குமாரபாளையத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொது செயலராக தேர்வு செய்யப்பட்டதும், தீர்ப்பை கொண்டாடும் வகையில் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
HIGHLIGHTS

குமாரபாளையம் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் பள்ளிபாளையம் சாலையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொது செயலராக தேர்வு செய்யப்பட்டதும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்ற தீர்ப்பை கொண்டாடும் வகையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி உத்திரவின்பேரில் பள்ளிபாளையம் நகர, ஒன்றியம் சார்பில் நகர செயலர் வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றிய செயலர் செந்தில் தலைமையில் பேரவை செயலர் சுப்பிரமணி முன்னிலையில் பள்ளிபாளையம் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதே போல் குமாரபாளையம் நகர செயலர் பாலசுப்ரமணி, தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கவுன்சிலர் புருஷோத்தமன் தலைமையில் பள்ளிபாளையம் சாலையில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து, பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதி கே.குமரேஷ்பாபு, மார்ச் 22-ம் தேதி 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தார். ஓபிஎஸ், இபிஎஸ் என இருதரப்பிலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (மார்ச் 28) காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று அவர் உத்தரவிட்டார்.