/* */

கரிகாலன் கட்டிவைத்தான் கல்லணை..! உலகை வியக்கவைக்கும் தொழில்நுட்பம்..!

Karikalan Kallanai-அறிவியல் வளர்ச்சிப்பெறாத அந்த நாட்களிலேயே புதுமையான,நுணுக்கமான தொழில்நுட்பத்தில் கல்லணை கட்டப்பட்டிருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

HIGHLIGHTS

Karikalan Kallanai
X

Karikalan Kallanai

Karikalan Kallanai-'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவன் வாக்கு. நீர் இந்த பூமியின் அமிழ்தம் என்றார் சர்.சி.வி.ராமன். உண்மையே. நீரில்லாத இந்த உலகத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தண்ணீர் என்பது 'நீர்ம தங்கம்'.

நீர் மேலாண்மை

அதிலும் பண்டைய தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. நிலத்துக்கு அடியில் நீர்க்கால்கள் என்று சொல்லப்படும் நீரோடும் பாதையை சரியாக கண்டுபிடித்து கிணறுகள் தோண்டினார்கள். அதேபோல் ஏரி, குளங்கள் அமைக்கும்போது மழைக்காலத்து நீர் பாய்ந்து தேங்கும் இடத்தைக் துல்லியமாக கணித்து அமைத்தனர். இப்படி தண்ணீர் குறித்த தெளிவான அறிதலும் புரிதலும் பண்டைய தமிழர்களுக்கு இருந்தது.

அந்த வரிசையில் சோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் கரிகாற் சோழனால் கட்டப்பட்டது தான் கல்லணை. ஆனால் இந்த கல்லணை எதற்காக கட்டப்பட்டது? கட்டும் போது சந்தித்த சவால்கள் என்ன? அதை எத்தனை ஆண்டுகளில் கட்டி முடித்தார்கள் போன்ற வரலாறு குறித்து அறிவோம் வாருங்கள்.

கல்லணை, இந்தியாவில் உள்ள மிகப் பழமை வாய்ந்த ஒரு அணையாகும். இது காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. கல்லணை திருச்சி நகருக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவிரி என கூறப்படும் முக்கொம்பில் உள்ள மேலணையில் காவிரி மற்றும் கொள்ளிடம் இங்கு தான் இரண்டாக பிரிந்து செல்கிறது.

இந்த அணை கட்டப்பட்டு சுமார் 2000 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்றளவும் சோழர்களின் கட்டிடப் புகழை தாங்கி நிற்கிறது கல்லணை.

கல்லணையின் கட்டமைப்பு மற்றும் வரலாறு அறிந்துகொள்வோம் :-

காவிரியின் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், மிகுதியான நீரைப் பயன்படுத்தி பாசனப் பரப்பை அதிகரித்து விவசாயத்தை சீலிக்கச் செய்யவும் கட்டப்பட்ட முதல் அணை கல்லணை தான். ஏறக்குறைய 2100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்தாலும் இன்றும் கல்லணை பயன்பாட்டில் உள்ளதுதான் அதன் சிறப்பே.

நாம் கடற்கரை ஓரத்தில் நின்றால், அலை வந்து நம் காலைத் தழுவிச் செல்லும். அவ்வாறு அலையடித்துச் சென்ற பிறகு, அலை நம் பாதங்களுக்கு கீழ் சிறிது மணலை அள்ளிச் சென்றுவிடும்.காலுக்கு கீழே சிறிய குழி ஏற்படும். இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கரிகாலனின் கல்லணை கட்டப்பட்டது. கருங் கற்களால் கட்டப்பட்டதால் இது கல்லணை என்று பெயர் பெற்றது.

புதுமையான தொழில்நுட்பம்

பெரிய பாறைகளும், களிமண் பூச்சும்தான் அந்த அதிசய தொழில்நுட்பத்தின் அடிப்படை. காவிரியில் நீர்வரத்து குறைவாக வரும் கோடை காலத்தில், ஆற்றில் மிகப்பெரிய எடை கொண்ட பாறையை போட்டால், அது நீரை அரித்து கீழே இறங்கும். அது முற்றிலும் மூழ்குவதற்கு முன்னால் அதன்மீது களிமண் சாந்து பூசப்படும். இப்படி வரிசையாக ஆற்றின் குறுக்கே பாறைகள் போடப்பட்டன. இதே முறையில் அடுத்த அடுக்கு நீர்வரத்து குறைவாக இருக்கும் அடுத்த கோடையில் முதலில் போட்ட அடுக்கின்மேல் போடப்படும். இதனால்தான் கல்லணை கட்டி முடிப்பதற்கு 30 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

கல்லணையை இடிக்கத் திட்டம்

வெற்றுப் பெருமைக்காக மட்டுமே கல்லணையை, மகத்தான அணை என்று கூறப்படவில்லை. கல்லணையை அப்படி குறிப்பிட்டவர் பிரிட்டிஷ் பாசனப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன். அவர் மகத்தான அணை என குறிப்பிடவும் காரணம் இருக்கிறது.

