/* */

கீழ்பவானி வாய்க்கால் நீரமைப்பு தொடர்பாக விவசாயிகள் மத்தியில் பனிப்போர்

கீழ்பவானி வாய்க்கால் நீரமைப்பு தொடர்பாக விவசாயிகள் மத்தியில் நடைபெறும் பனிப்போர் தொடர்பாக சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

கீழ்பவானி வாய்க்கால் நீரமைப்பு தொடர்பாக விவசாயிகள் மத்தியில் பனிப்போர்
X

கீழ்பவானி வாய்க்கால்

கீழ்பவானி பாசனத் திட்டத்தில் நீரமைப்பு வேலைகளை நிறுத்தும் படி ஒரு பக்கமும்,உடனடியாக வேலைகளைத் தொடங்க வேண்டும் என்றும் தண்ணீருக்கான பனிப்போர் ஒன்று ஈரோடு மாவட்டத்தில் நடந்து வருகிறது. ஒரு பக்கம் ஆயக்கட்டு விவசாயிகளும் இன்னொரு பக்கம் ஆயக்கட்டில் இல்லாமல், ஆனால் பாசன வாய்க்காலின் தண்ணீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் இன்னொரு பக்கமுமாக போராடி வருகிறார்கள்.

நீரோட்டம்:-

கீழ்பவானி பாசனத்தில் வாய்க்கால் புவிஈர்ப்பு விசையால் பாசனம் நடக்கும் திட்டம். அதாவது வாய்க்காலின் ஒரு பக்கம் சரிவாகவும் இன்னொரு கரை மேடான பகுதியாகவும் இருக்கும். இடது பக்கம் சரிவான பகுதி. ஆகவே மதகில் இருந்து தண்ணீரை திறந்ததும் இயல்பாகவே புவிஈர்ப்பு விசையால் நிலத்திற்குப் பாயும். வலது கரைப் பக்கம் மேடான பகுதி என்பதால் தண்ணீர் தருவது இயலாத ஒன்று. ஆனால், வாய்க்காலில் தண்ணீர் பயணிக்கும் போது வாய்க்காலின் தரை மட்டம் மற்றும் கரை வழியாக ஏற்பட்ட கசிவைப் பயன்படுத்தி கரையோர விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கசிவின் அளவு அதிகமாகியதால் கடைக்கோடிக்கு தண்ணீர் தருவதில் சிக்கல் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

கான்கிரீட்:-

இதை சரி செய்ய 2009லேயே காவிரி தொழில் நுட்பக் குழுவின் தலைவர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையின் படி முழுவதும் லைனிங் செய்ய பரிந்துரைத்தது. ஆட்சி மாற்றத்திற்கு பின் லைனிங் திட்டம் மாற்றி கான்கிரீட் திட்டமாக அமைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் வலது கரூ விவசாயிகள் எதிர்த்ததால் நிறுத்தப்பட்டது. பின் கடந்த அரசு முழு கான்கிரீட் திட்டத்திற்கு பதிலாக கசிவு அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் கான்கிரீட் சுவர் என்று மாற்றியது. இப்போதும் தேர்தல் குறுக்கே வந்ததால் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.இப்படி நிறுத்தி வைக்கப்பட்ட திட்டத்தை தொடங்கக் கூடாது என்றும் தொடங்க வேண்டும் என்று இரு தரப்பும் போட்டி போட்டு ஆர்பாட்டங்கள் நடத்திக் கொண்டும் அறிக்கைகள் மேல் அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உலகு அறிய பதில் சொல்லுங்கள்:-

பொது மேடையில் இரு தரப்பு தலைவர்களும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை முன் வைத்து வாதாட அழைப்பும் விடப்பட்டது. சீரமைப்பு கூடாது என்ற தரப்பு இன்றுவரை அதற்கு முன் வரவில்லாத நிலையில் ஆயக்கட்டு விவசாயிகள் சீரமைப்பு கூடாது என்கிற தரப்பிடம் உண்மைகளை "உலகு அறிய பதில் சொல்லுங்கள்" என்று தலைப்பிட்டு 20 கேள்விகளை கேட்டு பதில் தருமாறு கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்விகள் பின்வருமாறு:-

1. கீழ் பவானி பாசனக் கட்டமைப்பு உண்மையில் எந்தப் பகுதிக்கு பாசனம்‌ தருவதற்காக அமைக்கப்பட்டது?

2.கீழ் பவானி பாசனக் கட்டமைப்பு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் என்பதற்கு ஆதாரங்கள் என்ன?

