/* */

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும் : முதல்வர் வைத்த 3 கோரிக்கை

பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும்.-முதலமைச்சர் ஸ்டாலின்

HIGHLIGHTS

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும் :  முதல்வர் வைத்த 3 கோரிக்கை
X

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நீதிமன்றக் கட்டட திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது "பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-

"நம்முடைய உச்ச நீதிமன்றத்தினுடைய தலைமை நீதியரசர் அவர்கள் பொறுப்பேற்று ஓர் ஆண்டு இன்றோடு நிறைவு பெறக்கூடிய வகையில், உங்களோடு சேர்ந்து நானும் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவருக்கு இன்று ஓர் ஆண்டு முடிவடைகிறது. எனக்கு அடுத்த மாதம் 7ஆம் தேதி ஓர் ஆண்டு முடிவடையவிருக்கிறது.

தமிழ்நாட்டில் எனது தலைமையில் அரசு பொறுப்பேற்ற பிறகு, உயர்நீதிமன்றத்தில் நான் பங்கு பெறக்கூடிய முதல் விழா இந்த விழா. அப்படிப்பட்ட இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

சட்டத்தின் ஆட்சியை, சமூகநீதியின் ஆட்சியை, நீதிநெறிமுறைகளையும், விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றும் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உறுதியோடு, தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம். அத்தகைய வழிமுறையே எந்நாளும் எங்களை வழிநடத்தும் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்திருப்பது, உள்ளபடியே பெருமைக்குரிய வகையில் அமைந்திருக்கிறது. அதுவும் அவரோடு நானும் இந்த விழாவில் பங்கேற்பதில் நான் உள்ளபடியே பெருமையாகக் கருதுகிறேன்.

சட்டத்தின் குரலாக மட்டுமல்ல, மக்களின் குரலாகவும் பலநேரங்களில் ஒலிக்கக் கூடியவராக நம்முடைய உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலத்தில் பொன்னாவரம் என்ற கிராமத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து இன்றைய நாள் இந்தியாவின் உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசராக அவர் உயர்ந்து நிற்கக் காரணம், இந்திய மக்களின் மனசாட்சியின் குரலாக அவர் இருக்கின்ற காரணம் தான். அதுதான் அவரது தீர்ப்புகளிலும், தலைமை நீதியரசர் என்ற முறையில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர் ஆற்றக்கூடிய உரைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்ட நீதியரசரான இவர், தற்போது நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெற்றவராக அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்றும் மக்கள் மன்றத்தின் விருப்பங்களை, உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய மன்றங்களாக செயல்பட வேண்டும். நமது மாண்பமை தலைமை நீதியரசர் அவர்கள் அப்படித்தான் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை என்னால் எடுத்துக் கூற முடியும்.

'அனைத்து சட்டங்களும் நீதிமுறை சார்ந்த லட்சியங்களால் உறுதிசெய்யப்பட வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கும் மாண்பமை உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் அவர்கள் இந்த விழாவுக்கு வந்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல், இங்கே நம்முடைய சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் அவர்களும் நீதித்துறைக்குச் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, அங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கக்கூடியவர்களாக நீதியரசர் மாண்பமை ராமசுப்பிரமணியம் அவர்களும், நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய மாண்பமை நீதிமன்றங்களின் நீதியரசர்கள் வீற்றிருக்கும் இந்த அவையிலே உரையாற்றுவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

நாகரிக சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், மறுமலர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்பிற்கும், அவர்களது உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்குவதற்கும், சுதந்திரமாக செயல்படும் நீதித்துறை தேவை என்பதை நமது அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அதன்படி தமிழ்நாடு அரசும் செயல்பட்டு வருகிறது.

அனைத்து மக்களுக்கும் விரைவில் நீதி கிடைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் இந்த அரசு செய்து வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் சார்நிலை நீதிமன்றங்களுக்கு 64 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர், சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 3 வணிகவியல் நீதிமன்றங்கள் (Commercial Courts), உரிமையியல் நீதிபதி (Civil Judge) நிலையில் அமைப்பதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டது.

