நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
எடப்பாடி நிமிர்ந்து நின்றதாலும் பன்னீர் கொஞ்சம் குனிந்ததாலும் ‘கை’க்கு போட்டியாக இரட்டை இலை சின்னம் களத்திற்கு வந்துள்ளது.
HIGHLIGHTS

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் நிமிர்ந்து நின்ற எடப்பாடியாலும் குனிந்து போன பன்னீராலும் இரட்டை இலைக்கு விதிக்கப்பட இருந்த தடை நீங்கி ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் இரட்டை இலை சின்னம் களத்தில் குதித்து உள்ளது.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு
அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. கட்சியில் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட இந்த மோதலை அப்போது பிரதமர் மோடி தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழக முதல்வராகவும் நீடித்தார். ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.
2021 தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியதால் எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம் இடையே மீண்டும் யார் பெரியவர்? யாருக்கு அதிகாரம் என்ற ஈகோ பிரச்சினை மீண்டும் தலை தூக்கியது. இதன் காரணமாக கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டது.
பொதுக்குழு விவகாரம்
2022 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களுடன் அ.தி.மு.க. பொது குழு கூட்டத்தைக் கூட்டினார். அதில் தான் இடைக்கால பொது செயலாளராக தேர்வு பெற்றதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் அத்துடன் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு அப்பீல் செய்தார். அதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
இந்த பரபரப்பான சூழலில் தான் தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. திடீரென மரணம் அடைந்து விட்டதால் அங்கு ஒரு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலை எடப்பாடி பழனிசாமி தனது அணி வேட்பாளராக தென்னரசு என்பவரையும், ஓ பன்னீர்செல்வம் தனது அணி சார்பில் செந்தில்முருகன் என்பவரையும் வேட்பாளராக அறிவித்தனர். ஒரே கட்சி சார்பில் இரு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னத்தை வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என முறையிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மூன்று நாட்களில் தேர்தல் ஆணையமும் ஓ. பன்னீர்செல்வமும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இது தரப்பினரும் அதற்கான மனுக்களை தாக்கல் செய்தனர். வழக்கறிஞர்களும் விவாதம் செய்தனர். அதனை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் களத்தில் நிற்க வேண்டும். அதுவும் ஒரே அணியாக நிற்கவேண்டும். ஆதலால் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி பொதுவான ஒரு வேட்பாளரை அவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனை அ.தி.மு.க.வின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் நடத்தி வேட்பாளர் பெயர் மற்றும் படிவங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
தேர்தலுக்கு முந்தைய வெற்றி
இந்த உத்தரவின் காரணமாக எடப்பாடி தரப்பு உற்சாகமடைந்தது அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் படிவங்களை அனுப்பி அவர்களது வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவை ஆதரிக்கும் படி கையெழுத்து வாங்கியது. இந்த படிவங்களை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லிக்கு சென்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பினார். இதன் காரணமாக தேர்தல் ஆணையம் இ.பி.எஸ். தரப்பு வேட்பாளரை அங்கீகரித்து தமிழ் மகன் உசேன் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் நிற்பதற்கான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடலாம் என அனுமதி வழங்கி உள்ளது. இது அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு தேர்தலுக்கு முந்தைய ஒரு வெற்றியாக அமைந்துள்ளது .அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பினரும் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை. எங்களை கட்சியை விட்டு நீக்கியதும் செல்லாது என்று தான் கூறியிருக்கிறது. இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் நாங்கள் ஆதரிப்போம் என்று ஏற்கனவே எங்கள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார் அதைத்தான் இப்போது உச்ச நீதிமன்றமும் உத்தரவாக கூறியிருக்கிறது. அந்த உத்தரவின் அடிப்படையில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிக்கிறோம். எங்கள் வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்று கொள்கிறோம் என அறிவித்துவிட்டு அதோடு வாபஸ் பெற்று விட்டனர்.
அ.தி.மு.க. உள் கட்சி பிரச்சினை எப்போது முடிவடையும் என்பது மத்திய ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாவுக்கும், உச்சநீதிமன்றத்திற்கும் தான் தெரியும். ஆனால் இடைக்கால ஏற்பாடாக இந்த இடைத்தேர்தலை பாரதிய ஜனதா சரியாக பயன்படுத்திக் கொண்டது.
நிமிர்ந்த எடப்பாடி- குனிந்த பன்னீர்
ஆரம்பத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க. ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தி வருகிறது. அந்த கருத்தை எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் நெருக்கடி கொடுத்து பல வகைகளில் திணித்தார்கள். ஆனால் அவர் எந்த ஒரு சூழலிலும் அந்த நெருக்கடிக்கு குனிந்து கொடுக்கவில்லை. நிமிர்ந்து நின்றார். இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த துணிச்சலை பார்த்து பாரதிய ஜனதா மேலிடமும் சற்று ஆடிப் போய்விட்டது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி தனித்து புதிய சின்னத்தில் நின்று ஓரளவு வாக்குகளை பெற்று விட்டால் ஓ. பன்னீர்செல்வம் காணாமலே போய்விடுவார். இதன் காரணமாகவே பாரதிய ஜனதா சமாதானம் செய்வதுபோல் செய்து உச்சநீதிமன்றத்தின் வாயிலாக ஓ. பன்னீர்செல்வத்தை குனிய வைத்து விட்டது.
'கை'க்கு போட்டி இலை
பன்னீர்செல்வம் குனிந்து தனது வேட்பாளரை வாபஸ் பெற்று விட்டதால் தற்போது ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு பிரச்சினை இல்லாமல் போய்விட்டது. இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுகிறார் என்பது உறுதியாகிவிட்டது. ஆக இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணியின் கை சின்னத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு போட்டியாக இரட்டை இலை சின்னம் களத்திற்கு வந்துவிட்டது. ஆதலால் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் களம் இனி சூடு பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.