சத்தியமங்கலம்: வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானை
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டு யானையால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
HIGHLIGHTS

வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டு யானையை படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையான திம்பம் மலைப்பாதையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் காராப்பள்ளம் சோதனை சாவடி உள்ளது. தமிழ்நாடு எல்லையில் உள்ள இந்த சோதனை சாவடி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வனவிலங்குகளை காப்பதற்காக நீதிமன்ற உத்தரவின்படி இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக அன்றாடம் காலை 6 மணி முதல் போக்குவரத்து தொடங்கும், இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் அந்த சோதனைசாவடியிலேயே நிறுத்தப்படும்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து பல்லடம் செல்வதற்காக மக்காசோளம் ஏற்றி வந்த லாரி சோதனை சாவடி அருகே பழுதாகி நின்றது. இதையடுத்து வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டுயானை லாரியில் இருந்த மக்காசோளத்தை உண்டது. ஒற்றை யானை சாலையில் நின்றதால் அச்சத்தின் காரணமாக எந்த வாகனமும் செல்லாமல் வரிசையாக நிறுத்தப்பட்டது.
இன்று (புதன்கிழமை) காலை 7 மணி முதல் இரு மாநிலங்களிலிருந்தும் வந்த கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.