/* */

கோபி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே பள்ளி செல்ல காத்திருந்த மாணவன் மீது சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் மாணவன் உயிரிழந்தான்.

HIGHLIGHTS

கோபி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு
X

உயிரிழந்த மாணவன் கவினேஷ்.

கோபிசெட்டிபாளையம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் காந்திநகரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி முருகேசன் . இவரது மனைவி பிரியா. இவர்களது மூத்த மகன் கவினேஷ் (வயது 12). இவன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கவினேஷ் தினமும் காந்திநகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்தான். இந்நிலையில், இன்று காலை காசிபாளையம் காந்திநகர் பேருந்து நிறுத்தத்திற்கு பள்ளிக்கு அரசு பேருந்தில் செல்வதற்காக வந்தான். அப்போது, பேருந்து நிறுத்தத்தில் இருந்த வாய்க்கால் கரையின் திட்டின் மேல் அமர்ந்து பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தான்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா சென்ற வேன் ஆத்தூர் செல்வதற்காக சத்தியமங்கலம் - ஈரோடு சாலையில் கவுந்தப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, காந்திநகர் பேருந்து நிறுத்தம் அருகே வரும் போது இருசக்கர வாகனத்தில் நபர் ஒருவர் சாலையை கடந்துள்ளார். அந்த நபரின் மீது மோதாமல் இருக்க வேன் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் வாய்க்கால் திட்டின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி செல்வதற்காக அரசு பேருந்தை எதிர் நோக்கி காத்திருந்த கவினேஷ் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், மாணவன் கவினேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலறிந்து வந்த கவினேஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும், இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் தினத்தன்று பள்ளிக்குச் செல்ல அரசு பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த மாணவன் மீது சுற்றுலா வேன் கவிழ்ந்து உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் நடந்து சென்ற முதியவர் மற்றும் வேனில் பயணித்த கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி மற்றும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Updated On: 14 Nov 2022 7:58 AM GMT

Related News