பஞ்.தலைவருக்கு போட்டியிட்ட பெண் வேட்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்
கலவை அடுத்த நாகலேரி பஞ்சாயத்து தலைவருக்குப் போட்டியிட்ட பெண் வேட்பாளர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
HIGHLIGHTS

மாரடைப்பால் உயிரிழந்த வேட்பாளர் இந்திராணி.
இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த நாகலேரி, திமிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட பஞ்சாய்த்து ஆகும். தற்போது மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சித்தேர்தல் காரணமாக நாகலேரி பஞ்சாய்த்து தலைவருக்கான பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவ்வூரைச் சேர்ந்த இந்திராணி (57) என்பவர் மனுதாக்கல் செய்தார். இவர் கலவையில் உள்ள குயின் மேரிஸ் பள்ளியில் தலைமையசிரியராக பணியாற்றி வந்தார்.
அவருடன் ஆதிலஷ்மி,மங்கை தேர்தலில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தனர். மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சின்னங்களைப்பெற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேளையில், இந்திராணி கால்வலி காரணமாக சிகிச்சைக்கு வேலூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட வேளையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் இந்திராணி மரணமடைந்தார்.
இதனால் நாகலேரி கிராம மக்கள் பெரும் சோகமடைந்தனர். மேலும் இறந்தவர் பஞ்சாய்த்து தேர்தலில் போட்டியிட்டவர் என்பதால் தேர்தல் நிறுத்தம் செய்ய வாய்ப்புள்ளதாக திமிரி வட்டார வளர்ச்சி அலுவலரும், வட்டார தேர்தல் நடத்தும் அலுவலரான வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.