/* */

இலங்கைக்கு கடத்தவிருந்த. 4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

ஆந்திரவில் இருந்து போலியான பதிவெண் மூலமாக கடத்திவரப்பட்டு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளனர்

HIGHLIGHTS

இலங்கைக்கு கடத்தவிருந்த. 4 கோடி மதிப்புள்ள   கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது
X

மதுரை காவல் துணை ஆணையர் அரவிந்தன்.

கஞ்சா வேட்டை 4.0 எதிரொலி தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற 4 கோடி மதிப்பிலான 2090கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல். 6பேர் கைது.

ஆந்திர மாநிலத்தில், தொடர்ச்சியாக கஞ்சா கடத்தி வரப்பட்ட அது தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனை, மிகப்பெரிய கும்பல் ஒன்று திட்டமிட்டு கடத்தலில் ஈடுபட்டுவருகிறது.இந்த கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக கொள்முதல் செய்து சிறிய அளவிலான பாக்கெட்டுகள் மூலமாக இளைஞர்களையும், கல்லூரி மாணவர்களையும் குறிவைத்து சமூகவலைதளங்களை பயன்படுத்தியும் விற்பனை செய்துவருகின்றனர்.

இதில், பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நிலையும் அரங்கேறிவருகிறது.இதனை தடுக்கும் விதமாக, கஞ்சாவிற்பனையை தடுக்கும் முயற்சியை காவல்துறை கையில் எடுத்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரிலான நடவடிக்கைகளை மேற் கொண்டுவருகிறது.

அதனடிப்படையில், மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில், மதுரை மாநகரில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மதுரை மாநகர் காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்டு தலைமறைவாக இருந்த ராஜ்குமார் மற்றும் ஜெ.கே என்ற ஜெயக்குமார் ஆகியோர்களை தேடி வந்தனர்.இதனிடையே, மதுரை சிந்தாமணி ரிங்ரோடு வழியாக வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை கீரைத்துறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கருப்பசாமி தலைமையிலான தனிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, மதுரை ரிங் ரோடு சிந்தாமணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த காரினை நிறுத்தி சோதனை செய்த போது அந்த காரின் பின்புறம் 40 கிலோ கஞ்சா கடத்துவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரை ஓட்டிவந்த மதுரை எல்லிஸ்நகரை சேர்ந்த ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ,ராஜ்குமார் தனது கூட்டாளிகளான ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சுகுமாறன், தூத்துக்குடியை சேர்ந்த ராஜா, சுடலைமணி, மகேஸ்குமார் மற்றும் முத்துராஜ் ஆகியோருடன் மதுரை புதூரை சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலம் ஆந்திரா மாநிலம் இராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி போலியான பதிவெண்ணை கொண்ட வண்டியில் கஞ்சாவை கடத்தி வந்த அதனை தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள வேலவன் புதுக்குளம் என்ற கிராமத்தில் ராஜா என்பவரின் பொறுப்பில் உள்ள தோட்டத்தில் உள்ள கட்டிடத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதிலிருந்து 40 கிலோ கஞ்சாவை மதுரைக்கு எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மேற்படி கார், 3 செல்போன்கள், மோடம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள வேலவன் புதுக்குளம் கிராமத்தில் ராஜா என்பவரின் பொறுப்பில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்றனர்.

அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் இருந்த 2ஆயிரம் கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது.இதனை, காவல்துறையினர் கைப்பற்றிபோது அங்கிருந்து தப்பிக்க முயன்ற சுகுமாறன், ராஜா, சுடலைமணி, மகேஸ்குமார்,. முத்துராஜ் ஆகிய 6பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, மதுரையை சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலமாக ஆந்திரா மாநிலம் இராஜமுந்திரியில் இருந்து 4 கோடி மதிப்பில் 2090 கிலோ கஞ்சா வாங்கி வந்து, தூத்துக்குடி ஆரோன் என்பவர் மூலம் கடற்கரை பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும்,மேலும், இந்த கஞ்சாவினை இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கஞ்சா ஏற்றி வைத்திருந்த சரக்குவாகனங்கள், 5 செல்போன்கள் ,25ஆயிரம் ரொக்க பணம் ஆகிவற்றை கைப்பற்றினர்.பின்னர், சுகுமாறனிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து போலியான நம்பர் பிளேட்டை பயன்படுத்தி கஞ்சா ஏற்றி வந்த வாகனத்தை கோச்சடை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறியதையடுத்து அந்த சரக்கு வாகனத்தில் இருந்த 50 கிலோ கஞ்சாவினையும் கைப்பற்றினர்.

இந்த கஞ்சா வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டதோடு, கடத்தி விற்பனைக்கு பயன்படுத்த இருந்த 2090 கிலோ கஞ்சாவையும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 சரக்கு வாகனங்கள், ஒரு கார், 8 செல்போன்கள் மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ-25ஆயிரம் ரூபாய் ஆகியவை கைப்பற்றப்பட்டது.மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான JK என்ற ஜெயக்குமார் மற்றும் ஆரோன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

ஆந்திரவில் இருந்து போலியான பதிவெண் மூலமாக கடத்திவரப்பட்டு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2090கிலோ கஞ்சா கடத்தலை தடுத்து குற்றவாளிகளை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படையினருக்கு காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், துணை ஆணையர் அரவிந்த் ஆகியோர் பாராட்டினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை ஆணையர் அரவிந்த் :கஞ்சாவை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளனர், கஞ்சாவேட்டை 4.0மூலம் தீவிர சோதனை, 4 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்துள ளோம், விரைவில் முக்கிய காரணமான ராஜ்குமார், ஆரோனை கைது. செய்வோம் என்றார்.

Updated On: 11 May 2023 7:30 AM GMT

Related News