/* */

பாழடைந்து கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு தங்கும் விடுதி அறைகள்

குற்றாலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதி அறைகள் பயனற்ற நிலையில் உள்ளன.

HIGHLIGHTS

பாழடைந்து கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு தங்கும் விடுதி அறைகள்
X

 சிதளம் அடைந்த அரசு தங்கும் விடுதி.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது தென்காசி மாவட்டம். இங்கு ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளது. அதேபோல் மூலிகை வனங்களும் அதிகமாக உள்ளது. மேலும் ஐந்தருவி, சிற்றருவி, குற்றாலம் பிரதான அருவி, புலி அருவி, பழைய குற்றாலம், குளிக்க அனுமதி இல்லாத வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செண்பகாதேவி அருவி, தேனருவி என பல்வேறு அருவிகள் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவநிலை மாதங்கள் ஆகும். இந்தக் கால் நிலைகளில் இப்பகுதிகளில் மெல்லிய சாரல் காற்றுடன் கூடிய மழை பெய்யும். அதேபோல் இங்குள்ள அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் கொட்டும்.

இந்த இயற்கை கொடுத்த அருட்கொடையை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மூலம் குற்றாலம் மற்றும் தென்காசி சுற்றுவட்டார பகுதி மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வருவாய் ஈட்டுகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்க குற்றாலம் பேரூராட்சி மூலம் 1964 இல் கலைவாணர் கலையரங்கம் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து தென்காசி செல்லும் சாலையில் 1966 தென்காசி சாலை தங்கும் விடுதி 25 அறைகளுடன் கட்டப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்தது. அதேபோல் 1968-ல் தனித்தனி காட்டேஜ் ஆக நான்கும், 1972 இல் 14 காட்டேஜ்களும், 1983- ல் இரண்டடுக்கு கொண்ட நான்கு காட்டேஜ்களும், அதே ஆண்டு பேரறிவு சாலை தங்கும் விடுதியில் 9 விடுதி அறைகளும், 1986 - ல் 25 அறைகள் கொண்ட மல்லிகை தங்கும் விடுதியும், அதே ஆண்டு அருவி இல்லமும், 1991 ரோஜா தங்கம் விடுதியில் 24 அறைகளும் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதி அறைகள் உள்ளது.

ஆனால் தற்போது இந்த அறையின் நிலைகள் மிகவும் கவலைக்கிடமாகவும் பரிதாபமாகவும் பயனற்ற நிலையில் உள்ளது. சுற்றுலா பயணிகள் தங்க முடியாத மிகவும் மோசமான இடிந்த சூழ்நிலையில் காணப்படுகிறது.

பழுதடைந்து, பயனற்ற நிலையில் இருக்கும் இந்த தங்கும் விடுதிகள் அனைத்தையும் இடித்துவிட்டு புதிய தங்கும் விடுதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது தற்போது உள்ள தங்கும் விடுதிகளில் ரோஜா தங்கும் விடுதி, மற்றும் தென்காசி சாலையில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் சில இடங்கள் தென்காசி மாவட்ட காவல் ஆயுதப்படை பிரிவு பயன்படுத்தி வருகிறது.

அதேபோல் பேரருவி அருகே உள்ள தங்கும் விடுதிகள் தற்போது பராமரிப்பு பணிகள் முடிவு பெற்றுள்ளது. குற்றாலம் பேருந்து நிலைய முதல் தளத்தில் ஏழு அறைகள் பராமரிப்பு பணிகள் முடிந்துள்ளது. சத்திரம் என்று அழைக்கக்கூடிய 22 அறைகள் கொண்ட பகுதி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள அனைத்து கட்டிடங்களையும் இடிப்பதற்கான ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் அந்தப் பணிகள் துவங்கும். அதன்பின்னர் புதிய கட்டிடங்கள் கட்ட ஒப்பந்த பள்ளி கோரப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்படும். மேலும் மிகவும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தென்காசி சாலை தங்கும் விடுதி இடிப்பதற்கு உரிய அனுமதி கிடைக்கவில்லை என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களில் குற்றால சீசன் தொடங்க உள்ள நிலையில் இந்த பொலிந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் அவ்வாறு கட்டும் பொழுது அரசுக்கு உரிய வருவாய் கிடைக்கும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 1 April 2023 8:59 AM GMT

Related News