/* */

Paravai saranalayam-தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்..! தெரிஞ்சுக்கங்க..!

பறவைகள் மீது அதீத ஆர்வம் உடையவர்களுக்கு தமிழ்நாட்டில் எங்கெல்லாம் சரணாலயங்கள் உள்ளன? எப்போது அங்கு போகலாம் என்பதை அறியலாம் வாங்க.

HIGHLIGHTS

Paravai saranalayam-தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்..! தெரிஞ்சுக்கங்க..!
X

Paravai saranalayam-தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்.(கோப்பு படம்)

Paravai saranalayam

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்

தமிழ்நாட்டில் 13 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன‌. நீர்நிலைகளில் உள்ள பறவைகளைப் பாதுகாக்க பறவைகள் அதிகம் தங்கும் பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்து அவற்றை பாதுகாத்து வருகிறது.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பறவைகள் சரணாலயங்கள் பகுதிகளுக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து பறவைகள் வந்து மீண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்புகின்றன.

Paravai saranalayam

பாயின்ட் கலிமேர், வேடந்தாங்கல் மற்றும் புலிகாட் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சரணாலயங்களும் பறவைகள் கூடு கட்டி வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கவை.

கூந்தன்குளம் மற்றும் கரைவெட்டி சரணாலயங்கள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த வாத்துகள் வாழும் இடமாக உள்ளது. வேடந்தாங்கல் போன்ற சரணாலயங்கள் விவசாய நிலப்பரப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளன. பறவைகள் அங்குள்ள வயல்களில் உணவுகளைத்தேடி உண்டு பகல் பொழுதைக் கழித்து, மாலை நேரத்தில் ஏரிக்குத் திரும்பி வந்து தங்கும்.

இந்தியாவின் கடலோர ஈரநிலங்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட 223 வகையான பறவைகளில், அதிக எண்ணிக்கையிலான இனங்கள் கிழக்கு கடற்கரையிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஃபால்கோனிஃபார்ம்ஸ் மற்றும் சிகோனிஃபார்ம்ஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து சரத்ரிஃபார்ம்ஸ் வரிசை ஆதிக்கம் அதிகமாக இருந்தது. 31 அழிந்து வரும் பறவை இனங்கள் கடலோர ஈரநிலங்களில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பறவை சமூகங்கள் பற்றிய எதிர்கால ஆராய்ச்சிக்காக அதிக முன்னுரிமை பாதுகாப்புடன் கடலோர மற்றும் கடல் பகுதிகளை பாதுகாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

Paravai saranalayam

பறவைகள் சரணாலயங்கள்

பழவேற்காடு

பழவேற்காடு ஏரி

இச்சரணாலயம் சென்னைக்கு அருகில் 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு- ஆந்திரக் கடற்கரையை ஒட்டி 481 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. இதில் 153 சதுர கி.மீ தமிழ்நாட்டைச் சார்ந்தது.

இவ்வேரி நான்கு பக்கமும் கரைகளைக் கொண்டிருந்தாலும் இதன் தெற்கு பகுதியில் சுமார் 200 மீ அகலத்தில் சிறிய முகப்பினைக் கொண்டு வங்காள விரிகுடாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள 2-வது மிகப் பெரிய உவர்நீர்க்குளம் ஆகும். இது 800-2000 மி.மீ மழைப்பொழிவினையும், 14 டிகிரி – 33 டிகிரி வரை வெப்பநிலையையும் பெறுகிறது.

இங்கு நன்னீரும், கடல் நீரும் கலந்து காணப்படுகிறது. இங்கு 160 வகை மீன்கள், 25 வகை புழுக்கள், 12 வகை இறால்கள், 100 வகை பறவையினங்கள் காணப்படுகின்றன. பூநாரைகள், உள்ளான்கள்,பட்டைத் தலை வாத்துக்கள், பவளக்காலிகள், நெட்டைக் காலிகள், பலவித வாத்துகள், கொக்குகள், கரண்டிவாயான்கள், மீன்கொத்திகள், பருந்துகள்,நாரைகள், கொக்குகள் ஆகியவை காணப்படுகின்றன.

