/* */

நீங்கள் பயணம் செய்வது 'யாரு போட்ட ரோடு' என்று உங்களுக்கு தெரியுமா?

நாம், பல்வேறு இடங்களுக்கு செல்ல, சொந்த வாகனங்களிலோ, வாடகை வாகனங்களிலோ பயணம் செய்கிறோம். ஆனால், நாம் பயணிக்கும் ரோடு, ‘யாருக்கு சொந்தமானது’ என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

HIGHLIGHTS

நீங்கள் பயணம் செய்வது யாரு போட்ட ரோடு என்று உங்களுக்கு தெரியுமா?
X

மைல் கற்களின் நிறம், என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் ( மாதிரி படம்)

ஒரு ஆட்டோவின் பின்புறத்தில், ' ஆமா, இது எங்கப்பன் போட்ட ரோடுதான்' என்ற வித்தியாசமான வாசகம் இருந்துள்ளது. இதைப் பார்த்து பலருக்கும்,'அட' என ஆச்சரியம் தோன்றியது. வாகன ஓட்டிகள் பலரும், சாலை விதிகளை மதிப்பதில்லை. தாறுமாறாக வாகனம் ஓட்டுபவர்களை கண்டிக்கும் சிலர், ' இது என்ன, உங்கப்பன் போட்ட ரோடா?' என, ஆவேசமாக அவர்களை பார்த்து கேட்பதுண்டு. அதற்கு கேலியாக பதில் சொல்லும் விதமாகவே, அந்த ஆட்டோவில் அந்த வாசகம் இருந்திருக்கிறது.

ஆனால், தினமும் ரோடுகளில் பயணிக்கும் நாம், உண்மையிலேயே அந்த ரோடு யாருக்கு சொந்தம் என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது. அதை எளிதில் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அதுபற்றி பார்ப்போம்.

நாம் ரோடுகளில் பயணம் செய்யும்போது, அடுத்து வரவிருக்கும் ஊர் மற்றும் அதன் தொலைவு ஆகியவற்றை ரோட்டோரத்தில் உள்ள ஒரு கல்லில் எழுதி வைத்திருப்பதை பலமுறை பார்த்திருக்கிறோம். தூரத்தை அளக்கும் மைல் என்னும் அளவு கைவிடப்பட்டு, தற்போது கிலோமீட்டர் என்ற அளவிலேயே தூரங்கள் கணக்கிடப்பட்டு வந்தாலும், இந்த கல்லுக்கு இன்றும் 'மைல் கல்' என்றுதான் பெயர்.

உழைத்து, களைத்து வரும் விவசாயிகள் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு காத்திருப்பவர்கள் பல நேரங்களில் இந்த கல்லில் அமர்ந்து ஓய்வெடுப்பதை பார்க்க முடியும். நாடு முழுவதும் உள்ள ரோடுகளின் ஓரங்களில் இந்த மைல் கற்கள் நடவு செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டி வருகிறது. அந்தந்த பகுதியில் பழக்கத்தில் இருக்கும் மொழி மற்றும் ஆங்கிலத்தில் இந்த கற்களில் எழுதப்பட்டிருக்கும். ஆரம்ப காலங்களில் கல்வி அறிவு இல்லாதவர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக கல்லில் செதுக்கப்பட்ட குழிகள் மூலம் வழி காட்டியதாக கூறப்படுகிறது.

மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு என இந்த கற்களின் மீது வெவ்வேறு நிறங்கள் பூசப்பட்டிருப்பது வெறும் அழகுக்காக மட்டும் என்று பலரும் நினைப்பது உண்டு.ஆனால் அந்த நிறங்கள் அந்த ரோடு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்னும் தகவலை சொல்வதாக உள்ளது. மைல் கல்லின் பூசப்பட்டுள்ள நிறங்களை வைத்து நாம் தகவல்கள் மற்றும் புகார்களை எந்த துறைக்கு அளிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

தேசிய நெடுஞ்சாலை - மஞ்சள் நிறம்

அந்தவகையில் வெண்மை நிற மைல் கல்லின் மேல் மஞ்சள் நிறம் பூசப்பட்டிருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை. மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த ரோடு, கனரக வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த ரோட்டின் பராமரிப்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு சுங்கம் வசூலிக்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்பார்வையில் அனுமதிக்கப்படுகிறது.

மாநில நெடுஞ்சாலை - பச்சை நிறம்

வெண்மை நிற மைல் கல்லின் மேல் பச்சை நிறம் பூசப்பட்டிருந்தால், அது மாநில நெடுஞ்சாலையைக் குறிக்கிறது.மாநிலங்களுக்குள் மாவட்டங்களை இணைக்கும் வகையிலான இந்த ரோடு, கனரக வாகனங்கள் செல்லும் தரத்தில் அமைக்கப்படும். இந்த ரோட்டின் பராமரிப்பை மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும்.

மாவட்ட சாலை - நீல நிறம்

ஒரு மாவட்டத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலான ரோடுகள் மாவட்ட சாலையாகும். இந்த ரோடுகளின் ஓரங்களில் உள்ள வெண்மை நிற மைல் கற்களில், நீல நிறம் பூசப்பட்டிருக்கும்.

கிராமங்களை இணைக்கும் நகர சாலைகள் - இளம் சிவப்பு நிறம்

கிராமங்களை, நகரச் சாலைகளோடு இணைக்கும் மாவட்ட இதர சாலைகளில் உள்ள வெண்மை நிற மைல் கற்களுக்கு இளம்சிவப்பு நிறம் பூசப்படுகிறது.

இனிமேல், நீங்கள் பயணிக்கும் ரோடுகள் யாருக்கு சொந்தமானது என்பதை, மைல் கற்களில் பூசப்பட்டுள்ள நிறங்களை வைத்து எளிதில் கண்டுகொள்ளலாம். ரோடு பழுதடைந்து, பயணிக்க தகுதியற்றதாக இருப்பின் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளிப்பதும் எளிதாகும்.

Updated On: 12 Nov 2022 8:31 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  3. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  4. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  5. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  6. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு
  9. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்