/* */

மீன்கள் இனப்பெருக்க காலம்: வங்கக் கடலில் 61 நாள்களுக்கு மீன்பிடிக்கத் தடை

கிழக்கு கடலோர வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க ஆண்டு தோறும் விதிக்கப்படும் 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை தொடங்கியது

HIGHLIGHTS

மீன்கள் இனப்பெருக்க காலம்: வங்கக் கடலில் 61 நாள்களுக்கு மீன்பிடிக்கத் தடை
X

மீன்பிடித்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் - கோப்புப்படம் 

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு வங்கக் கடலில் 61 நாள்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்கு கடலோர வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க ஆண்டுதோறும் விதிக்கப்படும் 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை தொடங்கியது. .

கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும். இதனால் படிப்படியாக மீன்வளம் குறையும் அபாயம் ஏற்படும் எனக் கருதி வங்கக் கடல் பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க கடந்த 2000-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. இத்தடை காலம் முதலில் 45 நாள்களாக இருந்து வந்த நிலையில் 2017-ம் ஆண்டு முதல் இத்தடை காலம் 61 நாள்களாக அதிகரிக்கப்பட்டது.

இதனையடுத்து கிழக்கு கடலோர மாநிலங்களில் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களும் இதனை ஏற்றுகொண்டுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டும் ஏப்.15 சனிக்கிழமை இரவு முதல் எந்த ஒரு விசைப்படகும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் சுமார் 20 குதிரை சக்திக்கு குறைவான பைபர் படகுகள், கட்டுமரங்களில் மீன்பிடிக்க எவ்வித தடையும் இல்லை. சென்னை காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமார் 1,200 விசைப்படகுகளும், தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் விசைப்படகுகளும் இத்தடையில் பங்கேற்க உள்ளன. இத்தடைகாலம் வரும் ஜூன் 14-ம் தேதி முடிவுக்கு வரும். இத்தடை காலத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள், சார்பு தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்து வகை மோட்டார் படகுகளுக்கும் தடை விதிக்க கோரிக்கை:

இது குறித்து கடல்சார் மக்கள் நல சங்கமத்தின் தலைவர் எல்.பிரவீண்குமார் கூறியது: மீன்பிடித் தடைக்காலம் என்பது கடல் வளத்தை பாதுகாக்கும் ஒரு உன்னத நடவடிக்கையாகும். மீனவர்களின் வாழ்வா தாரமே மீன்வளமிக்க கடலில்தான் அடங்கியுள்ளது என்பதால்தான் பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களைக் கடந்து இந்த தடைகாலத்திற்கு அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இத்தடையால் படகு உரிமையாளர்கள், கூலித்தொழிலாளிகள் என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மீனவ குடும்பம் ஒன்றுக்கு இந்த ஆண்டிலிருந்து உதவித் தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானது அல்ல. ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.350 வீதம் 61 நாள்களுக்கு கணக்கிட்டு மொத்தமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். படகு உரிமையாளர்களின் பொருளாதார நிலைமையைக் கணக்கில் கொண்டு அவர்களின் படகுகளை பராமரிக்கவும், மீன்பிடி வலைகளை பாதுகாக்கவும் போதிய உதவித் தொகையை வழங்க வேண்டும்.

மீன்வளத்தை அதிகரிக்க விசைப் படகுகளுக்கு மட்டும் தடைவிதிப்பதால் பெரிய அளவில் மீன் இனப் பெருக்கம் ஏற்படாது. ஏனெனில் மீன்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்வது ஆற்று முகத்துவாரங்களில்தான். எனவே இவற்றைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும். அபாயகரமான கழிவுகளை கடலில் விடுவதைத் தடுக்க வேண்டும். மேலும் மீன்களின் இனப்பெருக் கம் குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை மீனவர்களுக்கு விளக்கிட வேண்டும்.. விசைப் படகுகளுக்கு மட்டுமே தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுமரங்களைத் தவிர மோட்டார் பொருத்திய பைபர் உள்ளிட்ட அனைத்து வகை படகுகளுக்கு தடைவிதித்தால் மட்டுமே மீன்கள் இனப்பெருக் கத்தை முழுமையாக காப்பாற்றிட முடியும். இதில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் பிரவீண்குமார்

வரத்து குறைவதால் மீன்கள் விலை அதிகரிக்கும்?

சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள் மூலம்தான் அதிக அளவில் மீன்கள் பிடித்துக் வரப்படுகின்றன. மேலும் சென்னை மாநகர மக்களால் விரும்பி உண்ணப்படும் வஞ்சிரம், வவ்வால், சங்கரா, ஊழா, நண்டு, இறால் உள்ளிட்ட மீன் வகைகள் விசைப்படகுகள் மூலம்தான் பிடித்து வரப்பபடுகின்றன. எனவே தற்போது இத்தடைகாலம் தொடங்கியுள்ளதால் மீன்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விலையும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மேற்கு கடலோரத்தில் பிடிபடும் மீன்கள், கட்டுமரங்கள், பைபர் படகுகள் மூலம் குறைந்த ஆழத்தில் பிடிபடும் சிறிய வகை மீன்கள் தொடர்ந்து கிடைக்கும். மேலும் தடை காலம் தொடங்கப்படாத கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து சென்னைக்கு மீன் வரத்து இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 16 April 2023 8:45 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  2. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  3. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  4. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  5. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  6. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  7. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  8. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  9. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  10. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...