/* */

புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகள் உதவி தொகை பெறுவது எப்படி?

புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகள் அரசின் உதவி தொகையை பெறுவது எப்படி என்பதை அறிய கீழே தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகள்  உதவி தொகை பெறுவது எப்படி?
X

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டத்தை சென்னையில் கடந்த 5-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


பெண் கல்வியை போற்றும் விதமாகவும் உயர்கல்வியை உறுதி செய்து பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுனர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும் ,நல்ல குடிமக்களை பேணும் உயர் கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தைச் சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக இந்த புதுமைப்பெண் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு உயர்கல்வி அளித்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல் பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல் உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்க செய்தல் நிலை உருவாகும்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருத்தல் வேண்டும்.

புதுமைப்பெண் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்படும் மாணவிகள் சான்றிதழ் படிப்பு, பட்டய படிப்பு, இளங்கலை பட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்ற படிப்புகளை பயிலலாம். இவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் படிப்பு முடியும் வரை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த உதவி தொகையின் மூலம் கல்லூரியில் படிக்க வேண்டும் என கனவு இருந்தாலும் வறுமை காரணமாக கால் ஊன்ற முடியாத மாணவிகளுக்கு தாராளமாக கல்வி பெற வழிவகை கிடைக்கிறது.

தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டு ஒரு லட்சம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நடைபெற்ற விழாவில் முதற்கட்டமாக 2,500 மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக் கல்வி புத்தகம் அடங்கிய புதுமைப்பெண் பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை (டெபிட் அட்டை) ஆகியவற்றை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.


இந்த விழாவில் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்டு முன்னிலை வகித்த டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் புதுமையான திட்டங்களை தமிழகத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். புதுமைப்பெண் திட்டம் வரும் காலத்தில் இந்தியாவில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று பாராட்டினார். வருங்காலங்களில் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள ஒட்டுமொத்த பெண்களுமே புதுமைப்பெண் திட்டம் சிறப்பான பாதையை உருவாக்கி தரும் என்றும் மனம் திறந்து பாராட்டினார்.


திருச்சி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மாத உதவி தொகை ஆயிரம் பெறுவதற்காக 6000 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் கடந்த 5-ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கையினால் வங்கி பற்று அட்டையை பெற்றனர்.

இந்த திட்டத்தில் மாணவிகள் சேருவதற்கு அவர்கள் படித்து வரும் கல்லூரியின் மூலமாகவே மாவட்ட சமூக நல அதிகாரியை அணுக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட சமூக நல அதிகாரியாக நித்யா பணியாற்றி வருகிறார். அவரிடமோ அல்லது அவரது அலுவலகத்திலோ இந்த திட்டம் பற்றி மாணவிகள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது செல்போன் எண் 9150058249 ஆகும்.

Updated On: 8 Sep 2022 2:42 PM GMT

Related News