தங்கம் உட்பட 2 பதக்கங்கள் வென்று கோபி போக்குவரத்து காவலர் சாதனை
கோபி போக்குவரத்து காவலர் மலேசிய சர்வதேச ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் உட்பட 2 பதக்கங்களை பெற்றுள்ளார்.
HIGHLIGHTS

தங்கப் பதக்கத்துடன் கோபி போக்குவரத்து தலைமை காவலர் சரவணகுமார்.
கோபி போக்குவரத்து தலைமைக் காவலர் கோலாலம்பூரில் நடந்த மலேசியன் சர்வதேச ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் உட்பட 2 பதக்கங்களை பெற்று காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கோலாலம்பூரில் கடந்த 16ம் தேதி முதல் 35வது மலேசியன் சர்வதேச ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில், ஈரோடு மாவட்டம் கோபி போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலராக பணிபுரிந்து வரும் சரவணகுமார் சர்வதேச தடகளப் போட்டியில் கலந்து கொள்ள காவல் துறை தலைமை இயக்குனரிடம் முறையாக அனுமதி பெற்று போட்டியில் கலந்து கொண்டார்.
மேற்படி போட்டியில் பங்கு பெற்று, வட்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்து தமிழகத்திற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதற்காக அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மேலும், சர்வதேச போட்டியில் பங்குபெற்று பதக்கம் வென்ற போக்குவரத்து தலைமை காவலர் சரவணகுமாரை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பாராட்டியுள்ளார்.