/* */

அக்னி நட்சத்திரம் தோன்றியது எப்படி என்ற புராண கதை தெரியுமா?

அக்னி நட்சத்திரம் தோன்றிய இதிகாச கால வரலாறு என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

HIGHLIGHTS

அக்னி நட்சத்திரம் தோன்றியது எப்படி என்ற புராண கதை தெரியுமா?
X

கோடை காலத்தின் கொடூரம் அக்னி நட்சத்திரமாகும். அக்னி நட்சத்திரம்இன்று தொடங்கி வருகிற 28ம் தேதி வரை உள்ளது. அக்னி நட்சத்திர கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் இதற்கு கத்தரி வெயில் என்ற பெயரும் உண்டு.

விஞ்ஞானம் என்ன தான் வளர்ந்தாலும் இயற்கை தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. அந்த வகையில் ஐம்பெரும் பூதங்களில் ஒன்றான நெருப்புடன் தொடர்புடையது தான் இந்த அக்னி நட்சத்திரம். விஞ்ஞானத்திற்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்பு இருப்பதாகவே பல சம்பவங்கள் உலகம் தோன்றியது முதல் நடந்து வருகிறது.

வானசாஸ்திரத்துடன் தொடர்புடைய நட்சத்திரங்களின் மொத்த எண்ணிக்கை 27 . இதில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. அதன்படி இந்தவருடம் 4-5-22 முதல் 28-5-22 வரை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.

பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் பாதையில், முதல் நான்கு மாதங்கள் பூமிக்கு அருகில் இருந்தவாறு பயணப்படும். இந்த வழியை முதல் பரியாயம் என்பார்கள். இதற்கு ஐராவத வீதி என்ற பெயரும் உண்டு.

அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதை அக்னி தேவன். நெருப்பைத் தாங்கும் சக்தி படைத்தது கார்த்திகை நட்சத்திரம் என்று வானியல் நூல்கள் கூறுகின்றன.

இந்த அக்னி நட்சத்திரம் குறித்து புராணம் கூறும் தகவலைப் பார்ப்போமா?யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்துவளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். (இந்திரனுக்கு காண்டவவனன் என்ற பெயரும் உண்டு.)

இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார்.


அவர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து,உங்களைப் பார்த்தால் கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார்.

அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார். வந்திருப்பது அக்னி தேவன் என கண்டு கொண்டார். அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன்.

உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது.அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும் என்றான்.

அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?'' என்றான் அர்ச்சுனன். நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்தரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறான் என்றான்.

கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம் ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத்தூணியும் அம்புகளும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை என்றான்.

உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில், அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான். அப்பொழுது கண்ணன் அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம் என்றார்.


அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்தரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க "சரக்கூடு' ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.

அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான்.அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான்.

இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது. இந்த அக்னி நட்சத்திர நாட்களில் என்ன செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்றும் சாஸ்திரம் சொல்கிறது.

இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது. நார் உரிக்கக்கூடாது. விதை விதைக்கக்கூடாது. கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது. வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது. இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். தான- தர்மங்கள் செய்யலாம்; தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம்;


நோயாளிகளுக்கு இளநீர் தரலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம். ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்.அந்தணர்களுக்கு விசிறி தானம் அளிக்கலாம்.

அக்னி நட்சத்திரக் கால கட்டத்தில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி, அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் பானகம் வழங்குவதும் நல்ல பலன்களைத் தரும். பரணிக்குரிய துர்க்கையையும் ரோகிணிக்குரிய பிரம்மாவையும் சந்தனாபிஷேகம் செய்து வழிபட வாழ்வில் வசந்தம் வீசும்.

அக்னி நட்சத்திரக் காலகட்டத்தில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க, காலை வேளையில் பூஜையறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப் பலகையில் போட்டு, சூரிய காயத்திரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம் என்கிறது சாஸ்திரம்.

Updated On: 4 May 2022 12:34 PM GMT

Related News