3.பிரதானக் கால்வாயின் வலது பக்கம் எத்தனை கசிவு நீர் பாசனத் திட்டங்கள் உள்ளன?

4.பிரதான வாய்க்காலின் வலது கரைப் பக்க பாசனத்திற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவு எவ்வளவு? எந்த அரசாணையின் படி இந்தத் தண்ணீர் ஒதுக்கப்பட்டிருக்கிறது?

5. காவிரி தீர்ப்பில் கீழ்பவானி பாசனத்தில் வலது கரையில் உள்ள பாசனம் பற்றி என்ன சொல்லியுள்ளது?

6.காவிரி தீர்ப்பின் படி வலது கரை பாசனத்திற்குக் குறைக்கப்பட்ட தண்ணீர் அளவு என்ன?

7. வலது கரையில் உள்ள அனுமதிக்கப்பட்ட பாசனப் பரப்பு மொத்தமாக எத்தனை ஏக்கர்கள்?

8. வலது கரைப் பாசனத்தில் உள்ள வாய்க்கால்கள், கால்வாய்கள் எத்தனை?

9. கீழ்பவானி வாய்க்கால் பஞ்சாயத்துகளுக்கான குடிநீருக்கானது என்றதற்கான ஆதாரங்கள் என்னென்ன?

10. வலது கரையில் உள்ள 50, 100 மற்றும் 200 மீட்டர்கள் தூரத்தில் உள்ள கிணறுகள் எத்தனை, அவைகளில் உள்ள மின் மோட்டார்களின் திறன் என்னென்ன?

11.வலது கரைகளில் உள்ள கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார்களில் 5 குதிரைசக்தி, 7.5 குதிரை சக்தி, 10 குதிரை சக்தி கொண்ட மின் மோட்டார்கள் எத்தனையெத்தனை?

12.வலது கரையில் உள்ள விளை நிலங்களுக்கு பாசனம் என்கிறீர்கள், எத்தனை மாதங்கள்? எப்போது தொடங்கி எப்போது வரைக்கும் பாசனம் அளிக்கப்படுகிறது. இதற்கான அரசாணை எது?

13. கீழ்பவானி பாசனத் திட்டத்து பிரதான வாய்க்காலில் கான்கிரீட் தளம் போடப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் என்ன?

14. கீழ் பவானிபாசனத் திட்டத்தில் சீரமைப்பு வேலைகளின் காரணமாக பிரதான மற்றும் கிளை வாய்க்காலின் கரைகளில் உள்ள மரங்களில் 4 இலட்சம் வெட்டப்படும் என்பதற்கு ஆதாரங்கள் என்ன? பிரதான வாய்க்காலில் வெட்டப்படும் மரங்கள் எத்தனை, கிளை மற்றும் பகிர்மான வாய்க்காலில் வெட்டப்படும் மரங்கள் எத்தனை? ஆதாரங்களுடன் தெரிவியுங்கள்.

15. கீழ்பவானி பாசனத் திட்டத்தில் சீரமைப்பு அவசியம் எனும் முன்னணித் தலைவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறீர்கள். அதற்கு ஆதாரங்கள் இருப்பின் ஏன் காவல் துறையில் புகார் தெரிவிக்காமல் இருக்கிறீர்கள்?

16. பாசனத் திட்டத்தின் 2,07,000 ஏக்கர் பரப்பிலும் வலது கரையிலும் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், குடிநீர் விற்பனை நிறுவனங்கள் உள்ளனவா?

17.பாசனத்திட்டத்தில் உள்ள அவைகளின் எண்ணிக்கை என்ன?

18. அவைகளுக்கான தண்ணீர் ஆதாரம் கீழ்பவானி பாசனத் திட்டத்தில் உள்ள தண்ணீர் என்பது உண்மையா இல்லையா?..

19.கடைக் கோடிக்குத் தண்ணீரை சிரமமின்றி கொண்டு செல்ல என்ன திட்டம் உள்ளது?

20. கடந்த ஏப்ரலில் புஞ்சை விவசாயத்திற்கு விடப்பட்ட தண்ணீரில் தினமும் தினமும் 15,000-18,000 ஏக்கரளவிற்குத் தண்ணீர் நிறுத்தப்பட்டு கடைக் கோடிக்கு கொடுக்கப்பட்டது ஏன்?

இவைகளுக்கு சீரமைப்பு கூடாது என்று போராடும் தரப்பு பதில்களைத் தருமா? பொறுத்து இருந்து பார்ப்போம்.!

Updated On: 19 May 2022 12:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  5. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  10. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?