நாமக்கல் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகக் கொண்டாட்டம்
நாமக்கல் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
HIGHLIGHTS

நாமக்கல் தினசரி மார்க்கெட் வளாகத்தில் இந்து முன்னணி சார்பில், சிவன் பர்வதியுடன் அமர்ந்த, பிரமாண்டமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏராளமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரசாயணக்கழிவுகள் மற்றும் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் பவுடரைக் கொண்டு விநாயகர் சிலை தயாரிக்க அரசு தடை விதித்துள்ளதால், பெரும்பாலும் களிமண் மற்றும் எளிதில் கரையும் பொருட்களைக் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு அடி உயரம் முதல் சுமார் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆவலுடன் வாங்கிச் சென்று வீடுகளிலும், பொது இடங்களிலும் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த செங்கழநீர் பிள்ளையார் கோயில், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோயில், ச.பே.புதூர் விநாயகர் கோயில், ஏ.எஸ்.பேட்டை முல்லை நகர் விநாயகர் கோவில், கொழந்தான் தெரு விநாயகர் கோயில், மோகனூர் ரோடு முல்லை நகர் செல்வ கணபதி கோயில், ஆசிரியர் காலனி கல்வி கணபதி கோயில், கணேசபுரம் விநாயகர் கோயில், அழகு நகர் சக்திவிநாயகர் கோயில், ராமாபுரம்புதூர் விநாயகர் கோயில், கோட்டை பிள்ளையார் கோயில், ஆஞ்சநேயர் கோயில் முன்புறம் உள்ள விநாயகர் கோயில் உள்ளிட்ட இடங்களில் இன்று விநாயகருக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கொலுக்கட்டை படையிலடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் தங்கக் கவசம், வெள்ளிக்கவசம் உள்ளிட்ட அலங்காரம் செய்யப்பட்டு விநாயகருக்கு மகா தீபாராதணை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பூஜைகளில் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனர்.
நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி சார்பில், மாவட்டம் முழுவதும் 130க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள தினசரி மார்கெட் வளாகத்தில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற சிலை கண் திறப்பு நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், செயலாளர் பொன் வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் தேவி உதயகுமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன் உள்ளிட்ட நிர்வாகிகள், காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை நாமக்கல் நகர தினசரி மார்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.