/* */

மகாராஷ்டிராவுக்கு அல்போன்சா. தமிழ்நாட்டுக்கு மல்கோவா

காலப் பெருவெளியில் கணக்கற்ற வரலாற்றுத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் சுவையானவை ஏராளம். அதில் ஒன்று தான், மாம்பழத்தின் வரலாறு.

HIGHLIGHTS

மகாராஷ்டிராவுக்கு அல்போன்சா. தமிழ்நாட்டுக்கு மல்கோவா
X

அல்போன்சா மாம்பழம் 

சிறந்த நிர்வாகிகள் உணவுப் பிரியர்களாகவும் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு. மாமன்னர் ஜலாலுதீன் அக்பருக்கு விதவிதமான உணவுகளைத் தினமும் உண்பதில் அலாதி பிரியம். இதில் தவறு ஒன்றும் இல்லை. உணவைக்கூட ருசித்து, ரசித்துச் சாப்பிடத் தெரியாதவர், மக்களை எப்படி மகிழ்ச்சியாக ஆட்சி செய்வார்? அதுவும் மாம்பழங்கள் இருந்து விட்டால், மன்னரின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

அரண்மனை மருத்துவர் பதவியில் ஹுசைன் என்பவர் இருந்தார். இவர் மனித மருத்துவம் மட்டுமல்ல, பயிர் மருத்துவமும் அறிந்த கில்லாடி. இதனால், அரண்மனைத் தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தன் கை வண்ணத்தால், புதிய ரகங்களை உருவாக்கி அசத்தினார் ஹுசைன்.

அரசரின் தோட்டத்தில் பல வகையான மாம்பழங்கள் காய்த்துக் குலுங்கின. இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அக்பர், ஹுசைனுக்கு பரிசுப் பொருள்களை அள்ளி வழங்கினார். கூடவே, இன்னொரு பெரிய பரிசையும் அளித்து பெருமைப்படுத்தினார். முதலில் ஆக்ராவுக்கும் பிறகு பீகாருக்கும் ஆளுநராகப் பதவி அளித்து அழகுபார்த்தார் அக்பர்.

அக்பரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் அபுல் ஃபசலின் 'அயினி-அக்பரி' என்ற நூலில், இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. 15-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த போர்த்துக்கீசியர்கள் அப்போது ஆட்சியிலிருந்த முகலாய மன்னர்களுக்கு அணுக்கமாகவே இருந்தார்கள். காரணம் தங்கள், கப்பல் நிறைய கொண்டுவந்து இங்கே இறக்குமதி செய்யும் பொருள்களுக்கும், இங்கிருந்து ஏற்றுமதி செய்து கொண்டு செல்லும் பொருள்களுக்கும் சேதாரம் வரக்கூடாது என்பதால்தான். இவர்கள் இன்றைய கோவா உள்ளிட்ட சில பகுதிகளில் வியாபாரம் செய்யும் உரிமையைப் பெற்றார்கள்.


இந்தியாவில் விளையும் பொருள்களில் போர்த்துக்கீசியர்களின் மனதைக் கொள்ளை அடித்ததில் மாம்பழங்களுக்கு முக்கிய இடம் உண்டு. இவர்கள் மூலமே, உலகம் முழுவதும் மாங்கனிகள் உலா சென்றது. இவர்கள், முதன்முதலில் மாம்பழங்களை உண்டு களித்தது, தமிழ்நாட்டில்தான். ''இங்கு வியாபாரத்துக்கு வந்தபோது, சுவையான மாம்பழங்களைச் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் சுவையில் சொக்கிப் போனவர்கள், இதன் பெயர் என்ன என்று கேட்டுள்ளார்கள். 'மாங்காய் துரை' என்று யாரோ ஒரு விவசாயி சொல்ல, அது போர்த்துக்கீசியர்களுக்கு வாயில் நுழைந்து 'மேங்கோ' (Mango) ஆனது'' என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

அல்போன்சா மாம்பழம் மேல் இருந்த பிரியத்தால், அதைத் தாங்கள் வசித்த கோவா பகுதியிலும் நடவு செய்து வளர்க்கத் தொடங்கினார்கள். உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்தவர்கள் என்பதால், பழங்களுக்கு ஒட்டுக்கட்டும் நுட்பத்தையும் அறிந்திருந்தார்கள். இதன் மூலம் பல விதமான மா ரகங்களை உருவாக்கினார்கள். முகலாயர்களுக்கும் இந்த நுட்பம் தெரியும் என்றாலும், அது அரண்மனையின் ராஜ ரகசியமாகவே இருந்தது. அதைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்த பெருமை, போர்த்துக்கீசியர்களுக்கு உண்டு.

