இறந்த காஞ்சி ராணுவ வீரரின் தியாகத்தை போற்றும் வகையில் பிரதமரின் நினைவுப்பரிசு
கடந்த 2020 ஆண்டு உயிர் நீத்த ராணுவ வீரர் ஏகாம்பரத்தின் தியாகத்தை போற்றும் விதமாக அவரது மனைவியிடம் நினைவு பரிசு வழங்கினர்
HIGHLIGHTS

உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி ஏ.குமாரியிடம் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி அனுப்பி வைத்த பரிசை வழங்குகிறார் தேசிய மாணவர் படையின் கமாண்டிங் அலுவலர் கர்னல் என்.எஸ்.மெஹரா
சீன எல்லையில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் தியாகத்தை மதித்து அவரைப் போற்றும் வகையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியிருந்த நினைவுப்பரிசு அவரது மனைவியிடம் காஞ்சிபுரத்தில் இன்று வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் அருகே செம்பரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம்(48). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சீன எல்லையில் பணியாற்றி விட்டு அவரது இருப்பிடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்தார்.இவர் தாய் நாட்டுக்காக செய்த தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் விதமாக பாரதப்பிரதமர் நரேந்திரமோடி நினைவுப்பரிசு அனுப்பியிருந்தார்.
இப்பரிசினை அவரது மனைவி ஏ.குமாரியிடம் காஞ்சிபுரம் தேசிய மாணவர் படையின் 3வது பிரிவு கமாண்டிங் அலுவலர் கர்னல் என்.எஸ்.மெஹரா வழங்கினார்.இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க தலைவர் ஜி.ராமசாமி, துணைத் தலைவர் எஸ்.சண்முகம் ஆகியோரும் உடன் இருந்தனர்.