/* */

ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு ரூ. 1000; தமிழக அரசு திடீர் ஆலோசனை

ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கு பதிலாக 1,000 ரூபாய் வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

HIGHLIGHTS

ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைக்கு ரூ. 1000; தமிழக அரசு திடீர் ஆலோசனை
X

ரேஷன் கடைகளில், பொங்கல் பண்டிகைக்கு ரூ. 1000 வழங்குவது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. (கோப்பு படம்)

தமிழகத்தில், தைப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். மேலும், பண்டிகை காலத்தில் மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில், ரேஷன் கடைகள் மூலம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும் அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும். அதிமுக ஆட்சி காலத்தில், 2500 ரூபாய் வரை ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில், மக்களுக்கு கிடைத்த இந்த தொகை, அவர்களுக்கு பேருதவியாக இருந்தது.

ஆனால், கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு,பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பணம் தராதது, மக்களை அதிருப்தியடைய வைத்தது. இதே போல், திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல், மக்களை ஏமாற்ற உள்ளதாக, எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தது.

இவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த மளிகைப் பொருட்கள், தரமற்றதாக இருந்ததாக குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட அதிமுக - பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், திமுக அரசை கடுமையாக குற்றம் சாட்டியது. இதன் தொடர்ச்சியாக, பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும் நடவடிக்கை பாய்ந்தது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கலாமா என்பது குறித்து அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

பொங்கல் பரிசுத்தொகுப்பில், மளிகை பொருட்கள் தரத்தில் அதிக கவனம் செலுத்தினாலும், புகார்கள் எழ அதிக வாய்ப்பு உள்ளது. கடைகளில் பொருட்களை வைப்பது, ஒரே தவணையில் அனைத்து பொருட்கள் வழங்குவது சிரமம்; ரேஷன் ஊழியர்களுக்கும் கூடுதல் சுமை என, பல பிரச்னைகள் உள்ளது. இதனால், அதிக பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பிற்கு பதில், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வரும் 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற, மக்களவைத் தேர்தல் வருவதால், மக்களுக்கு பணம் வழங்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 13 Nov 2022 7:37 AM GMT

Related News