சத்தியமங்கலம்: போலீசாரிடம் குடிபோதையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் ரகளை!
சத்தியமங்கலத்தில் போலீசாரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS

போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டு குடிபோதை ஆசாமி.
தமிழகமெங்கும் கொரோனா இரண்டாம் அலை வெகு வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடந்த 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்க படுவதால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சந்தைகடை பகுதி அருகே போலீசார் கண்காணிப்பு ஈடுபட்டிருந்தனர். அப்போது கடுமையான குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த நபரை நிறுத்திய போலீசார் அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கடுமையான குடிபோதையில் இருந்த ஆசாமி நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டு தன் பெயர் தேவராஜ் என்றும், தான் நெடுஞ்சாலைத் துறை ஊழியராக பணியாற்றி வருகிறேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, என் வாகனத்தை எப்படி வாங்க முடியுமோ அப்படி வாங்கிக் கொள்கிறேன் என தனது நெடுஞ்சாலைத்துறை அடையாள அட்டையை காட்டி போலீஸ் அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருப்பினும் போலீசார் அவரிடம் பொருமையாக, நீங்கள் முழு குடிபோதையில் உள்ளீர்கள். தயவுசெய்து மது அருந்தாத நபரை கூட்டி வந்து பேசுங்கள் என்று கூறினர். அப்போதும் விடாமல் ரகளையில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரத்தில் போதை தலைக்கு ஏறவே அருகே இருந்த தபால் நிலையம் முன்பு நிற்க முடியாமல் கீழே விழுந்து படுத்து உறங்கினார். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.