபடி வழக்கில் அரசுமேல்முறையீடு:ஏஐடியுசி கண்டனம்

2015-ஆண்டிலிருந்து ஓய்வு பெற்றோர்களுக்கு பஞ்சபடி உயர்வை சட்டவிரோதமாக நிதி நெருக்கடி என காரணம் கூறி நிறுத்தப்பட்டது

HIGHLIGHTS

போக்குவரத்து ஓய்வூதியர்களின் பஞ்சபடி வழக்கில்  அரசுமேல்முறையீடு:ஏஐடியுசி கண்டனம்
X

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் தொழிற்சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் துணைத் தலைவர் அ.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களின் பஞ்சபடி உயர்வு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததற்கு ஏஐடியூசி கண்டனம் தெரிவித்துள்ளது.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் தொழிற்சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் துணைத் தலைவர் அ.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

மாநில குழு முடிவுகள் பற்றியும், ஓய்வூதியர் பிரச்னைகள் தீர்வு காணப்படாத நிலை குறித்தும் சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன் விளக்கி பேசினார். நடைபெற்ற பணிகள் குறித்து சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாதுரை பேசினார். கூட்டத்தில் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர் எம்.வெங்கடபிரசாத், நிர்வாகிகள் கே.சுந்தர பாண்டியன், எஸ்.மனோகரன், அ.இருதயராஜ், ரெஜினால்டு ரவீந்திரன், டி.தங்கராசு, எஸ்.ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்ட விதிகளின்படி, அரசு பணியாளர்களுக்கு பஞ்சபடி உயரும் போது, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் பஞ்சபடியை உயர்த்தி வழங்க வேண்டும்.

ஆனால், 2015-ஆண்டிலிருந்து, அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசு, ஓய்வு பெற்றோர்களுக்கு பஞ்சபடி உயர்வை சட்டவிரோதமாக -- நிதி நெருக்கடி என காரணம் கூறி நிறுத்தியது. திமுக தேர்தல் கால வாக்குறுதியில் போக்குவரத்து ஓய்வூதியர்களின் பிரச்னைகளை ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்த்து வைப்பேன் என்றும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துவேன் என்று வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்தது

ஆட்சிக்கு வந்து, ஒன்றரை ஆண்டாகியும், தி.மு.க அரசு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஏஐடியூசி உள்ளிட்ட ஒய்வூதியர்களின் சங்கங்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை. 14வது சம்பள ஒப்பந்தத்ததில் தீர்வு வரும் என எதிர்பார்த்தும், ஏமாற்றமே ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள பஞ்சப்படி உயர்வு பிரச்னையில் முதலமைச்சர் பின்னர் நல்ல முடிவாக அறிவிப்பார் என தெரிவித்தார். பேச்சுவார்த்தை முடிந்து மூன்று மாதகாலத்திற்கு மேலாகியும் முதலமைச்சர் ஓய்வூதியர்களின் பஞ்சப்படி உயர்வு குறித்து இதுநாள் வரை எதுவும் அறிவிக்காததால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஓய்வூதியர்களின் பல்வேறு அமைப்புகளும், அதிகாரிகளின் ஓய்வூதியர்களின் அமைப்புகளும் உயர்நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை அமர்வுகளில் போட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.உயர்நீதி மன்ற சென்னை அமர்வில் ஒரு வழக்கில், இரு மாதங்களில், பஞ்சபடியை உயர்த்தி தரவேண்டும் எனவும், அதன் விவரத்தை நீதிமன்றத்தில் 25.11.2022 அன்று தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு பஞ்சபடியை உயர்த்தாமல் இருமாதங்கள் இருந்து விட்டு, உயர்நீதி மன்றத்தில், மீண்டும் அவகாசம் கேட்டது. மறுக்கபட்ட நிலையில், சில மணிநேரத்தில், மேல் முறையீடு செய்து, முந்தைய உத்திரவிற்கு நான்கு வார காலத்திற்கு தடை ஆணை 25.11.2022 அன்று பெற்றது. இத்தகைய தடையால் 86,000 ஓய்வூதியர்களின் எதிர்பார்ப்பில் அரசு துரோகமிழைத்துள்ளது. பஞ்சபடி உயர்வு கொடுக்க அரசிற்கு மாதம் சுமார் ரூ60.கோடி நிதி ஒதுக்க வேண்டும், எத்தனையோ திட்டங்களுக்கு நூற்றுகணக்காண கோடிகள், ஆயிரம் கோடிகள் நிதி ஒதுக்கும் அரசிற்கு இந்த தொகை ஒன்றும் பெரிதல்ல,

ஓய்வூதியர்கள் கேட்பது, மானியமோ, பிச்சையோ அல்ல. சட்டப்படி அரசு கொடுக்க வேண்டியது. கொடுத்தாக வேண்டியதாகும். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடையும். மேல்முறையீடும் பெற்றதற்கு ஏஐடியூசி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களையும், சமூக நீதி கோட்பாடுகளையும் அமல்படுத்தி, அகில இந்திய போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு விருதுகள் பெற்று அரசிற்கு பெருமை சேர்த்து,இரவு - பகல் பாராது, கண்விழித்து அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து ஓய்வு பெற்ற போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி தீர்ப்பு வழக்கில் தடை உத்தரவு மற்றும் மேல்முறையீடு சென்றதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பஞ்சப்படி உயர்வுக்காக காத்திருக்கும் 86,000 ம் போக்குவரத்து ஓய்வூதியர்களின் எதிர்பார்ப்பினை தமிழ்நாடு முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படுகிறது, கடந்த 2020 மே மாதம் முதல் பணியில் இறந்தவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், ஓய்வு பெற்றவர்கள் பணப்பலன்கள் இரண்டரை வருட காலமாகியும் வழங்கப்படவில்லை. உடனடியாக ஓய்வு கால பணப்பலன்களை வழங்கிட தமிழ்நாடு அரசு மற்றும்கழக நிர்வாகங்களை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

Updated On: 3 Dec 2022 2:30 PM GMT

Related News