/* */

சுகாதாரத்துறை சார்பில் ரூ.2.13 கோடியில் கட்டிடங்கள்: அமைச்சர் திறப்பு

புதுக்கோட்டையில் இயங்கி வந்த வட்டார அரசு மருத்துவமனை மீண்டும் புதுப்பொலிவுடன் அதே இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்

HIGHLIGHTS

சுகாதாரத்துறை  சார்பில் ரூ.2.13 கோடியில் கட்டிடங்கள்: அமைச்சர்  திறப்பு
X

ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு தாய்சேய் ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதுக்கோட்டை மாவட்டத்தில்; பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில்மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ரூ.2.13 கோடி செலவில் 9 மருத்துவ கட்டிடங்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (24.11.2022) திறந்து வைத்தார்.

பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆதனக்கோட்டையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள, ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடமும், கொடும்பாளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்பு கட்டிடமும் மற்றும் கணபதிபுரம், எஸ்.செட்டியபட்டி, சம்மட்டிவிடுதி, வரப்பூர், பெருங்கலூர், ஆதங்குடி, தேன்கனியூர் உள்ளிட்ட 7 இடங்களில் தலா ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்களும் என மொத்தம் ரூ.2.13 கோடி செலவில் 9 மருத்துவ கட்டிடங்கள் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் புதுக்கோட்டையில் இயங்கி வந்த வட்டார அரசு மருத்துவமனை மீண்டும் புதுப்பொலிவுடன் அதே இடத்தில் இயங்குவதற்கு உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 90 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 99,690 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாள்முதல் தமிழகத்திற்கு 25 ஆரம்ப சுகாதார நிலையமும் மற்றும் 25 நகர்ப்புற சுகாதார நிலையமும் பெற்றுத் தந்துள்ளார்கள். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தலா ரூ.25 இலட்சம் வீதம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கான கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் காமராஜபுரத்தில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்படவுள்ளது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.69.06 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் நவீன உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. ரூ.46 கோடி மதிப்பீட்டில் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்துதல் பணிகளும், ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறன் கண்டறிவதற்காக நவீன உபகரணங்களும், ரூ.5.26 இலட்சம் மதிப்பீட்டில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் சிகிச்சை மையங்களில் விபத்து பதிவேற்றம் செய்வதற்கான மென்பொருளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டமானது கோவிட் தடுப்பூசி செலுத்திய பணிகளில் 101 சதவீதம் செலுத்தப்பட்டு மாநில சராசரியை விட கூடுதலாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டு தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டம் முதல்நிலையில் இருந்து வருகிறது. தற்கொலை எண்ணங்களை தவிர்க்கும் வகையில் மருந்துக் கடைகளில் எலி விசம் மருந்தினை வெளிப்படையாக விற்பனை செய்யவோ, தனிநபர் கேட்கும் போது வழங்குவதோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட தகவலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரி மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் மருத்துவத்துறையில் தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய வாழ்வின் ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் .

அதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளை 10 நபர்களுக்கும், கண்ணொளிக் காப்போம் திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளை 1334 நபர்களுக்கு வழங்கும் பொருட்டு 10 நபர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கு தாய்சேய் ஊட்டச்சத்துப் பெட்டகங்களை 200 நபர்களுக்கு வழங்கும் பொருட்டு 10 நபர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

மேலும் வீரடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகைதரும் நோயாளிகள் அனைவருக்கும் தகுந்த சிகிச்சைகள் வழங்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சி.செல்வவிநாயகம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, இணை இயக்குநர் ஊரக நலப் பணிகள் மரு.ராமு, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், புதுக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் பி.சின்னையா, பொதுப்பணித்துறை (கட்டடம்) செயற்பொறியாளர் சுகுமாறன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) மரு.ச.இராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.கலைவாணி (அறந்தாங்கி), வட்டார மருத்துவ அலுவலர் மரு.பொன்.சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Updated On: 24 Nov 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி