/* */

குந்தவை: அழகும் விவேகமும் மட்டுமல்ல, ராஜ தந்திரம் மிக்க சோழ இளவரசி

Kundavai in Ponniyin Selvan-சோழ தேசத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்டவள். சோழ தேசத்தின் நலனுக்காக எதையும் இழக்கத் துணிந்தவள் குந்தவை

HIGHLIGHTS

குந்தவை: அழகும் விவேகமும் மட்டுமல்ல,  ராஜ தந்திரம் மிக்க சோழ இளவரசி
X

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் 

Kundavai in Ponniyin Selvan-பொன்னியின் செல்வன் நாவல்ல பல பெண் கதாபாத்திரங்கள் வலுவாகப் படைக்கப்பட்டிருக்கும். அதில், முக்கியமானது குந்தவை கதாபாத்திரம். ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மரின் சகோதரியான குந்தவை, சோழ நாட்டு மக்களின் இளையபிராட்டியாகக் கொண்டாடப்படுபவர். அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியவர் அதேபோல் அன்பினாலும் அனைவரையும் அரவணைத்தவர்.

யார் இந்த குந்தவை? அவரின் கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் நாவலுக்கு எந்த அளவுக்கு முக்கியம்?

சோழ இளவரசி குந்தவை பொன்னியின் செல்வன் நாவலின் முக்கியமான கதாபாத்திரம் என்றே சொல்லலாம். சோழ அரசுக்கு எதிரான உள்நாட்டுப் பகையை முறியடிக்க தன்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் சிரமேற்கொண்டு செய்பவர். தம்பி அருள்மொழிவர்மனுக்கு ஆபத்து என்று தெரிந்ததும், அவனை பழையாறைக்கு வர ஓலை அனுப்பும் குந்தவை, கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலனுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று முன்கூட்டியே கணித்து அவரது பயணத்தைத் தடுக்க முயற்சிப்பார்.. அதேபோல், சோழ குலத்துக்கு எதிராக நந்தினி செய்யும் சதித் திட்டங்களையும் முறியடிக்க பல முயற்சிகளை எடுப்பார்.

குந்தவை பற்றி கல்கி குறிப்பிடுகையில். "செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்தவள் இளைய பிராட்டி குந்தவை தேவி. அழகில் ரதியையும், அறிவில் கலைமகளையும் அதிர்ஷ்டத்தில் திருமகளையும் ஒத்தவள். சுந்தர சோழ சக்கரவர்த்தி முதல் சோழ நாட்டின் சாதாரண குடிமக்கள் வரையில் அவளைப் போற்றினார்கள். அரண்மனையில் அவள் காலால் இட்டதைத் தலையினால் செய்ய எத்தனையோ பேர் காத்திருந்தார்கள். சிற்றரசர்கள் தங்கள் குலத்தில் வந்த அரசிளங் குமரிகளுக்குக் குந்தவை தேவியின் பணிப்பெண்ணாக இருக்கும் பாக்கியம் கிடைக்காதா என்று ஏங்கினார்கள். பாரத நாட்டில் அந்நாளில் பேரரசர்களாக விளங்கிய பலரின் பட்டத்துக்குரிய அரச குமாரர்கள் இளைய பிராட்டி குந்தவையின் கைப்பிடிக்கும் பாக்கியத்துக்குத் தவம் கிடந்தார்கள்'' என்று கூறியிருப்பார்.

அழகும் விவேகமும் சரி விகிதத்தில் பெற்ற, ராஜ தந்திரம் மிக்க சோழ இளவரசி. இப்படி அறிமுகமாவது தான் அவளுக்குப் பொருத்தமாக இருக்கும். அதன் பின்னரே அவளது பிறப்பும் குலமும் வருவது சிறக்கும். பழங்காலத்தின் மற்ற இளவரசிகளைப் போல, அரசிகளைப் போல அல்ல குந்தவை. இன்னாரது மகள் இன்னாரது மனைவி இந்த தேசத்து ராணிகளுள் ஒருவர் என குந்தவையை வரிசைப்படுத்திவிட முடியாது. குந்தவை அதி வித்தியாசமானவள். தந்தை, தம்பி மற்றும் கணவன் மீது கொண்ட பாசத்தையும் நேசத்தையும் காதலையும் விட சோழ தேசத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்டவள். தீராக் காதல் கொண்டவள். சோழ தேசத்தின் நலனுக்காக எதையும் இழக்கத் துணிந்தவள் குந்தவை.


குந்தவை சுந்தர சோழரின் மகள், ஆதித்த கரிகாலனின் தங்கை, ராஜராஜ சோழனின் தமக்கை, வீரன் வல்லவைரையர் வந்தியத்தேவனின் காதல் மனைவி. இவை அனைத்திற்கும் மேலாக தன்னை தன் சுய அடையாளங்களாலேயே நிறுவிக் கொண்டவள்.

சோழ வம்சத்தில் மூன்று குந்தவைகள் உண்டு. சோழ அரசர்களுள் ஒருவரான அரிஞ்செயச்சோழன் கீழை சாளுக்கிய இளவரசி குந்தவையை மணந்தார். இவரை வீமன் குந்தவை எனக் குறிப்பிடுகிறார்கள். இவரே சோழகுலத்தின் முதல் குந்தவை. அரிஞ்செயச்சோழன் இரண்டாவதாக வைதும்ம அரசகுலத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற இளவரசியையும் மணந்தார். இவர்களுக்குப் பிறந்தவர் தான் சுந்தர சோழர்.

சுந்தரசோழர் தன் பெரிய தாயார் மேல் இருந்த பக்தியும் அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக தனக்குப் பிறந்த மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு மகிழ்ந்தார். சுந்தர சோழரின் மகள் குந்தவைக்கு மந்தாகினி என்ற இன்னோரு பெயரும் உண்டு. இவர் சோழர் குலத்தின் இரண்டாம் குந்தவையாக வருகிறார். இவருக்கு ஆழ்வார் பரந்தகன் குந்தவை பிராட்டியார், வல்லவைரையர் வந்தியதேவர் மாதேவியார், உடையார் பொன்மாளிகையில் துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார் என்று சோழர்களின் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் குறித்து வருகின்றன.

இரண்டாம் குந்தவை அதாவது குந்தவை நாச்சியார் வந்தியத்தேவனை மணம் புரிந்தமைக்கு காதல் ஒரு காரணம் என்றாலும் மற்றொரு முக்கிய காரணம் தன் நாட்டை விட்டு பிற இளவரசிகளைப் போல் புகுந்த நாட்டுக்கு செல்ல கூடாது என்ற வலுவான தீர்மானத்தாலும் தான். தன் இன்னுயிர் நீக்கும் வரை குந்தவை சோழ மண்ணில் தான் வாழ்ந்தாள். மற்ற இளவரசிகளைப் போன்ற கட்டமைக்கப்பட்ட வரையரைக்குள் குந்தவையின் திருமணம் மட்டுமல்ல அவரது வாழ்நாளும் அடங்கவில்லை. அவளது வாழ்க்கை மிகவும் வித்தியாசமானதாகவே இருந்துள்ளது. குந்தவை சுயமாகவும் சுதந்திரமாகவும் இருக்க விரும்பிய பெண். கடைசி வரை அப்படியாக வாழ்ந்தும் காட்டியவர்.

தன் மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலனின் மர்ம மரணம், அதன் பின் அந்த துக்கத்திலேயே உயிர் இழந்த தந்தையின் மரணம், கூடவே உடன்கட்டை ஏறிவிட்ட தாயின் மரணம் போன்றவை குந்தவையின் இள வயதிலேயே சொல்லொண்ணாத் துயரையும் பாரத்தையும் கொடுத்துவிட்டது. மூத்த சகோதரனின் இழப்புக்கு பின் அடுத்த வாரிசான இளைய சகோதரனின் உயிரையாவது காக்க வேண்டும் எனும் பொருட்டு அவர்கள் வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கை எந்த அரசியும், இளவரசியும் சந்தித்திராத ஒன்று. அத்தனை இழப்பையும் ஈடு செய்யும் விதமாக மொத்த அன்பையும் ஈடுபாட்டையும் தன் தம்பி ராஜராஜனுக்காகவும் சோழ மண்ணுக்காகவும் அர்ப்பணித்தவர்.

குந்தவை சந்தித்த அரசியல் சூழ்நிலையும் சுற்றியிருந்த சூழ்ச்சிகளும் அவருக்கு அதிக புத்தி சாதுர்யத்தையும் அரசியல் சாணக்கியத்தனத்தையும் தோற்றுவித்திருக்க வேண்டும். ராஜராஜனை அரியணை ஏற்றியதில் இருந்து அவன் அரசாட்சி காலம் வரை அனைத்திற்கும் பின்புலமாக இருந்து மதியூகத்துடன் செயல்பட்டது குந்தவைதான்.

குந்தவை நாச்சியார் எக்காரணம் கொண்டும் சோழ நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறாள். ஆரம்பத்தில் இருந்தே தம்பியை தன் அரவணைப்பில் வைத்து தன் சொல்படி நடக்குமாறு கட்டுக்குள் வைத்திருக்கிறாள். இதன் காரணம் தன் மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலன் மாபெரும் வீரனாக இருந்தாலும், முன் கோபத்தால் மூர்கத்தனமாக நடக்கும் குணத்தை பெற்றிருந்ததும், முன்யோசனை இன்றி பல காரியங்களில் ஈடுபடுவதுமான செயல்களைக் கண்டு அவள் அஞ்சினாள்.

எல்லைகளை விரிவுபடுத்தினாலும் மாவீரனாக இருந்தாலும் செயலில் நிதானமும் ராஜ தந்திரமும் இல்லாமல் நாடாள்வது மிகக் கடினம் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார். தமயனை இழந்தாள் பின் தந்தையை இழந்தாள் தாயையும் உடனே இழந்தாள். எஞ்சி இருக்கும் தன் இளைய சகோதரன் அருள் மொழியாவது (ராஜராஜன்) தனக்கும் தன் நாட்டுக்கும் மிஞ்ச வேண்டுமே என்ற மாபெரும் கவலையில் மொத்த பொறுப்பையும் தன் தோள்களில் சுமந்து கொண்டாள்.

பிறப்பால் வளர்ப்பால் அரச குடும்பத்தை சேர்ந்த பெண் என்றாலும் நிஜ வாழ்வில் அவள் ஒரு ஆணைப் போலவே ராஜ தந்திரியாக நுட்பம் மிகுந்த மதியூக மந்திரியாக செயல்பட்டவர் குந்தவை நாச்சியார்.

ஆரம்பத்தில் நந்தினியை வெறுக்கும் குந்தவை, ஒரு கட்டத்தில் அவர் எதிர்க்கொண்ட துயரங்களைப் பற்றி தெரிந்துகொண்ட பிறகு அதற்காக வருத்தப்படுவார். எல்லா விஷயங்களிலும் தீர்க்கமாக முடிவெடுக்கும் குந்தவை, தனது சகோதரன் ஆதித்த கரிகாலனின் நண்பனும் சாகச விரும்பியுமான வந்தியத்தேவன் மீது காதல் கொள்கிறார். சோழ குலத்துக்கு தன்னால் எந்தவிதமான அபகீர்த்தியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கும் குந்தவை, சோழ தேசத்தை உயிராக நேசிப்பவள். இதற்காகவே வெளிநாடுகளைச் சேர்ந்த எந்தவொரு அரசனையும் மணந்து விடக் கூடாது என்று முடிவெடுத்திருப்பார். சகோதரன் ஆதித்த கரிகாலன் கொலைப்பழி காதலன் வந்தியத்தேவன் மீது சுமத்தப்பட்டு, பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதும் தீர்க்கமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று யோசித்தவள். செம்பியன் மாதேவி கோயில்களுக்குத் திருப்பணி செய்ததைப் போலவே, சோழ தேசமெங்கும் மருத்துவ சாலைகள் அமைக்கப் பல்வேறு உதவிகளைச் செய்தவள். தந்தை சுந்தர சோழர் உடல்நலமில்லாமல் இருந்ததைப் போல் யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுகூட அவரது எண்ணமாக இருந்திருக்கலாம்.

பழுவேட்டரையர்கள் பாதுகாப்பில் இருப்பதை விரும்பாத குந்தவை, தஞ்சை அரண்மனையைத் தவிர்த்து பழையாறையில் செம்பியன் மாதேவியுடன் வசிக்கிறார். சுதந்திரமாக முடிவுகள் எடுக்க வேண்டும் என்கிற அவரது கதாபாத்திரத்தின் தன்மையை இது காட்டுகிறது. அதேபோல், தமது மகள் மீது அளப்பரிய மரியாதை வைத்திருக்கும் சுந்தர சோழர் மகளின் கருத்துகளுக்கும் உரிய மதிப்பும் கொடுப்பார். சோழ குல வரலாற்றில் இளவரசி குந்தவை அளவுக்குப் புகழ்பெற்றவர்கள் அதற்கு முன்பும், அவருக்குப் பின்பும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ராஜ்யரீதியிலான முடிவுகளிலும் குந்தவை முக்கியமான பங்காற்றுவார். பல இடையூறுகளைக் கடந்து இறுதியில் வந்தியத்தேவனையே குந்தவை மணமுடிப்பார்.

பொன்னியின் செல்வன் கதையில் இரண்டு அழுத்தமான பெண் கதாபாத்திரங்கள். ஒன்று நந்தினி, மற்றொன்று குந்தவை. ஒரே ஒரு வித்தியாசம் குந்தவையின் கதாபாத்திரம் நேர்மறையானது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 April 2024 6:43 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு