/* */

சிவாலய கோபுரத்தில் 800 சிலைகள்.

காசியில் இறந்தால்தான் முக்தி. தென்காசியிலோ பிறந்தால்,இருந்தால்,இறந்தால்,தரிசித்தால் முக்தி,800statues,Shivatemple,tower.

HIGHLIGHTS

சிவாலய கோபுரத்தில் 800 சிலைகள்.
X

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் கோபுரம்.

இந்தியாவில் புகழ்பெற்ற புனிதத்தலமாக விளங்குவது காசி. ஆனால், அதைவிட புனிதமாக கருதப்படும் தலமொன்று தமிழகத்தில் உள்ளது. அது தென்காசி. காசியில் இறந்தால் தான் முக்தி. தென்காசியிலோ பிறந்தால், இருந்தால், இறந்தால் அத்தலத்தை தரிசித்தால் முக்தி என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.


கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தல விருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயம்.

முக்கட்சோதி தென்காசி முன்னோன் கதைமிக்க வேதவியாசன் விரித்தததை தக்கவாய் தமிழால் சொலச் சண்பகச்களிற்றின் கழல் பணிந்து ஏத்துவாம். என்று தொடங்கி செண்பக விநாயகரை வணங்கி தல புராணத்தை உகம்மை சன்னதியில் அரங்கேற்றியிருக்கிறார்.

அழகிய சிற்றம்பலக் கவிராயர். இது ஏறத்தாழ 1770 பாடல்களையும் 30 பாடலங்களையும் கொண்டது. தலபுராணத்தில் தென்காசிக்கு சச்சிதானந்தபுரம், முத்துத்தாண்டவநல்லூர், ஆனந்தகூத்தனூர், சைவமூதூர், தென்புலியூர் செண்பக பொழில், சிவமணவூர் பலாலிங்கபாடி எனப் பல பெயர்கள் உள்ளன என்று குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

குற்றால மலைச்சாரலில் அமைந்துள்ள தென்காசி காசி விஸ்வநதார் ஆலயம். விந்தன்கோட்டையை தலைநகரமாக கொண்டு ஆண்ட பராக்கிரம பாண்டியனால் கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அவன் இங்கு கோயில் கட்டியதற்கு பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.


தவ வலிமையால் ஆகாய மார்க்கமாக செல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தான். மன்னன் பராக்கிரம பாண்டியன், தினமும் விடியற்கலையில் காசி நாகருக்கு சென்று விஸ்வநாதரை தரிசித்துவிட்டு வான் வழியே கோட்டைக்கு திரும்புவான். ஒரு நாள் அரசியையும் அழைத்து கொண்டு காசிக்கு சென்றான். திரும்புவதற்காக காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றையும் எடுத்து வந்தான். வழியில் அரசி உடல்நல பாதிப்புக்குள்ளாக இருவரும் ஒரு சோலையில் இறங்கி ஓய்வெடுத்தனர்.

மூன்று நாட்களுக்கு பிறகு அங்கிருந்து கிளம்பும்போது தாங்கள் கொண்டு வந்த சிவலிங்கத்தை வைத்த இடத்திலிருந்து எடுக்க முயல, லிங்கமோ தரையோடு ஒட்டிக்கொண்டு நகர மறுத்தது. அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து அத்தலத்திற்கு சிவகாசி என பெயரிட்டு விட்டு கோட்டைக்கு திரும்பினார்.

தென்காசியில் அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்தோடுஉறங்கினான் மன்னன். அன்றிரவு சிவபெருமான் அவன் கனவில் தோன்றி கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எழும்பு விசை முடியும் இடத்தில் ஒரு சிவலிங்கம் இருக்கும். அங்கு கோயில் எழுப்புவாயாக என்று கூறினார்.

கண் விழித்த மன்னன் எறும்பு வரிசையை பின் தொடர்ந்தான் அது செண்பகதோட்டத்தில் போய் நின்றது. மனம் மகிழ்ந்த மன்னனால் அங்கு எழுப்பபடட்டது தான் தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயம்.

1990ம் ஆண்டு புதியதாக கட்டப்பட்ட ஒன்பது நிலை ராஜகோபுரம் கோயிலுக்கு மிகப்பெரிய கண்பீரத்தை தருகிறது.178 அடி உயரமுடைய கோபுரத்தின் உச்சியில் 11 செப்புக்கலசங்கள் உள்ளன. கோயிலுக்கு முடி சூட்டி நிற்பது போல காணப்படும் இந்த கலசங்கள் ஒவ்வொன்றும் 110 கிலோ எடை கொண்டவை. கோபுரத்தை பஞ்சவர்ணம் தீட்டப்பெற்ற 800 சிலைகள் அலங்கரிப்பது கண் கொள்ளாக்காட்சி.

கோபுரத்தின் அடிப்பகுதியிலிருந்து உச்சிக்கு செல்வதற்கு வசதியாக கோபுரத்தின் உட்பகுதியில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் வழியாக சென்று ஒன்பாதம் நிலையிலிருக்கும் சுற்றுப்பாதையில் வலம் வருவது, வானத்தை வலம் வருவது போன்ற இனிய அனுபவமாகும். அப்போது அழகான தென்காசி ஊரையும், சுற்றியுள்ள வயல்கள், மரங்கள் குற்றால அருவி, திருமலைக்கோயில் என பல அற்புதக் காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.

இரண்டு பெரிய யானைகள், பெரும் தேர் ஒன்றை இழுத்து செல்வது போல் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் வடக்கு பகுதியில் மகிஷாசுரமர்த்தினி மங்கையரின் மாங்கல்யம் காக்கும் தாயாக அருள்கிறாள். அவளை வணங்கி முகப்பு மண்டபத்திற்கு செல்லலாம்.


