/* */

நாமக்கல்-பரமத்தி சாலையில் இடைவெளியின்றி சாலைத் தடுப்பு:பாதிக்கப்படும் மக்கள்

சாலைத் தடுப்பில் போதிய இடைவெளி அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்

HIGHLIGHTS

நாமக்கல்-பரமத்தி  சாலையில் இடைவெளியின்றி சாலைத் தடுப்பு:பாதிக்கப்படும் மக்கள்
X

டிவைடர் (பைல் படம்)

நாமக்கல் - பரமத்தி ரோட்டில் சுமார் அரை கி.மீ தொலைவு வரை இடைவெளியின்றி சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் சாலைத் தடுப்பில் போதிய இடைவெளி அமைக்கக் கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட விசிக செயலாளர் மணிமாறன் தலைமையில் திரளான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் ச.பே. புதூரில் இருந்து வள்ளிபுரம் வரை பரமத்தி பிரதான சாலையின், இருபுறமும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு, புதிதாக நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகள் சுமார் அரை கி.மீ தொலைவு வரை தொடர்ந்து இடைவெளியின்றி அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து வள்ளிபுரம் வரை ரோட்டின் இரு புறமும், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. ஏராளமான மருத்துவமனைகள், கோயில்கள், ஓட்டல்கள், லாரி பட்டறைகள், வர்த்தக நிறுவனங்களும் அமைந்துள்ளன. இடைவெளியின்றி அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளால், அன்றாட தேவைக்காக சாலையைக் கடந்து மறுபுறம் செல்ல வேண்டிய பொதுமக்கள், சுமார் அரை கி.மீ. தொலைவுக்கு மேல் சென்று திரும்பும் சிரம நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சாலையின் இருபுறமும், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது, நெரிசல் ஏற்படுவதன் காரணமாக, அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நேரிடுகின்றன. தற்போது, கோடைகாலம் என்பதால், சுட்டெரிக்கும் வெய்யிலில், மக்கள் நீண்ட தொலைவுக்கு நடந்து சென்று திரும்பி சாலையைக் கடந்து செல்ல முடியாத அவல நிலை உள்ளது. மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, எளிதாக சாலையை கடந்து செல்லும் வகையில், சாலைத் தடுப்புகளில், குறிப்பிட்ட தொலைவுக்குள் கடந்து செல்லும் வகையில் இடைவெளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 28 March 2023 2:45 AM GMT

Related News