/* */

அரசின் உதவிக்காக காத்து இருக்கும் மாற்றுத்திறனாளி சர்வதேச விளையாட்டு வீராங்கனை

தென்காசியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சர்வதேச விளையாட்டு வீராங்கனை அரசின் உதவிக்காக காத்து இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரசின் உதவிக்காக காத்து இருக்கும் மாற்றுத்திறனாளி சர்வதேச விளையாட்டு வீராங்கனை
X

பதக்கங்களுடன் கனகலெட்சுமி 

சாதித்துக் காட்டிய டீ விற்கும் தொழிலாளியின் மகளான சர்வதேச மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை அரசின் உதவியை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்.

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் என்ற துரையப்பா. இவர் தனது இருசக்கர வாகனத்தில் தென்காசி சுற்றுவட்டார பகுதியில் டீ விற்பனை செய்து வருகிறார்.

இவருக்கு கனகலட்சுமி (25) சிற்றருள், மணிகண்டன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் கனலட்சுமி மாற்றுத் திறனாளி ஆவார். இவர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அருகில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பயின்று வந்தார். அதன்பின்பு அமர்சேவா சங்கத்தில் பயின்று வந்தார்.

பின்னர் அங்கு அவருக்கு மாற்று திறனாளிக்கான கூடைப்பந்து விளையாடும் போட்டி, மற்றும் மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டுகள் குறித்து தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அமர்சேவா சங்கத்தின் மூலம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் சென்னை சென்று பல பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் சென்னையில் ராயப்பேட்டையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி காப்பகத்தில் பணி கிடைத்தது. அங்கு வேலை செய்து கொண்டு மேலும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். 2017 முதல் மாற்றுத்திறனாளிக்கான கூடைப்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை மற்றும் பதக்கங்களை வென்றுள்ளார்.

மகாராஷ்டிரா, டெல்லி, ஹைதராபாத், சட்டீஸ்கர், ஈரோடு ஆகிய பகுதியில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் 6 பதக்கங்களை வென்றுள்ளார். அதேபோன்று கோவை, ஈரோடு, வேலூர், குடியாத்தம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு ஆறு பதக்கங்களை வென்றுள்ளார்.

தாய்லாந்தில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு பயிற்சிகள் பெற்றார். சமீபத்தில் நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட ஒரே ஒரு விளையாட்டு வீராங்கனை இவர் மட்டும்தான்.

இவ்வாறு பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட வெற்றி வாகை சூடிய மாற்றுத்திறனாளி தற்போது வரையிலும் ஏழ்மையில் தான் உள்ளார். இவருக்கு அனைத்து வகையிலும் உறுதியாக இருந்த அவரது தாயார் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் இவரை பராமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.

ஏழ்மை நிலையில் உள்ளதால் அவரது சகோதரர்கள் இருவரும் கூலி வேலைக்கு சென்று தங்களையும் சகோதரி குடும்பத்தையும் காத்து வருகின்றனர்.

சில நேரங்களில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள நன்கொடையாளர்கள் கிடைக்காவிட்டால் இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவர்களை போட்டிக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளி வீராங்கனை அரசின் உதவியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை அரசிடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. ஏற்கனவே தமிழக முதல்வர் தென்காசி வந்த பொழுது அவரை சந்தித்தும் மனு அளித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் வெளி உலகத்திற்கு வர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள திறமைகளை வெளி கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பாரா ஒலிம்பிக் போன்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த பலர் பங்கேற்க முடியும் என்று மாற்றுத்திறனாளி கனகலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 25 Jan 2023 6:38 AM GMT

Related News