''கோவாவில் பல மா ரகங்களை உருவாக்கியவர்கள், அற்புதமான ருசி கொண்ட ஓர் உன்னதமான மா ரகத்தை உருவாக்கினார்கள். இன்னும் கூடுதல் வியாபார உரிமை பெற இதுவே வாய்ப்பு என்று, கூடை நிறைய அந்த மாம்பழங்களுடன் அக்பர் பாதுஷாவைச் சந்தித்தார்கள். இதற்குப் பெயர் சூட்டுங்கள் என கேட்டுக் கொண்டார்கள்.

அதன் சுவையில் மெய் மறந்தவர், இதற்கு என்ன பெயர் வைப்பது என யோசித்தார். இந்தியாவில் போர்த்துக்கீசிய காலனிகளை நிறுவிய அபோன்சோ டி அல்பெர்குர்கியின் பெயர், அக்பருக்கு நினைவுக்கு வர, 'அபோன்சா' என்று பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தினார். அது காலப்போக்கில் மருவி அல்போன்சா (Alphonso) என்று அழைக்கப்படுகிறது'' என்றும் கோவா பகுதியில் உள்ள மக்கள் கதையாகச் சொல்வது உண்டு.

''மாவில் ஒட்டுக்கட்டும் நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் ஐரோப்பியர்கள் போர்த்துக்கீசியர்கள்தான். இது இந்தியாவில் சில தனித்துவமான மாம்பழங்களை உருவாக்க வழி வகுத்தது. உலகின் சிறந்த மாம்பழமான அல்போன்சா ரகத்தை உருவாக்கியதும் இவர்கள் தாம்'' என்கிறார் புகழ் பெற்ற உணவு வரலாற்றாசிரியர் கே.டி.அச்சாயா.

கோவா மக்களும், மகாராஷ்டிரா மக்களும் அல்போன்சாவைச் செல்லமாக 'அப்பூஸ்' அல்லது 'ஹப்பூஸ்' என்கிறார்கள். இந்த ரகம் கோவாவில் உருவாகியிருந்தாலும், மகாராஷ்டிராவில் உள்ள தேவ்கட் மற்றும் சிந்துதுர்க் பகுதிகள் தான், இந்த ரகம் சிறப்பாக வளர ஏற்ற பகுதிகள். காரணம், இந்த ரகம் நன்றாக காய்ப்புக்கு வர இரவில் 15 டிகிரியும் பகலில் 35 டிகிரி வெப்பநிலையும் தேவை. சுருக்கமாகச் சொன்னால், இரவில் நல்ல குளிரும் பகலில் நல்ல வெயிலும் தேவை. இவை, இந்தப் பகுதிகளில் உண்டு. தனிச்சிறப்புடன் இங்கு விளையும் அல்போன்சா மாம்பழங்களுக்குப் புவிசார் குறியீடும் வாங்கியுள்ளார்கள். ஏன் தெரியுமா?

மும்பை, புனே சந்தைகளில் தேவ்கட், சிந்துதுர்க் மாம்பழம் என்று கூவிக் கூவி விற்பார்கள். இந்தப் பெயரைச் சொன்னாலே, அதிக விலை என்றாலும், போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள். உண்மையில், அவை இந்தப் பகுதிகளில் விளைந்தவையாக இருக்காது. இந்த ஏமாற்றத்தைத் தவிர்க்கவே புவிசார் குறியீடு பெற்றுள்ளார்கள். ஆனாலும், வேறு பகுதியில் விளைந்த மாம்பழங்களை இந்த ஊர்களின் பெயரைச் சொல்லி விற்பனை செய்வது தொடரத்தான் செய்கிறது. அதுதான் அல்போன்சாவின் பெருமை.