இச்சரணாலயத்தைப் பார்வையிட நவம்பர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலம் ஏற்றதாகும்.

Paravai saranalayam

வேடந்தாங்கல்

வேடந்தாங்கல்

இச்சரணாலயம் சென்னையிலிருந்து 82 கி.மீ தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது சிறிய, மிகப்பழமையான சரணாலயம் ஆகும். தனக்கென தனிபட்ட வரலாற்றினையும் கொண்டுள்ளது.

உள்ளுர் மக்கள் இப்பகுதிக்கு வரும் பறவைகளை பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளனர். ஏனெனில் பறவைகள் இடும் எச்சம் கலந்த நீரில் நைட்ரஜன் சத்து மிகுந்து இருந்தது. இவற்றை விவசாயத்திற்கு பயன்படுத்தும் போது அவை இயற்கை உரமாக இருந்ததுடன் விளைச்சலையும் அதிகப்படுத்தின.

1798-ல் இவ்விடத்தில் சுமார் 30 ஹெக்டேர் பரப்பில் பறவைகளை உள்ளுர் மக்கள் பாதுகாத்தனர். 30000 பறவையினங்களை ஒவ்வொரு சீசனிலும் இங்கு காணலாம்.

மழைகாலங்களில் இந்நீர்நிலைகளில் மரங்கள் பாதி மூழ்கி நிலையில் காணப்படுகிறது. அவற்றில் கூடுகள் கட்டி வாழும் பறவைகளைக் காணும் போது அவை தண்ணீரில் பச்சைத் தீவு போல் காட்சியளிக்கிறது. கனடா, சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா போன்ற இடங்களிலிருந்து பறவைகள் வருகின்றன. இங்கு வரும் பறவைகளில் நீர்காகங்கள், நீர்க்கோழிகள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இச்சரணாலயத்தைப் பார்வையிட நவம்பர் முதல் மார்ச் வரை உள்ள காலம் ஏற்றதாகும். எனினும் ஜனவரி மாதத்தில் இங்கு அதிக அளவு பறவைகளைக் காண முடியும்.

Paravai saranalayam

கரிக்கிலி

கரிக்கிலி

இச்சரணாலயம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தம் தாலுகாவில் உள்ளது. சென்னையிலிருந்து சுமார் 86 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 61.21 ஹெக்டேர் ஆகும். இங்கு பறவைகள் இடும் எச்சம் கலந்த நீரினால் விளைச்சலும் அதிகப்படியாக உள்ளது.

இங்கு செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை பறவைகள் காணப்படுகின்றன. இங்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் வாத்துகள், ஊசிவால் வாத்துகள், தட்டைவாயன், முக்குளிப்பான், புள்ளிமூக்கு வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக் கொக்கு, சின்னக் கொக்கு, தேன் சிட்டு, ஆந்தைகள், மீன்கொத்திகள் ஆகியவை காணப்படுகின்றன.

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதங்களில் பறவைகளை காண்பதற்கு ஏற்ற காலங்கள் ஆகும்.

Paravai saranalayam

காரைவெட்டி

காரைவெட்டி

இச்சரணாலயம் அரியலூர் மாவட்டத்தில் அரியலூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்விடம் திருச்சியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது 454 ஹெக்டேர் பரப்பில் சுமார் 90 வகையான நீர்ப்பறவையினங்களையும், 188 வகையான பறவையினங்களையும் கொண்டுள்ளது. இங்கு அக்டோபர் முதல் மே வரை பறவையினங்கள் காணப்படுகின்றன.

இங்கு 800-2000 மி.மீ வரை மழைபொழிவும், 14 டிகிரி முதல் 33 டிகிரி வரை வெப்பநிலையும் நிலவுகிறது. இங்கு பட்டைத்தலை வாத்து, செங்கால் நாரை, கூழைக்கடா, விரால் அடிப்பான், பொரி வல்லூறு, ஆளிப்பருந்து, சேற்றுப்பருந்து, பூனைப்பருந்து போன்ற பறவையினங்களைக் காணலாம்.

