/* */

சம்பா நெல் சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு : விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை

தற்பொழுது நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் தண்டு துளைப்பான் ஆங்காங்கே காணப்படுகிறது.

HIGHLIGHTS

சம்பா நெல் சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு : விவசாயிகளுக்கு  வேளாண்துறை ஆலோசனை
X

நெற்பயிரை தாக்கும் அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு  வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது

சம்பா நெல் சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு குறித்து வேளாண்மை ஆலோசனை தெரிவித்துள்ளது.

தற்பொழுது நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் தண்டு துளைப்பான் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட வேளாண் இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தண்டு துளைப்பான்:

குருத்துப்பூச்சி எனப்படும் தண்டு துளைப்பானின் தாக்குதலால் இளம்பயிரில் நடுக்குருத்துவாடிக் காய்ந்துவிடும். கதிர் பிடிக்கும் தருணத்தில் தாக்குதல் ஏற்படின் மணி பால் பிடிக்காமல் சாவியாகி வெண்கதிர்களாக மாறி மகசூல் பாதிப்படைகிறது. இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட நாற்றுகளை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இடுதல் வேண்டும்.

முதிர்ந்த நாற்றுகளை நடும்போது நுனியைக் கிள்ளிவிட்டு நடுவதனால் குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்களை அழித்துவிடலாம். விளக்குப்பொறியினை மாலை 6.30 மணிமுதல் இரவு 10.00 மணிவரை ஒளிரவிட்டுக் குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம்.

மேலும் அதிக அளவில் குருத்துப்பூச்சியின் தாக்குதல் இருந்தால், ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4ஜி 7.5 கிலோ மண்ணில் இடலாம். அல்லது குளோரான்டிரானிலிபுரோல் 24 எஸ்.சி 40 மி.லி., புளுபென்டையமைடு 39.45 ஈசி 30 மி.லி. இவற்றுள் ஏதேனும் ஒரு மருந்தினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

குலைநோயின் அறிகுறிகள்:

மேலும், நாற்றங்காலில் தொடங்கி அனைத்து வளர்ச்சிப் பருவங்களிலும் குலைநோய் நெற்பயிரைத் தாக்குகிறது. குறிப்பாக சம்பா பருவத்தில் குலைநோய் தாக்குதல் அதிகமாக இருப்பதனால் விவசாயிகள் இது குறித்து கண்காணித்து வர கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன் அறிகுறிகள், இலைகளின் மேல் வெண்ணிறத்திலிருந்து சாம்பல் நிற மையப் பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன்கூடிய கண் வடிவப் புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்றுசேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.

இந்நோய் தீவிரமாகத் தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது. நெற்பயிரின் கழுத்துப் பகுதியில் இந்நோய் தாக்கும்போது கறுப்பு நிறமாக மாறிக் கதிர்மணிகள் சுருங்கியும், கதிர்கள் உடைந்தும் தொங்கும். இந்நிலையில் இது 'கழுத்துக் குலைநோய்" எனப்படும். இந்நோய் நெற்பயிரின் கணுக்களில் தாக்கும்போது அவை கறுப்பு நிறமாக மாறி உடைந்துவிடும் நிலையானது 'கணுக் குலைநோய்" எனப்படும்.

குலைநோய் மேலாண்மை முறைகள்:

நோயற்ற பயிரிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும். நடவு வயலில் நோயற்ற நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். வயலிலும் வரப்பிலும் உள்ள களைகளை அகற்றிட வேண்டும்.விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எதிர் உயிர்ப் பூஞ்சணக்கொல்லி அல்லது இரண்டு கிராம் கார்பன்டாசிம் அல்லது டிரைசைக்ளோசோல் இரசாயனப் பூஞ்சணக்கொல்லி மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்து கட்டுப்படுத்திடலாம்.

இந்நோய்த் தாக்குதல் அதிகமாகும்போது ஒரு ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 டபுள்யூபி ஏக்கருக்கு 120 கிராம் அல்லது டெபுகோனசோல் 25.9 ஈசி ஏக்கருக்கு 300 மி.லி. அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்சி ஏக்கருக்கு 200 மி.லி. ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்; சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் குருத்துப்பூச்சி மற்றும் குலைநோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தி உயர்விளைச்சல் பெற்றிடுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்; (பொ) மெ.சக்திவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 16 Oct 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...