இங்கு பெரிய பெரிய தூண்களில் சிற்பங்கள் வடிவக்கப்பட்டுள்ளன. இவை கண்ணையும், கருத்தையும் கொள்ளை கொள்ளும் கவின்மிக்க படைப்புகள். அடுத்துள்ள நந்தி மண்படத்தில் நந்தியம் பெருமான், பெருமிதத்தோடு காட்சி தருகிறார். அங்குள்ள இரண்டு தூண்களில் இரண்டு அழகிய பெண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த அற்புத சிலைகளை தமிழ் அணங்குகள் என்று கூறுகின்றனர்.

அதேபோல் ஏராளமான சிற்பச் சிறப்புகளை கொண்ட மணி மண்டபத்தையும் மகா மண்டபத்தையும் கடந்து கருவறை முன் கைக்கூப்பி நிற்கிறோம். காசியில் உள்ள லிங்கத்தை போன்று கருணை வடிவோடு காட்சி தரும் மூலவர் காசி விஸ்வநாதர், வாடி வரும் மக்களையும், தேடி வரும் பக்தர்களையும் காத்து நிற்கிறார். சுயம்பு மூர்த்தம், நாரதர், அகத்தியர், இந்திரன், மிருகண்டு முனிவர், வாலி ஆகியோர் இவரை வழிபட்டுள்ளனர். காசிவிஸ்வநாதரை வழிபடுவோருக்கு பதினாறு பேறுகளும் கிட்டுமாம். ரிக்வேதபெருமான் என்று போற்றப்படும் இவரை வணங்கி நிற்கும் பராக்கிரம பாண்டியனையும், வடக்கு பகுதியில் தெற்குநோக்கி நின்றாடும் நடராஜபெருமானையும் வழிபடுகிறோம்.

பிராகார வலம் வரும்போது, சுரதேவர், நால்வர், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, கன்னிவிநாயகர், மகாலட்சுமி, முருகப்பெருமான், சனிபகவான், காரைக்கால் அம்மையார், வியாக்ரபாதர், பதஞ்சலி, நடைராஜர், சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். வடக்கு பிராகாரத்தில் காசிக்கிணறு அமைக்கப்பெற்றுள்ளது. இக்கிணற்றில் கங்கை எப்போதும் சுரந்து கொண்டே இருக்குமாம். அடுத்து, வல்லப விநாயகரையும் முருகனையும் வணங்கி அம்மன் சன்னதிக்கு செல்லும்போது பராக்கிரம பாண்டியன், அம்மனை கரம் கூப்பி வழிப்படும் சிற்பத்தையும் காணலாம்.

அம்மன் சன்னதிக்குள் அழகே வடிவெடுத்த உலகம்மன் பத்மபீடத்தில் நின்று நம் நெஞ்சையெல்லாம் நெகிழ்விக்கிறாள். இவள் குறித்தும் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

இந்தக்கோயில் அமைவதற்கு முன், செண்பக வனத்திலிருந்து அருள்பாலித்து கொண்டிருந்த காசிவிஸ்வநாதரை மன்னன் குலசேகர பாண்டியன் குழந்தைப்பேறு வேண்டி வழிபட்டு வந்தான். வேண்டுதலுக்கு ஏற்ப உலகம்மையே அவனுக்கு மகளாக பிறந்தாள். அவளுக்கு குழல்வாய்மொழி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். உரிய பருவம் வந்ததும் அவளையே காசிவிஸ்வநாதர் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் நடந்த இடம், அருகில் உள்ள குலசேகரநாதர் கோயில். குலசேகரபாண்டியனுக்கு உலகநாத பாண்டியன் என்ற பெயரும் உண்டு. அவனது பேரனே தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலை கட்டிய பராக்கிரம பாண்டியன்.

உலகம்மன் சன்னதியில் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் இரவு ஏழு மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெறும். அம்மன் சன்னதிக்கும் சுவாமி சன்னதிக்கும் நடுவில் பாலமுருகன் சன்னதி உள்ளது. இங்கு பஞ்ச பாண்டவர்கள் சிலை, கர்ணன் சிலை என கலை நுணுக்கம் மிகுந்த சிலைகள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கோயிலுக்கு வடகிழக்கே கோயிலை சார்ந்த தெப்பக்குளம் உள்ளது. இங்கு தான் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா நடைபெறும் இக்குளத்திற்கு விஸ்வநாதப்பேரி ஏரியிலிருந்தும் சிவலப்பேரி ஏரியிலிருந்தும் தண்ணீர் வருகிறது. இவற்றை அமைத்தவனும் பராக்கிரம பாண்டியனே.

இரண்டு வீரபத்திரர்கள், இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழணங்குகள், செண்பகமரம், பலாமரம் ஆகிய இரண்டு தல மரங்கள், திருமால், காளிதேவிரதி, மன்மதன் சிற்பங்கள் என பல விஷயங்கள் இத்தலத்திற்கு தனிப்பெருமை சேர்க்கின்றன.




கடவுள் ஆசிபெறுவதோடு கலை எழிலையும் ரசித்து வர விரும்பினால் நீங்கள் உடனே சென்று வரவேண்டிய தலம் இது என்பது உறுதி.

தென்காசி மாவட்டம், தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் ரயில், பேருந்து நிலையங்களுக்கு மிக அருகில் உள்ளது.


Updated On: 20 May 2021 2:27 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  2. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  5. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்