ரூ.15 லட்சம் இழப்பீடு: குஜராத் நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
கோவையை சேர்ந்த வாடிக்கையாளருக்கு, குஜராத் இயந்திர உற்பத்தி நிறுவனம் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
HIGHLIGHTS

பைல் படம்
கோவையை சேர்ந்த வாடிக்கையாளருக்கு, குஜராத் இயந்திர உற்பத்தி நிறுவனம் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, நாமக்கல் நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம், முதாலிபாளையத்தில், இன்ஜினியரிங் கம்பெனி நடத்தி வரும் திருமலைநாதன் என்பவர், கோவையில் உள்ள ஒரு விநியோகஸ்தர் மூலம், குஜராத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஹைட்ராலிக் இயந்திரத்தை கடந்த 2016 மார்ச்சில், ரூ. 13,92,500க்கு வாங்கியுள்ளார். 2016ல் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு அதை விநியோகஸ்தரும், உற்பத்தியாளரும் சரி செய்து கொடுத்தனர். 6 மாதத்தில் அந்த இயந்திரம் முழுமையாக பழுதடைந்துவிட்டது. இது குறித்து தகவல் தெரிவித்தும், இயந்திரத்தின் உற்பத்தியாளர் மற்றும் வினியோகஸ்தர், 6 மாதமாக பழுதை நீக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால், இயந்திரத்தை வாங்கிய திருமலைநாதன், உற்பத்தியாளர் மற்றும் வினியோகஸ்தர் மீது, 2018, ஜூனில் கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
2022ம் ஆண்டு அந்த வழக்கு, விரைவான விசாரணைக்காக, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை முடிந்து, நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரத்னசாமி ஆகியோர் இன்று தீர்ப்பு அளித்தனர்.
அதில், நுகர்வோர் கோர்ட் மூலம் ஆணையராக நியமனம் செய்த இன்ஜினியர் ஒருவர், வழக்கு தாக்கல் செய்தவர் வாங்கிய இயந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், இயந்திர வடிவமைப்பில் உற்பத்தி குறைபாடு உள்ளது. பழுதை நீக்கினாலும் சரி வர செயல்படாது என அறிக்கை அளித்துள்ளார்.
திருமலைநாதன், வினியோகஸ்தரிடம் பணம் செலுத்தி இருந்தாலும், இயந்திரத்தின் உற்பத்தியாளர் நேரடியாக திருமலைநாதனின் நிறுவனத்திற்கு, இயந்திரத்தை வழங்கி அதனை பொருத்திக் கொடுத்துள்ளார். உற்பத்தி குறைபாடு காரணமாக, இயந்திரம் பழுதடைந்ததற்கு வினியோகஸ்தருக்கு பொறுப்பில்லை என, அவர் மீதான புகாரை நுகர்வோர் கோர்ட் தள்ளுபடி செய்கிறது.
இயந்திரத்தில் உற்பத்தி குறைபாடு உள்ளது என்று நிரூபிக்கப்பட்ட நிலையில், உற்பத்தியாளருக்கு வாய்ப்பு வழங்கியும், அவர் நுகர்வோர் கோர்ட்டில் ஆஜராகி, அவரது தரப்பு பதிலை தெரிவிக்க தவறிவிட்டார். இந்த நிலையில், இயந்திரத்தை உற்பத்தி செய்த, குஜராத்தில் உள்ள நிறுவனம், வாடிக்கையாளரான கோவை திருமலைநாதனிடம் உள்ள பழைய இயந்திரத்தை எடுத்துக்கொண்டு, புதிய இயந்திரமும், ரூ. 1 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும்.
இயந்திரத்தின் உற்பத்தியாளர் வழக்கு தாக்கல் செய்தவருக்கு, 2 மாதங்களுக்குள் புதிய இயந்திரமும், இழப்பீடும் வழங்க தவறினால், உற்பத்தியாளர் இயந்திரத்தின் விலை மற்றும் இழப்பீடாக மொத்தம் ரூ. 15 லட்சத்தை, பணம் வழங்கும் வரை, 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.