உலகின் சிறந்த மாம்பழம் என்றால் அது அல்போன்சாதான் என்று கொண்டாடப்படுகிறது. பல நாடுகள் தேவ்கட், சிந்துதுர்க் அல்போன்சாதான் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கி வருகின்றன. ஏற்றுமதி செய்யப்படும் மா வகைகளில் இதற்குத்தான் முதலிடம். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ரகம், தமிழ்நாட்டில் வளராது. காரணம், அதற்குத் தேவையான இரவு நேர குளிர் நிலை இங்கு இல்லை. ஆனாலும், இந்த ரகத்தைச் சிலர் அறியாமலும், ஏன் வளராது..? எல்லாம் வளரும் என்று அடம்பிடித்து நடவு செய்கிறார்கள். இங்கும் காய்க்கும். ஆனால், சுவையும் மணமும் இருக்காது. விளைச்சலும்கூட சரியாக இருக்காது என்பது மா ஆர்வலர்கள் அறிய வேண்டிய அரிய தகவல்.

''ஆசை ஆசையா அல்போன்சா மரத்தை வளர்த்தேன். ஆனா, நல்லா காய்க்கல. பழத்துக்குள்ள பஞ்சு மாதிரி இருக்கு. நல்ல விலையும் கிடைக்கல. இந்த ரகத்துக்குப் பதிலா பெங்களூரா வச்சிருந்தாலும் வருமானம் கிடைச்சிருக்கும்'' என்று பல விவசாயிகள் கூறுவதை பார்க்கலாம். இந்த அனுபவ மா பாடம், பல்கலைக்கழகங்களின் பாடப்புத்தகங்களில் இருக்க வாய்ப்பில்லை.

கோவா என்ற குட்டி பகுதியை ஆட்சி செய்த போர்த்துக்கீசியர்களே இவ்வளவு செய்திருக்கும்போது, அகண்ட இந்தியாவைக் கட்டி ஆண்ட ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

ஆங்கிலேயர்களும் தங்கள் பெயர் சொல்லும்படி மாம்பழத்திற்கு மரியாதை செய்துள்ளார்கள். ஆம், தமிழ்நாட்டின் மாங்கனி மாவட்டம் என்று அழைக்கப்படும் சேலம் பகுதியில் பல மாந்தோட் டங்களை உருவாக்க உதவியுள்ளார்கள். 'சேலம் மல்கோவா' ரகம், இந்தப் பகுதியில் பரவ துணை நின்றுள்ளார்கள். ஆங்கிலேயர்கள் இவ்வளவு நல்லவர்களா என்று நினைத்து விடாதீர்கள். எல்லாம் சுயநலத்தோடு சேர்ந்த பொது நலம்தான். தங்களின் தேவைக்காவே மாமரத்தை பயிரிடச் சொன்னார்கள். காலப்போக்கில் அது அந்தப் பகுதியின் அடை யாளமாக மாறிப்போனது.

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே சேலம் பகுதியில் மாம்பழ சாகுபடி இருந்து வந்தாலும், அதை மேலும், விரிவுபடுத்தினார்கள். இன்றும்கூட சேலம் மாவட்டம் அயோத்தியாப் பட்டணம் பகுதியில் ஆங்கிலேயர்கள் காலத்தில் நடவு செய்த 120 வயது மாமரம் காய்த்துக்கொண்டு உள்ளதே இதற்குச் சான்று.

தர்மபுரி, கிருஷ்ணகிரியெல்லாம் சேலத்துடன் இணைந்திருந்தபோது தான், மாம்பழத்துக்குச் சேலம் சிறப்பு பெற்றிருந்தது என்று யாராவது சொன்னால், ''இனிக்கும் மணக்கும் மல்கோவா மாம்பழம் என்றால், இன்றைக்கும் அது சேலத்து மாம்பழம் மட்டுமே'' என்று சேலத்துக்காரர்கள் செல்லமாகச் சண்டைக்கு வருவதைப் பார்த்துள்ளேன்.

தேவ்கட், சிந்துதுர்க் பகுதிகளில் விளையும் அல்போன்சா எப்படித் தனித்தன்மை கொண்டதோ, அது போலவே 'சேலம் மல்கோவா'வும் பிற இடங்களில் வளர்ந்தாலும் அந்த இனிய சுவை இருக்காது என்பதுதான், இயற்கை அன்னை சேலம் மண்ணுக்கு அளித்துள்ள கொடை. சேலம் மாம் பழமும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Dec 2022 7:52 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்