/* */

பன்றி காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவை இல்லை: நாமக்கல் கலெக்டர்

பன்றி காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவை இல்லை என நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பன்றி காய்ச்சல் குறித்து   அச்சப்படத் தேவை இல்லை: நாமக்கல் கலெக்டர்
X

பன்றிக் காய்ச்சல், பன்றிகளில் இருந்து பன்றிகளுக்கு மட்டுமே பரவும், மற்ற விலங்குகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ பரவாது. அதனால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஒன்றியம், ஆர்.புதுப்பாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட, கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரின் பன்றி பண்ணையில் இருந்து கடந்த மார்ச் 9ம் தேதி 2 பன்றிகள் இறந்தன. அதையடுத்து, இறந்த பன்றிகள், பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி நோய்க் குறியியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பன்றியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், சென்னையில் உள்ள மத்திய கால்நடை மருத்துவ கல்லூரி பல்கலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டடது.

கடந்த மார்ச் 23ம் தேதி அதன்முடிவு பெறப்பட்டது. அந்த ஆய்வில், இறந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் தாக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம், கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில், நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு, பன்றி பண்ணையைச் சுற்றி, ஒரு கி.மீ. தூரத்துக்கு, தீவிர கண்காணிப்பிலும், 9 கி.மீ. தூரத்துக்கு, நோய் பரவல் மற்றும் நோய்த் தன்மை பரவாமல் தடுப்பது குறித்துகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

பன்றி பண்ணையில் ஏற்பட்டுள்ள ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல், நோய் கிளர்ச்சி குறித்து சென்னை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குனர் உத்தரவின்படி, அந்த பண்ணையில் இருந்த 18 பன்றி குட்டிகள், மனிதாபிமான முறையில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் அழிக்கப்பட்டது. தொடர்ந்து, ஒரு ஆண்டுக்கு, இந்த பன்றி காய்ச்சல் குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினரால் பன்றி பண்ணைகள் கண்காணிக்கப்படும். இந்த பன்றிக் காய்ச்சல், பன்றிகளில் இருந்து, பன்றிகளுக்கு மட்டுமே பரவும் தன்மை கொண்டது. இது மற்ற விலங்குகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ பரவாது. அதனால், பொதுமக்கள் யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 31 March 2023 2:48 PM GMT

Related News