அது மட்டுமல்ல, 3 வணிகவியல் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதி நிலையில் அமைப்பதற்கும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதோடு, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் புதியதாக சார்பு நீதிமன்றங்கள் (Sub-courts) அமைக்கவும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (Additional District Courts) அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்திற்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் கீழமை நீதிமன்றங்களை படிப்படியாக சொந்தக் கட்டடங்களுக்கு மாற்றுவதற்கும் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது.

காரைக்குடியில் ஒரு சட்டக்கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி பல்வேறு முன்னெடுப்புகளை நீதித்துறைக்கு தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

நீதித்துறையின் உயிரோட்டமாக விளங்கும் வழக்கறிஞர்களின் நலன் காப்பதிலும் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, வழக்கறிஞர்களின் கோரிக்கையான தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி மூலம் வழங்கப்படும் சேம நல நிதியானது ரூபாய் 7 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த சுமார் 450 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட 20 கோடி ரூபாய் தொகையினை மாநில அரசு விரைவில் வழங்கும்.

இந்த நேரத்தில் இன்னொரு நல்ல செய்தியினை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். சட்டமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான கடந்த 14-4-2022 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் இயங்கிவரும் பல்வேறு நீதிமன்றங்களை ஒரு புதிய 9 மாடி கட்டடத்தில் அமைக்கக்கூடிய வகையில் 20 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னையின் முக்கிய பகுதியில் நீதித்துறையின் உட்கட்டமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நீதிமன்றங்களை அமைக்கும் வண்ணம் கடந்த 20-4-2022 அன்று 4.24 ஏக்கர் நிலம் நீதித்துறைக்கு இந்த அரசு வழங்கி உத்திரவிட்டுள்ளது. அதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கட்டடம் அமைந்தால் நீதித்துறை உட்கட்டமைப்புக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கான தேவை பூர்த்தி ஆகும் என்பதில் ஐயம் இல்லை.

இந்தத் தருணத்தில், நீதித் துறையே முழுமையாக இங்கு வந்து வீற்றிருக்கும் இந்த மேடையில் மாநிலத்தின் சார்பாக சில கோரிக்கைகளை வைக்க நான் விரும்புகின்றேன்.

உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

தமிழ் மொழி உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும்.

ஆகிய மூன்று கோரிக்கைகளை இங்கு வருகை புரிந்துள்ள மாண்பமை உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் அவர்களுக்கு முன்பாக நம் அனைவரின் சார்பாக நான் வைத்திருக்கின்றேன். நம் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் அவர்களும், தமிழ்நாட்டிலிருந்து டெல்லி சென்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்களாக செயலாற்றும் மாண்பமை நீதியரசர்களும் அதற்குத் துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நீதியரசர்கள் அதனை நிச்சயம் நிறைவேற்றித் தருவார்கள் என்று நான் நம்புகின்றேன். சட்டத்தின் ஆட்சியாக, சமூகநீதி ஆட்சியாக, நீதிநெறிமுறை கொண்ட ஆட்சியாக தமிழ்நாட்டு ஆட்சி செயல்பட்டு வருகிறது. இத்தகைய ஆட்சியில், நீதித்துறையினரின் கோரிக்கைகள் உடனுக்குடன் எந்தவிதத் தாமதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதற்கு ஒரே காரணம், மக்களுக்கான நீதியே மகத்தானது என்பதோடு, கடைக்கோடி குடிமகனுக்கும் நீதி தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற அடித்தளத்தில் செயல்பட்டு வருபவர்கள் நாங்கள். இத்தகைய நெறிமுறைகளே எங்களை வழிநடத்துகிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Updated On: 23 April 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  2. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  3. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  4. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  5. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  6. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  7. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  8. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  10. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!