பறவைகளையும் விட்டு வைக்காத பனிப்பொழிவு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனிபொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதியுற்றனர்.
அரியலூர் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களிலும் கடந்த சில தினங்களாக லேசான பனிப்பொழிவு இருந்து வந்தது. இருப்பினும் காலை 6 மணி அளவில் சூரியன் வருகையால் படிப்படியாக பனி குறைந்தது. ஆனால் இன்று சுமார் காலை 8.30 மணி வரை பனி கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் செல்பவர்களுக்கு எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு காணப்பட்டது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பனிப்பொழிவால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பறவைகளும் இதில் தப்பவில்லை. மரஉச்சியில் இருந்து தரைப்பகுதியில் உள்ள சிறுகிளைகளுக்கு இறங்கி தங்களது சிறகுகளை விரித்து வார்ம்அப் செய்து கொண்டன. மழை போல் கொட்டும் பனியில் மரக்கிளைகளில் அமர்ந்து இறக்கைகளை உலர்த்தி வருகின்றன.