காலப்போக்கில், கரிகாலன் கட்டிய கல்லணை ஒரு பிரச்னையை சந்தித்தது. அதிக நீர் வரத்தால், மணல் மேடுகள் கல்லணைக்கு முன் குவிந்தன. காவிரி படுகை மேடாக மாறியது. கொள்ளிடம் பள்ளப் படுகையாக மாறிவிட, ஆற்றில் வரும் நீர் முழுதும் கொள்ளிடத்தில் பாய, காவிரிப் பாசனப்பகுதி வறண்டது. இந்தப் பிரச்னையிலிருந்து டெல்டாவை காப்பாற்ற யோசித்த ஆங்கிலேய அரசு, ஆர்தர் காட்டனிடம் இந்த பணியை ஒப்படைத்தது.

கரிகாலன் கட்டிய கல்லணையை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய அணைகட்ட பொறியாளர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் ஆர்தர் காட்டனுக்கு மட்டும், இந்தக் கரிகாலனின் கட்டுமானம் எப்படி 1800 ஆண்டுகளைத் தாக்குப்பிடித்து நிற்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் பிறந்தது.

மணற்பாங்கான ஆற்றுக்குள் அடித்தளம் அமைக்கப் பள்ளம் தோண்டினால் நீர் ஊறிக் கொண்டே இருக்கும். நிச்சயம் நீர் ஊற்றில் அடித்தளம் அமைக்க முடியாது. பின் எப்படி கரிகாலன் கல்லணையை கட்டினார்? இதனை ஆய்வு செய்த ஆர்தர் காட்டன், அணைக்கட்டின் அடித்தளத்தில் 12 அடி ஆழம் வரை குழி தோண்டிப் பார்த்திருக்கிறார். அணையின் ரகசியம் அப்போது தான் அவருக்கு தெரிந்திருக்கிறது. அணைக்கட்டின் 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அணை கட்டப்பட்டு இருக்கிறது. அந்த பாறைகளின் இணைப்புக்கு களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் கல்லணையை 'மகத்தான அணை' என குறிப்பிட்டு இருக்கிறார்.

உலகத்துக்கான பெருமை கல்லணை

பொறியாளர்களுக்கு தமிழன் கரிகாலன் கட்டிய அந்த அணையை இடிக்க விருப்பவில்லை. அதனால் கரிகாலனின் பழைய அணையையே அடிக்கல்லாக வைத்து புதிய அணையைக் கட்டலாம் என்ற முடிவை எடுத்தவர் ஆர்தர் காட்டன்தான்.

கல்லணைக் கட்டுமானம் குறித்து ஆர்தர் காட்டன் கூறுகையில், ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தை கல்லணை கட்டியவர்களிடம் இருந்துதான் தெரிந்துகொண்டோம். இந்தப் தொழிநுட்பத்தை பயன்படுத்தி ஆற்றுப் பாலங்கள், அணைக்கட்டு போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம். எனவே, இந்த மகத்தான சாதனை புரிந்த பெயர் தெரியாத அந்நாளைய மக்களுக்கு நாம் பெரிதும் கடன்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்

19ம் நூற்றாண்டுவரை, ஆண்டு முழுவதும் நீர் ஓடுகிற மணற்பாங்கான படுகையின் மேலணை கட்டும் தொழில் நுட்பம் புரியாத புதிராகவே இருந்தது. இதைக்கட்டியவர்கள், இந்தத் தொழில்நுட்பத்தை, எதிலும் பதிவு செய்துள்ளதாகத் தெரியவில்லை. கரிகாலனின் தொழில்நுட்ப புதிரை அவிழ்த்து, தமிழர்களின் பெருமையை உலகுக்குச் சொன்னவர் ஆர்தர் காட்டனே.

கல்லணை அமைப்பு

கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஒரு கட்டுமான அமைப்பு . 2000 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே. 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இந்த அணையைக் காண வருகிறார்கள்.

பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமானத் திறனை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. பழமையான இந்த அணையை கட்டிய கரிகாற் சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகாற் சோழன் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 12 April 2024 10:40 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  2. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  4. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  6. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  9. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  10. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!