/* */

வேளாண்விரிவாக்க மையங்களில் மானிய விலையில் கடலைவிதைகள் உயிர் உரங்கள் விற்பனை

தேசிய உணவு பாதுகாப்பு எண்ணெய் வித்து திட்டத்தில் இதே இரகங்களுக்கு கிலோவிற்கு ரூ.40 மானியம் வழங்கப்பபடும்

HIGHLIGHTS

வேளாண்விரிவாக்க மையங்களில்  மானிய விலையில் கடலைவிதைகள் உயிர் உரங்கள் விற்பனை
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட தகவல்: அரியலூர் மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்கள் சுமார் 10,000 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. காரிப் பருவத்தில் சுமார் 3,500 எக்டரில் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. எண்ணெய் வித்து பயிர்களில் முதன்மை பயிரிராக கடலை உள்ளது. நடப்பு வைகாசி பட்டத்திற்கு கடலை விதைப்பு செய்ய தேவையான, சான்று பெற்ற விதைகள் போதுமான அளவில் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் (GJG9, GJG31, ICGV00350, TMV14 மற்றும் கதிரி1812 போன்ற இரகங்களுக்கு விதை கிராம திட்டத்தில் கிலோவிற்கு ரூ.36 மானியம் வழங்கப்பபடும். தேசிய உணவு பாதுகாப்பு எண்ணெய் வித்து திட்டத்தில் இதே இரகங்களுக்கு கிலோவிற்கு ரூ.40 மானியம் வழங்கப்பபடும்.தற்போது GJG9 37000 கிலோ, GJG31 500 கிலோ, ICGV00350 800 கிலோ, TMV14 200 கிலோ மற்றும் கதிரி1812 ரகம் 3100 கிலோ ஆகிய அளவுகளில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளது.

மேலும், கடலை விதை விதைக்கும் தள்ளு இயந்திர கருவியின் மூலம் விதைப்பு செய்யலாம். இதனால், சரியான இடைவெளியில் விதைப்பு செய்யப்படுவதுடன், தேவையான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. இக்கருவியின் மூலம் விதைப்பு செய்வதனால், ஏக்கருக்கு ரூபாய் 3000 முதல் 3500 வரை சாகுபடி செலவினை மிச்சப்படுத்தலாம். மண் பரிசோதனைப்படி உரமிடலாம். தவறினால், தொழு உரம் ஏக்கருக்கு 5 டன் இட வேண்டும்.

தழைச்சத்து மற்றும் மணிச்சத்து கிடைத்திட ரைசோபியம் (கடலை) மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை எருவுடன் கலந்து விதைப்பிக்கு பின் தூவும் போது வளிமண்டலத்திலிருந்து தழைச்சத்து அதிக அளவு கிரகிக்கப்படுகிறது. மேலும் மண்ணிலுள்ள மணிசத்தும் பயிருக்கு எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. கடலை வேர் அழுகல்; நோயை கட்டுப்படுத்த ட்ரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், கடலை நுண்சத்து ஏக்கருக்கு 5 கிலோ இடுவதால் கடலையில் எண்ணெய் சத்து அதிகரிப்பதுடன், கொத்தான கடலையுடன் திரட்சியான கடலை கிடைக்கும். அடியுரமாக ஏக்கருக்கு 12 கிலோ யூரியா, 2.5 மூட்டை சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றை கலந்து இட வேண்டும். கடைசி உழவின் போது 80 கிலோ ஜிப்சம் இட வேண்டும். மேலுரம் 25ம் நாள் மற்றும் 45ம் நாட்களில் ஏக்கருக்கு யூரியா 5 கிலோ பொட்டாஷ் 12 கிலோ ஆகியவற்றை ஒவ்வொரு முறையும் இட வேண்டும். வரப்பு பயிராக உளுந்து பயிரும் ஓரப்பயிராக துவரை அல்லது எள் விதைக்கலாம். இதனால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் பூச்சிக்கொல்லி பயன்பாட்டினையும் குறைக்கலாம்.

கடலை விதைத்த நாள் முதல் விதைத்த 30 நாட்களுக்குள் குறைந்த அளவில் நீர் பாய்ச்ச வேண்டும். இதனால், அதிக வளர்ச்சி குறைந்து கடலை காய்கள் அதிகம் உருவாக வாய்ப்பாகும். இரண்டாம் களை எடுக்கும் தருணத்தில் ஏக்கருக்கு இரண்டாம் தவணையாக 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். இதனால், விழுதுகள் எளிதாக மண்ணில் இறங்குவதுடன் பொக்கு கடலை இல்லாமல் திரட்சியான கடலை உருவாகும்.

கடலையில் கூடுதல் மகசூல் பெற ஊட்ட சத்துக்கலவையை 25 மற்றும் 35ம் நாள் என இரண்டு முறை தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு இதனை தயாரிக்க 1 கிலோ டிஏபி 400 கிராம் அம்மோனியம் சல்பேட், போராக்ஸ் 200 கிராம் இவற்றை 15 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலை வடிகட்டி 185 லிட்டர் தண்ணீருடன் பிளோனோபிக்ஸ் 140 மிலி கலந்து தெளிக்க வேண்டும். அல்லது உடனடி கலவையான கடலை ரிச் கலவையை 2.5 கிலோவை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து 35 மற்றும் 45ம் நாள் என இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதனால் 15 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

கடலை விதைகள் டிரைகோடெர்மா விரிடி, உயிர் உரங்கள் மற்றும் கடலை நுண்சத்து போன்றவற்றை வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் பெற்று விவசாயிகள் பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 20 May 2022 12:12 PM GMT

Related News