/* */

சமூக வலைத்தளத்தில் மோதிக்கொள்ளும் அமைச்சர் செந்தில் பாலாஜி- அண்ணாமலை

ரபேல் வாட்ச் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் சமூக வலைத்தளத்தில் மோதுகிறார்கள்.

HIGHLIGHTS

சமூக வலைத்தளத்தில் மோதிக்கொள்ளும் அமைச்சர் செந்தில் பாலாஜி- அண்ணாமலை
X

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை- அமைச்சர் செந்தில் பாலாஜி.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வது உண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன் மின்சார துறையில் வெளியிடப்பட்ட ஒரு மின் ஒப்பந்தம் தொடர்பாக அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு சொல்ல அந்த குற்றச்சாட்டை 24 மணி நேரத்தில் நிரூபிக்கவில்லை என்றால் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன் செந்தில் பாலாஜி மிரட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை சிறை செல்ல தயாராக இருக்கிறேன் என்றார். ஆனால் அண்ணாமலை குற்றச்சாட்டை நிரூபிக்கவும் இல்லை, செந்தில் பாலாஜியும் அண்ணாமலையை கைது செய்ய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. வழக்கம் போல் இதனையும் மக்கள் அப்படியே மறந்து போய்விட்டார்கள்.

இது தான் ரபேல் வாட்ச்.

இப்போது இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் ஒரு சமூக வலைத்தள மோதல் நடந்து வருகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் விலை உயர்ந்த கைக்கடிகாரம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து கூறிய அண்ணாமலை , நான் கையில் கட்டி இருக்கும் வாட்ச் ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டது. மொத்தம் 500 வாட்சுகள் நாட்டில் இருக்கின்றது. நான் அணிந்திருப்பது 149 வது வாட்ச் என்றார்.

இதனை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, "பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரபேல்வாட்சை, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா?கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?" என்று கேள்வியெழுப்பினார்.

இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது வருமாறு- தி.மு.க-வினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்றதற்கு முன்பு, மே மாதம் 2021-ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் என என்னுடைய ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்.

ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது பிரதமர் மோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன். அன்றைய தினம் நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் பொது வெளியில் வெளியிடவுள்ளேன். நான் அறிவித்ததைவிட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டு பிடித்தால், எனது சொத்துகள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் தி.மு.க-வினர் மற்றும் தி.மு.க தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்வீட்டில், தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் மேட் இன் இந்தியாவா? என் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமர்சனத்திற்கு இன்னும் அண்ணாமலையிடம் இருந்து பதில் வரவில்லை.எது எப்படியோ சமூக வலைத்தளங்களில் இவர்களது இந்த சண்டை தான் இப்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Updated On: 19 Dec 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  8. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  10. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...