இச்சரணாலயத்தைப் பார்வையிட டிசம்பர், ஜனவரி ஏற்ற மாதங்களாகும்.

Paravai saranalayam

உதயமார்த்தாண்டபுரம்

உதயமார்த்தாண்டபுரம்

இச்சரணாலயம் திருவாரூர் மாவட்டத்தில் 45 ஹெக்டேர் பரப்பில் திருவாரூரிலிருந்து 65 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 68 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. 1999-ல் இவ்விடம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீரே இச்சரணாலயத்திற்கு ஆதாரமாகும்.

இங்கு இடம் பெயரும் பறவைகளான சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, இராக் கொக்கு ஆகியவை வருகை தருகின்றன.

இங்கு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பறவைகள் வருகை தருகின்றன. இச்சரணாலயத்தைப் பார்வையிட நவம்பர், டிசம்பர் ஏற்ற மாதங்களாகும்.

Paravai saranalayam

வடுவூர்

வடுவூர்

இச்சரணாலயம் திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலும், திருச்சியிலிருந்து 75 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. 1999-ல் இவ்விடம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இங்கு 40 விதமான நீர்பறவைகள் வருகை தருகின்றன. மேட்டூர் அணையின் நீரே இச்சரணாலயத்திற்கு ஆதாரமாகும். இங்கு ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை பறவைகள் வருகை தருகின்றன.

வெள்ளை அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நீர்க்காகங்கள், நாரை, கிளுவைகள், ஊசிவால் வாத்து போன்றவை வருகை தருகின்றன. இச்சரணாலயத்தைப் பார்வையிட நவம்பர், டிசம்பர் ஏற்ற மாதங்களாகும்.

Paravai saranalayam

சித்திரங்குடி

சித்திரங்குடி

இச்சரணாலயம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் சுமார் 48 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. 1989-ல் சரணாலாயமா அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இச்சரணாலயம் மீனின் வால் போன்ற அமைப்பில் காணப்படுகிறது.

இவ்விடம் இராமநாதபுரத்திலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு கூழைக்கடா, நத்தை குத்தி நாரை, சின்னக் கொக்கு, பெரிய கொக்கு, குருட்டுக் கொக்கு ஆகியவை காணப்படுகின்றன. இங்கு பறவைகளைக் காண ஜனவரி மாதம் ஏற்றதாகும்.

Paravai saranalayam

கூந்தன்குளம்

கூந்தன்குளம்

இச்சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலியிலிருந்து 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கூந்தன்குளம், காடன்குளம் என இயற்கையாக அமைந்துள்ள நீர்ப்பரப்பில் 129.33 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது.

உள்ளுர் மக்கள் இங்கு வரும் பறவையினங்களை பேணிப் பாதுகாக்கின்றனர். கூடுகளிலிருந்து தவறி விழும் குஞ்சுகளுக்கு முதலுதவி செய்து பறக்கும் வரை பாதுகாத்து பின் பறக்கவிடுகின்றனர். மேலும் இங்கு பறவைகள் இடும் எச்சம் கலந்த நீரினைப் பயன்படுத்தி இவ்வூர் விவசாயிகள் அதிக விளைச்சலைப் பெறுகின்றனர். இங்கு உள்ளுர் மற்றும் புலம்பெயரும் பறவைகள் காணப்படுகின்றன.

பூநாரைகள், பட்டைத் தலை வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, மஞ்சள் மூக்கு வாத்து, செங்கால் நாரை, முக்குளிப்பான், கரண்டி வாயன் என 43 வகைளான பறவைகள் காணப்படுகின்றன.

