நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் பள்ளியில் சேர்க்கை : கொல்லிமலை மாணவர்கள் படையெடுப்பு
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சேர்க்கை பெறுவதற்கு, கொல்லிமலையை சேர்ந்த மலைவாழ் மாணவர்கள், படையெடுத்து வருகின்றனர்.
HIGHLIGHTS

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (பைல் படம்).
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், நாமக்கல் நகரம் மற்றும் கொல்லிமலையில், மாணவர் சேர்க்கை குறித்த கல்வி விழிப்புணர்வு களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
உதவி தலைமையாசிரியர் ஜெகதீசன் தலைமையில் ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர், மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று, பெற்றோர்களை நேரில் சந்தித்து, அரசு பள்ளியில் படித்தால், மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி, கலை அறிவியல் கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் 14 வகையான நலத்திட்டங்கள் குறித்து விளக்கினர். அதன் பயனாக, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொல்லிமலை பகுதியில் இருந்து ஏராளமான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை, நாமக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க படையெடுத்து வருகின்றனர்.
நேற்றும் மாணவர் சேர்க்கை நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பெரியண்ணன், துணை தலைமையாசிரியர் ஜெகதீசன் மற்றும் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இது வரை, 50க்கும் மேற்பட்டோர் இப்பள்ளியில் சேர்க்கை பெற்றுள்ளனர். நேற்று மட்டும், கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட மொத்தம், 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை பெற்றனர்.