ரூ.30 லட்சம் மோசடி வழக்கு: கோவை ஆவின் ஊழியர் சஸ்பெண்ட்
ரூ.30 லட்சம் மோசடி வழக்கு தொடர்பாக கோவை ஆவின் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS

வேலை வாங்கி தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்த வழக்கில் கோவை ஆவின் தொழில்நுட்ப ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் பேயோடு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 61). இவர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் விற்பனையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு கோவை ஆவின் பால் உற்பத்தி தொழில்நுட்ப ஊழியர் சகாய முத்தையா (வயது 48 ),கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய இளநிலை செயலாளர் ஐயப்பன், கன்னியாகுமரி மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றிய இளநிலை செயலாளர் பழனி, நாகர்கோவில் ராமவர்மபுரத்தைச் சேர்ந்த சரஸ்வதி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர்கள் பால் உற்பத்தியாளர் மேலாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும் ரூ. 30 லட்சம் கொடுத்தால் தங்களின் மகனுக்கு அந்த வேலையை வாங்கி கொடுப்பதாக ரங்கசாமியிடம் கூறியுள்ளனர். அதை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ. 30 லட்சத்தை ரங்கசாமி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-2- 2020 அன்று புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது/ அதை ரங்கசாமியின் மகன் பிரசாந்த் எழுதினார்/
அப்போது பணத்தைப் பெற்றவர்கள் வேலைக்கான உத்தரவு வந்துவிடும் என்று கூறியுள்ளனர். ஆனால் உத்தரவு எதுவும் வராததால் அதிர்ச்சி அடைந்த ரங்கசாமி பணத்தை திரும்ப கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரங்கசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து மோசடி தொடர்பாக ரங்கசாமி கன்னியாகுமரி மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த கோர்ட் இது குறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
அதன் பேரில் கோவை ஆவின் பால் உற்பத்தி தொழில்நுட்ப ஊழியர் சகாயமுத்தையா, ஐயப்பன், பழனி, சரஸ்வதி ஆகிய நான்கு பேர் மீதும் கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மோசடி வழக்கில் தொடர்புடைய கோவை ஆவின்பால் உற்பத்தி தொழில்நுட்ப ஊழியர் சகாய முத்தையாவை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து கோவை ஆவின் பொது மேலாளர் ராமநாதன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.