இச்சரணாலயத்தைக் காண ஜனவரி, பிப்ரவரி ஏற்ற மாதங்களாகும

Paravai saranalayam

வெள்ளோடு

வெள்ளோடு

இச்சரணாலயம் ஈரோடு மாவட்டத்தில் வாடாமுகம் வெள்ளோடு என்ற இடத்தில் 77.185 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இவ்விடம் ஈரோட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது.வடகிழக்;கு பருவமழையின் போது இவ்விடம் நீர் நிரம்பி காணப்படுவதால் அப்போது நிறைய பறவையினங்களைக் காணமுடியும். இங்கு உள்ளுர் மற்றும் புலம் பெயரும் பறவைகள் காணப்படுகின்றன.

மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் என பல்வேறு பறவையினங்களைக் காணலாம்.

இச்சரணாலயத்தைக் காண ஜனவரி, பிப்ரவரி ஏற்ற மாதங்களாகும்.

Paravai saranalayam

மேல்-கீழ் செல்வனுர்

மேல்-கீழ்ச் செல்வனூர்

இச்சரணாலயம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் உள்ள மேல் மற்றும் கீழ் செல்வனூர் கிராமங்களில் 593.08 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. 1998-ல் இவ்விடம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இங்கு காணப்படும் கருவேல மரங்கள் இங்கு வரும் புலம்பெயரும் பறவைகள் கூடுகள் கட்ட நல்ல வாய்பினைத் தருகின்றன. இங்கு கூழைக்கடா, கொக்குகள், நத்தை குத்தி நாரைகள், வெள்ளை அரிவாள் மூக்கன்கள், கரண்டி வாயன்கள் ஆகியவை காணப்படுகின்றன.

இச்சரணாலயத்தைக் காண நவம்பர், டிசம்பர் ஏற்ற மாதங்களாகும்.

Paravai saranalayam

கஞ்சிரன்குளம்

கஞ்சிரன்குளம்

இச்சரணாலயம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள கஞ்சிரன்குளம் என்னும் ஊரில் உள்ளது. இது முதுகுளத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 1989-ல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இவ்விடம் 66.66 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது.

இவ்விடத்தில் 170-க்கும் அதிகமான பறவையினங்கள் உள்ளன. இங்கு காணப்படும் மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சின்னக் கொக்கு, பெரிய கொக்கு ஆகியவை முக்கியமானவையாகும்.

இச்சரணாலயத்தைக் காண நவம்பர், டிசம்பர் ஏற்ற மாதங்களாகும்.

Paravai saranalayam

வேட்டங்குடி

வேட்டங்குடி

இச்சரணாலயம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள வேட்டங்குடி பட்டி மற்றும் பெரிய கொல்லுக்குடி பட்டி கிராமங்களில் 38.4 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இது 1977-ல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் கருவேல மரங்கள் பறவைகளின் புகலிடமாக உள்ளன.

இங்கு புலம் பெயரும் பறவைகளான கரண்டி வாயன்கள், பாம்புத் தாரா, சாம்பல் நாரை, இரவு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், மீன் கொத்திகள், கொண்டைக் குருவிகள், கதிர்க் குருவிகள் போன்றவை காணப்படுகின்றன.

இச்சரணாலயத்தைக் காண நவம்பர், டிசம்பர் ஏற்ற மாதங்களாகும்.

Paravai saranalayam

கோடியக்கரை

கோடியக்கரை

இச்சரணாலயம் நாகபட்டினம் மாவட்டத்தில் 17.26 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. வேளாங்கண்ணியிலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு காணப்படும் சதுப்பு நிலப் பகுதியில் பறவைகளுடன் 150 வகையான தாவர இனங்கள், நரி, புள்ளி மான்களையும் காணலாம்.

வட அரைக்குளத்தைச் சார்ந்த பட்டைத் தலை வாத்து, பூநாரைகள், ஊசி வால் வாத்து, தட்டை வாயன், மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, சின்ன கொக்கு, பெரிய கொக்கு, கூழைக்கடாக்கள் ஆகியவை இங்கு காணப்படுகின்றன.

இச்சரணாலயத்தைக் காண நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஏற்ற மாதங்களாகும். பறவைகளைப் பாதுகாப்போம்; நாம் வாழும் பூமியைப் பாதுகாப்போம்.

Updated On: 4 Oct 2023 7:55 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த