/* */

போலி ரயில் டிரைவர் விவகாரம் : மேற்கு வங்காளம் விரைந்த ரயில்வே போலீசார்

போலி ரயில் டிரைவர் விவகாரம் தொடர்பாக ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மேற்கு வங்காளம் சென்று விசாரணை.

HIGHLIGHTS

போலி ரயில் டிரைவர் விவகாரம் : மேற்கு வங்காளம் விரைந்த ரயில்வே போலீசார்
X

பைல் படம்.

மேற்கு வங்க மாநிலம் ஷியால்டாவில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் செல்லும் சாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி இரவு 8.30 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தது. ரயில் என்ஜினை அடுத்த மாற்று திறனாளிகள் பெட்டியில் ரயில் டிரைவர்கள் சீருடையுடன் இரு வாலிபர்கள் அமர்ந்து இருந்தனர். சட்டையில் நேம் பாட்ச் இருந்தது. இதில் ஒருவர், மிகவும் சிறுவனாக காணப்பட்டார். அப்போது ரோந்து சென்ற ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையிலான போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.விசாரணையில் மேற்கு வங்க மாநிலம் மஷிடாபாத், சாட்டை ஹரிராம்பூரை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரஜாக் மகன் எஸ்ராபில் ஷேக், (21) என்பது தெரியவந்தது.

மேற்கு வங்கத்தில் இரண்டு ஆண்டுகளாக பயணிகள் ரயிலை 17 வயது சிறுவன் ஓட்டியுள்ளார். இதற்கு மாதந்தோறும் ஒரிஜினல் டிரைவர்களிடம் சம்பளம் பெற்றுள்ளார். எஸ்ராபில்லையும் ரயில் ஓட்டும் வேலையில் சேர்க்க அழைத்து சென்றார். அவருக்கு வேலை கிடைக்காத நிலையில் இருவரும் கேரள மாநிலம் செல்லும் போது பிடிபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து இரண்டு செட் கொடி, மல்டி பர்பஸ் டார்ச்லைட், ரயில்வே அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது. எஸ்ராபில், பெருந்துறை கிளை சிறையிலும், சிறுவன் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையிலான குழுவினர், மேற்கு வங்காளம் சென்று அங்கு ஒரு வாரம் முகாமிட்டு ரயில்வே அதிகாரிகள், ரயில் டிரைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

இது குறித்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறியதாவது:

இன்ஸ்பெக்டர் சுனில் குமார் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கு வங்காளம் சென்று ஒரு வார காலம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. விசாரணை அடிப்படையில் மீண்டும் சிறுவனிடமும் , எஸ்ராபில் ஷேக்கிடம் விசாரிக்க வேண்டி உள்ளது. ஏழு நாட்கள் மேற்கு வங்கத்தில் பல்வேறு ரயில்வே துறை அலுவலர்கள், ரயில் டிரைவர்கள், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை மற்றும் ஆலோசனை நடத்தினோம். பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.

அவற்றை ஏற்கனவே நடந்த விசாரணையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளது. ஏற்கனவே துறை ரீதியாக மேற்கு வங்கத்தில் ரகசிய விசாரணை மற்றும் கண்காணிப்பு தொடர்கிறது. தகவல்கள், விசாரணை அறிக்கை, ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றுபோல் இருக்கும்பட்சத்தில் மேற்கு வங்க ரயில் டிரைவரின் மீதான நடவடிக்கை குறித்து உயர் போலீஸ் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்போம். இன்ஸ்பெக்டர் சுனில் குமார் தலைமை அதிகாரிகள் நாளை இரவு ஈரோடு வர உள்ளனர். அவர்கள் வந்த பிறகுதான் மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணை குறித்த முழு தகவல் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினர்.

Updated On: 13 Sep 2021 11:15 AM GMT

Related News