காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயில் நிர்வாக பொறுப்பை ஏற்றது அறங்காவலர் குழு
காஞ்சிபுரத்தில் பழமையான ஸ்ரீ தும்பவனத்தம்மன் ஆலய நிர்வாகத்திற்கு புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு பொறுப்பு ஏற்றனர்.
HIGHLIGHTS

காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோவில் புதிய அறங்காவலர் குழு பதவி ஏற்பு தொடர்பாக ஆவணங்களில் கையெழுத்து பெறப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குபட்ட , சின்ன காஞ்சிபுரம் பகுதியில் தும்பவனம் கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீதும்பவனத்தம்மன் ஆலயம். இந்த கோவிலில் பரம்பரை பரம்பரையாக ஊர் கிராமதாரர் கட்டுப்பாட்டில் நிர்வகித்து வந்து ஆகம விதிப்படி தினமும் அபிஷேகங்கள் பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
அம்மனுக்கு உகந்த மாதங்களான ஆடி, தை போன்ற மாதங்களில் விழாக்களை கிராம நிர்வாகிகளே செய்து வந்த நிலையில் பொதுமக்களின் கட்டுப்பாட்டிலும் வழிபாட்டிலுமே வழிநடத்தி வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கோதண்டம் என்பவர் அறங்காவலராக இருந்து வந்த நிலையில் அவர் பதவி காலம் முடிந்ததால், அவர் பொறுப்பில் இருந்து விலகிய நேரத்தில் எந்தவித அறிவிப்பும் செய்யாமல் சென்று விட்டதால் இந்து சமய அறநிலையத்துறை அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.
அதன்பின் கடந்த எட்டு ஆண்டு காலமாக தும்பவனம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் நகர மன்ற உறுப்பினர் குணசீலன் என்பவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை தனது கட்டுப்பாட்டில் வைத்து பராமரிப்பில் ஈடுபட்டு இருந்தார்.
ஏற்கனவே கோயிலுக்கு இந்து சமய அறநிலைத்துறையால் செயல் அலுவலர் நியமிக்கப்பட்ட போது அவரை பதவி ஏற்க விடாமல் அப்போது அவருக்கு மிரட்டல் விடுத்ததாக காவல்துறையில் வழக்கும் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கூறினார்
இந்நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனைத்து திருக்கோயிலில் அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டு திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி பூஜை நடைபெறும் எனவும் அறிவித்தார்.
அவ்வகையில் இத்திருக்கோயிலுக்கு நிர்வாக அறங்காவலர்களாக விமல்தாஸ், விஜயலட்சுமி மற்றும் சண்முகம் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்டனர்.
கடந்த மாதம் கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவற்றிற்கு பல்வேறு எதிர்ப்புகள் தெரிவித்தும் காவல்துறையின் உதவியுடன் இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
இந்நிலையில் நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவிடம் கோயில் பொருட்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் தியாகராஜன் ஆய்வர் கிருத்திகா மற்றும் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் துளசி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
மேலும் ஆலயத்திற்கு சொந்தமான அம்மனின் விக்ரகங்கள் , பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகளை ஒப்படைக்க முன்னாள் நிர்வாகிகளிடம் கூறிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இறுதியாக இந்து சமய அறநிலையத்துறை கோயில் பூசாரி உதவியுடன் கோவிலில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஆய்வு மேற்கொண்டு நிர்வாக அறங்காவலர் விமல்தாஸிடம் ஒப்படைக்கப்பட்டு அதற்கான கையொப்பம் பெறப்பட்டது.
மேலும் கோயிலில் இந்து சமய அறநிலைய துறை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த உண்டியல் இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்களால் அகற்றப்பட்டது.
மேலும் எதிர் தரப்பினருக்கு கோயில் பூஜைகளிலும், கோயில் நிர்வாகத்திலும் எந்தவித பிரச்சினையும் செய்யக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.