/* */

கீழ வெண்மணியில் 45 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் பற்றி தேவாரம் என்ன சொல்கிறார்..? - பகுதி 4

கீழ வெண்மணியில் 45 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் பற்றி வால்டர் தேவாரம் கூறுவது என்ன என்பதை இன்றயை பகுதி 4 தொகுப்பில் பார்க்கலாம்.

HIGHLIGHTS

கீழ வெண்மணியில் 45 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் பற்றி தேவாரம் என்ன சொல்கிறார்..? - பகுதி 4
X

தமிழக காவல் துறையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆக பணியை தொடங்கி இறுதியாக காவல் துறையில் உயர் பதவியான டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வு பெற்றவர் வால்டர் தேவாரம். நக்சலைட் ஒழிப்பு விடுதலைப்புலிகள் என்கவுண்டர், வீரப்பன் ஆட்கள் வேட்டை, பல்வேறு இடங்களில் கலவரத்தை அடக்க துப்பாக்கி சூடு என தமிழக காவல்துறையில் இரும்பு மனிதர் போல் பணியாற்றி வந்த வால்டர் தேவாரம் தனது பணிக்காலத்தில் நடத்திய முதல் துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி நேற்று பார்த்தோம். இந்த சம்பவத்திற்கு பின்னர் நீலகிரி மாவட்டத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டார் தேவாரம்.


நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகள் பணி முடிந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அவர் எதற்காக மாற்றப்பட்டார் என்பது பற்றி இன்றைய பகுதி 4ல் பார்க்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் என்பது அப்போது ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது. இன்று தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை என நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு அவர் பணி மாற்றம் செய்யப்பட்டதற்கு முக்கியமான காரணம் நில உடமையாளர்களுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு பெரிய பிரச்னை தான். இந்த பிரச்னையை தீர்த்து வைப்பதற்காக தேவாரம் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக நாகப்பட்டினம் பகுதியில் நில உடமையாளர்களாக செல்வந்தர்கள் பலர் இருந்தனர்.அவர்களிடம் ராமநாதபுரம் மற்றும் மதுரை புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்தனர். இந்த விவசாய கூலி தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்தினார்கள் 'ஆண்டை' எனப்படும் நில பிரபுக்களிடம் வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கொடுப்பதில்லை. அதற்கு பதிலாக நெல் மற்றும் தானியங்களை தான் கொடுப்பார்கள். கூலி கேட்டால் சாணிப்பாலை தலையில் ஊற்றி, மின்கம்பத்தில் கட்டி வைத்து சவுக்கடி கொடுப்பது தான் செல்வந்தர்களின் வழக்கமாக இருந்தது. இதற்காக அவர்கள் தனித்தனியாக குண்டர் படை வைத்திருந்தார்கள்.

இது அப்போது முப்போகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரிய பிரச்னையாக இருந்து வந்தது. குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் எனக்கோரி விவசாய தொழிலாளர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவதும் நில உரிமையாளர்கள் தங்களது அடியாட்களை வைத்து அவர்களை தாக்குவதும் துப்பாக்கியால் சுடுவதும் அடிக்கடி நடக்கும் சம்பவங்களாக இருந்து வந்தன. இந்த பிரச்னையை அடக்குவதற்காக தான் தேவாரம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் எஸ். பி. ஆக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 19-ம் நூற்றாண்டின் மிகக் கொடூர சம்பவம் ஒன்று 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது. அது என்ன பெரிய கொடூர சம்பவம் என்பது இன்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்ச கூலி வழங்க கோரி நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள கீழவெண்மணி என்ற கிராமத்தில் போராட்டம் நடத்திய விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களின் ஆட்கள் தாக்கினார்கள். அவர்களுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

45 பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபி.

ஒரு கட்டத்தில் நில உரிமையாளர்கள் கோபாலகிருஷ்ணன் நாயுடு என்பவர் தலைமையில் விவசாய தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள். துப்பாக்கி சூட்டிற்கு பயந்து தொழிலாளர்களில் ஆண்கள் பெரும்பாலும் கிராமத்தை விட்டு ஓடி விட்டார்கள் .பெண்களும் குழந்தைகளும் அந்த கிராமத்தின் இறுதி பகுதியிலுள்ள ஒரு குடிசைக்குள் போய் ஒளிந்து கொண்டார்கள். அது எட்டடி நீளம் 5 அடி அகலம் கொண்ட ஒரு குறுகிய குடிசை ஆகும். கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாத கல்நெஞ்சம் படைத்த நில உரிமையாளர்களின் ஆட்கள் அந்த குடிசையின் கதவை வெளியில் இழுத்து போட்டி தீ வைத்து விட்டனர். இதில் மொத்தம் 45 பேர் உடல் கருகி பலியானார்கள். பலியானவர்களில் 20 பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது கல்நெஞ்சையும் கரைய வைக்கும் ஒரு சம்பவம் ஆகும். செய்த வேலைக்கு கூலி கேட்ட ஒரே குற்றத்திற்காக இவ்வளவு கொடூரமான சம்பவம் அன்று அரங்கேறி இருந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை போலீஸ் சூப்பிரண்டு வால்டர் தேவாரம் போய் நேரில் பார்வையிட்டார். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார். நீதி விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இந்த பிரச்சனை அத்துடன் முடியவில்லை. மிகப் பெரிய ஒரு போராட்டத்திற்கு அது தொடக்கமாக அமைந்ததாகவே தேவாரம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் தமிழக அரசு விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்து ஒரு சட்டத்தை இயற்றியது. ஆனாலும் நில உரிமையாளர்களுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் இடையே அறுவடை மற்றும் சாகுபடி நேரங்களில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி தன்னை அழைத்து இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது என்பது பற்றி ஆலோசனை நடத்தியதாக தேவாரம் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் ஒரு நடவடிக்கையாக பரந்து விரிந்த பரப்பளவை கொண்ட தஞ்சை மாவட்டம் மேல தஞ்சை, கீழ தஞ்சை என இரண்டாக பிரிக்கப்பட்டது. மேல தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் கும்பகோணம் உள்ளிட்ட நகரப் பகுதிகளை அடங்கியதாகவும்,கீழ தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு இயங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு கீழ தஞ்சை மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பரின்டாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இந்த பிரச்னைக்கு ஓரளவு முடிவு ஏற்பட்டது என்று தேவாரம் குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை ஒரு முடிவுக்கு வந்த நிலையில் தமிழகத்தில் வேலூர் பகுதியில் நக்சலைட் பிரச்னை புதிதாக வேரூன்றியது. இதனை அடக்குவதற்கு சரியான அதிகாரி வால்டர் தேவாரம் தான் என்பதை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி முடிவு செய்தார். இதற்காக அவரை வேலூருக்கு மாற்றம் முடிவு செய்தார். வேலூர் பகுதியில் அவர் நக்சலைட்டுகளை எப்படி ஒழித்தார் என்பது பற்றி நாளை பார்க்கலாம் (இன்னும் வரும்).

Updated On: 23 Nov 2022 9:03 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...