/* */

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி? தேர்தல் பணிக்குழு அமைத்தது

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க .தேர்தல் பணிக்குழு அமைத்து இருப்பதால் தனித்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி? தேர்தல் பணிக்குழு அமைத்தது
X

நயினார் நாகேந்திரன்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதல் ஆளாக தேர்தல் பணி குழு அமைத்துள்ளதால் அது தனித்து போட்டியிட திட்டமிட்டு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த நான்காம் தேதி மரணமடைந்தார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது மறைவு தமிழக அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் திருமகன் ஈ.வெ.ரா மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 10ஆம் நாள் கடைசி நாளாகும்.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் இரண்டாம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளரை தேர்வு செய்து அறிவிப்பதிலும் தேர்தல் பணியை தொடங்குவதிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்த தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜ் போட்டியிட்டார். இதில் யுவராஜை சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருமகன் ஈ.வெ.ரா. வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அந்த தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . அ.தி.மு.க. கூட்டணியிலும் அந்த தொகுதி பா.ம.க.விற்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கேட்டுள்ளார்.

கூட்டணி கட்சி வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் முக்கிய கட்சியாகவும், மத்தியில் ஆளுங்கட்சியாகவும் உள்ள பாரதிய ஜனதா கட்சி தேர்தல் களத்தில் முந்திக்கொண்டு முதல் ஆளாக ஈரோடு கிழக்கு சட்மன்ற தொகுதிக்கான தேர்தல் பணி குழுவை அமைத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், முன்னாள் அமைச்சர்ருமான நயினார் நாகேந்திரன் கூறுகையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் பணி குழு தான். அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருப்பதால் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட்டாலும் நாங்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம். அதற்காகத்தான் இந்த தேர்தல் பணி குழு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடலூரில் பாரதீய ஜனதா கட்சியின் மைய குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருவதை பார்த்தால் அது இந்த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டு இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. ஏனென்றால் தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க. தற்போது வரை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் தற்போது உள்ள சூழலில் அ.தி.மு.க. இ.பி.எஸ், ஓ.பி.எஸ். என இரு அணிகளாக செயல்பட்டு வருவதால் பலவீனமாக உள்ளது. இந்த இரு பிரிவில் யாருக்கு உண்மையான உரிமை இருக்கிறது என்பதற்கான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேலும் அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கே உரிமை கோரி மனு அளித்து உள்ளனர். இதில் தேர்தல் ஆணையம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் அ.தி.மு.க. வேட்பாளரை நிறுத்தினால் அவர்களது வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நிற்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டணி கட்சியான த.மா.கா.விற்கு ஒதுக்கினால் அதனை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளுமா? என தெரியவில்லை. இதுபோன்ற காரணங்களால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. தனது பலம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக தனியாக மேலிட அனுமதியுடன் இந்த இடைத்தேர்தல் களத்தை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே பா.ஜ.க. முதல் ஆளாக தேர்தல் பணிக்குழு அமைத்து இருப்பதாகவும், மைய குழு கூட்டத்தை நடத்த இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Updated On: 20 Jan 2023 5:16 AM GMT

Related News