/* */

பெண்கள் இல்லையென்றால் இந்த சமூகம் இல்லை: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேச்சு

படிப்பு என்பது ஆணின் பண்பாட்டுத்தளத்தில் அவர்களுக்கான மேன்மைத்தனமாகவே பார்க்கப்படுகிறது

HIGHLIGHTS

பெண்கள் இல்லையென்றால் இந்த சமூகம் இல்லை: முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேச்சு
X

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் பேசிய திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி

பெண்கள் இல்லை என்றார் இந்தச்சமூகம் இல்லை திண்டுக்கல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பாலபாரதி.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், திங்கள்கிழமை பிற்பகலில் நடந்த அமர்வில் பங்கேற்று மேலும் அவா் பேசியது:பெண் குழந்தைகளை சிறந்த மனைவியாக சிறந்த சகோதரியாக பயிற்சி கொடுக்கும் நிலையம் குடும்பம் என தமுஎகச மாநில துணைத்தலைவர் திரைக்கலைஞர் ரோஹிணி கூறியது சரியான கருத்து.

பெண்கள் எந்தத்துறையில் இருந்தாலும் அங்கு ஆணாதிக்கம் தலை தூக்கியே நிற்கிறது. படிப்பு என்பது ஆணின் பண்பாட்டுத்தளத்தில் அவர்களுக்கான மேன்மைத்தனமாகவே பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை அரசு இன்னும் தரவில்லை. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீதம் இன்னும் எட்டாக்கனியாகவே நீடிக்கிறது. நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மொத்த எண்ணிக்கையில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 7 சதவிகிதம்தான்.

ஒரு ஆணுக்கு கல்வி கிடைத்தால் அது அவனுடனனே முடிந்து போகும். ஆனால் பெண்ணுக்கு கல்வி கிடைத்தால் அந்தக்குடும்பமே பயன்பெறும். பெண்களுக்கு போராட்ட உணர்வைக் கொடுத்தது கல்விதான். 1939 -ல் நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த காந்திஜி, பட்டப்படிப்பை முடித்தை 12 பெண்களுக்கு பட்டங்களை வழங்கினார்.எல்லா இடத்திலும் எப்போதும் ஒரு பெண்ணாகவே உணா்ந்து வாழ வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு மட்டுமே இருக்கி றது. சமூக வலைதளங்களில் ஏதாவதொரு கருத்தை பெண் பதிவிட்டுவிட்டால், அத்தனை கேவலமான சொற்களைக் கொண்டு அந்தப் பெண்ணைத் தூற்றி, வசை பாடித்தீா்ப்பதை பார்க்கிறோம்..

அரசுப் பேருந்துகளில் இலவசப்பயணம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், பேருந்துகளில் ஏறும் பெண்களை ஓட்டுநரும், நடத்துநரும் எப்படியெல்லாம் பாா்க்கிறாா்கள். இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. பெண்கள் சமூகம் இன்னமும் இன்னல்களில் உழன்று கொண்டுதான் இருக்கிறது. தொலைக்காட்சித் தொடர்களில் காட்டப்படும் பெண்களின் கதைகள் கற்பனையானவை, உண்மையான பெண்களின் கதை தெருவில்தான் இருக்கிறது.

அரசு வேலைவாய்ப்பில் பெண்கள் கடுமையாகப் போட்டியிடுகின்றனர். அண்மையில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 66 இடங்களில் 57 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், புதுக்கோட்டை மாணவி உள்பட பலரும் காவல்துறை, வருவாய்த்துறையில் பணியில் சேரவுள்ளனர். இது தமிழகப் பெண்களுக்கு பெருமை தரும் விஷயம். வாழ்க்கையில் மல்லுக்கட்டி அடிபட்ட குடும்பத்திலிருந்து கல்வி பெற்று இன்று உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.எனவே, வீட்டில், பொதுவெளியில் , சமூக அமைப்புகளில், பணியிடங்களில் பெண்களை உயா்வாக பாா்க்க வேண்டாம்; சமமாகவாவது பார்க்க வேண்டும். பெண் இல்லை என்றால் இந்த சமூகம் இல்லை என்றாா் பாலபாரதி.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.கே. லில்லி கிரேஸ், கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியின் முதல்வா் பா. புவனேஸ்வரி, வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் ஆலோசகா் அஞ்சலி தேவி தங்கம் மூா்த்தி, அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக கவிஞா் மு. கீதா வரவேற்றாா். நிறைவில், சி. ஷோபா நன்றி கூறினாா். த. ரேவதி தொகுத்து வழங்கினாா்.

Updated On: 2 Aug 2022 7:15 AM GMT

Related News