/* */

நவ.12 -ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டமுகாம்

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்ட வரும் முன் காப்போம் திட்டம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் புத்துயிர் பெற்றது

HIGHLIGHTS

நவ.12 -ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டமுகாம்
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டம், ஏ.மாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 'கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்" மருத்துவ முகாம் 12.11.2022 அன்று நடைபெறவுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியால் தொடங்கப்பட்ட 'வரும் முன் காப்போம்' திட்டம் 10 ஆண்டுகளுக்கு பின்னர், 'கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்' என்ற பெயரில் புத்துயிர் பெற்றுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை சேலம் மாவட்டம், வாழப்பாடியில் கடந்த ஆண்டு தொடக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டுமென்பதற்காக, வரும் முன் காப்போம் திட்டம், கடந்த திமுக ஆட்சியில் 2006ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் இதன் மூலம் பயனடைந்தனர். அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடரப்படவில்லை. எளிய மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில், வருமுன் காப்போம் என்ற திட்டத்தை 2006-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் பரிசோதனையின் மூலம், ஆரம்ப கட்டத்திலேயே நோய்கள் அடையாளம் காணப்பட்டு, அதற்கான உரிய சிகிச்சை வழங்கி பொதுமக்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், அத்திட்டம் 'கலைஞரின் வருமுன் காப்போம்' என்ற பெயரில், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு, 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. அதாவது ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் என, 385 வட்டாரங்கள் மற்றும் 20 மாநகராட்சிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை பெருமாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

இந்த முகாம்களில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குடல் நோய் மருத்துவர், குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் சித்த மருத்துவர் என 15 சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள். பொதுமக்களை பரிசோதித்து உடலில் என்ன பிரச்னை இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தால் உடனடியாக பரிந்துரைக்கப்படும்.இந்த முகாமில், சர்க்கரை நோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் கண்டறியப்பட்டால், மக்களை தேடி மருத்துவத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, 'கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்" மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-2023ஆம் நிதியாண்டில் 39 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம், கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு நேரில் சென்று மருத்துவ வல்லுநர் குழுவினர்களால் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதாகும். பல்வேறு விதமான நோய்களுக்கு வரும்முன் காப்போம் அணுகுமுறையை மக்களிடையே ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களுக்கு இலவச பன்முனை மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் வழங்கப்படுகிறது.

இம்முகாம்களில் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினரால் பொதுமக்களுக்கு குழந்தை நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மற்றும் இந்திய மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், 'கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்" 12.11.2022 அன்று புதுக்கோட்டை வட்டாரத்தில், யு.மாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Nov 2022 2:30 PM GMT

Related News