/* */

பின்னடைவை சந்தித்த வேளாண்துறை; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு

நடைமுறைக்கு ஒத்துவராத திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், தமிழக வேளாண்மைத்துறை பெரும் பின்னடைவை சந்தித்து வருவதாக, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

HIGHLIGHTS

பின்னடைவை சந்தித்த வேளாண்துறை; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு
X

பின்னடைவை சந்திக்கும் வேளாண் துறை; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு ( கோப்பு படம்)

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

வேளாண்மைத் துறையில் களப்பணியாளர்கள், ஒவ்வொரு விவசாயிகளின் தோட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று, பயிர்களுக்கு தக்கவாறும், பட்டங்களுக்கு தகுந்தவாறும் தகுந்த தொழில்நுட்பங்களை வழங்கி வந்தனர். தற்போதைய நிலையில் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கூறாமல், ஆவணப்படுத்துவது மட்டுமே முக்கிய பணியாக வேளாண்மைத்துறை செய்து வருகிறது.

எந்த ஒரு திட்டத்தை அரசு கொண்டு வந்தாலும், அதன் முழு பரிணாமங்களை களப்பணியாளர்களிடம தெரிவித்து, அதன் பிறகு பயனாளிகளை தேர்வு செய்து, அந்தத் திட்டத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பது, வட்டார அளவில் உள்ள அனைத்து பணியாளர்களின் முக்கிய கடமை.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் திட்டங்கள் வருவதற்கு முன்பே பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று மாநில அளவில், வேளாண்மை துறை இயக்குனரும், வேளாண்மைத் துறை இயக்குனர் இயக்குனர் அலுவலகத்தில் உள்ள இணை மற்றும் துணை இயக்குனர் பதவியில் உள்ள நபர்களும், மாவட்ட மற்றும் வட்டார அளவில் உள்ள அலுவலர்களை கட்டாயப்படுத்துகின்றனர்.

திட்டம் என்னவென்றே தெரியாமல் பயனாளிகளைத் தேர்வு செய்வதில் என்ன நன்மை கிடைக்கப் போகிறது என்பது கூட தெரியாமல், மத்திய அரசிடம் வாங்கும் தொகையை செலவழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இவ்வாறு வேளாண்மை துறை செயல்பட்டு வருவது, விவசாய பெருமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

வெங்காயம் மற்றும் தேங்காய் போன்ற விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பது, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வாயிலாக கொப்பரை கொள்முதல் செய்யாமல் இருப்பது, தொடக்க வேளாண்மை சங்கங்களில் உரத்தட்டுப்பாடு, தனியார் உர கடைகளை கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வது, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் ஆள் பற்றாக்குறை மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகப்படியான சம்பளம் போன்ற கள நிலவரங்கள் எதையும் அரசு உயர் அலுவலர்கள் கருத்தில் கொள்ளாமல், டிஜிட்டல் மயமாக்குவதை மட்டுமே முக்கிய பணியாகக் கொண்டு செயல்படுத்தி வருவது, நிச்சயம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறினால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் ஒரேமாதிரியாக திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

மாநிலம் முழுமைக்கும் ஒரே மாதிரியான நில அமைப்பு கிடையாது. தஞ்சாவூர் திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் ஒருவகையான நிலவியல் அமைப்புகளும், மேற்கு மண்டலத்தில் ஒருவகையான நிலவியல் அமைப்புகளும், சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் மாவட்டங்களில் வேறுவகையான நிலவியல் அமைப்புகளும் இருக்கும் சூழ்நிலையில், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த இயலும்?

கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 300 அடிக்கும் குறைவாக ஆழ்துளை குழாய் போர்வெல் அமைக்க இயலும். அதேசமயம் சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் ஆள்துளை குழாய் அமைக்க முற்படும் பொழுது, வெறும் புகை மட்டுமே வருகிறது.

இதனை களப்பணியாளர்கள் - வட்டார/மாவட்ட அளவில் உள்ள அலுவலர்களிடமும் தெரிவித்தாலும், அவர்கள் அதனை மாநில அளவிலான அதிகாரிகளிடம் தெரிவிக்க முற்படுவது கிடையாது.

மாநில அளவில் வேளாண்மை இயக்குனர் தலைமையில், காணொளி முறையில் திட்டங்கள் பற்றிய விளக்கங்கள் தெரிவிக்கப்படும் பொழுது களப்பணியாளர்கள் கூறிய எந்த பிரச்சினைகளையும் மாவட்ட அளவிலான அதிகாரிகளும் வட்டார அளவிலான அதிகாரிகளும் இயக்குனரிடமும் அரசு முதன்மைச் செயலாளரிடமும் தெரிவிப்பது கிடையாது.

இதனால், கள நிலவரங்கள் என்ன என்பதை அரசு முழுவதும் அறிந்து கொள்ள இயலாமல் தவறான திட்டங்களை தீட்டி விவசாயிகளிடம் திணிக்க பார்க்கிறது. 15 ரூபாய்க்கு ஒரு விதை பொட்டலத்தை விவசாயிகளிடம் கொடுத்து விட்டு, அதை ஆவணப் படுத்துவதற்கு 100 ரூபாய் களப்பணியாளர் செலவழிக்க வேண்டும் என்ற நிலையிலேயே வேளாண்மை மற்றும் அதன் சார்பு துறைகள் இருக்கின்றன.

ஆவணப்படுத்துவது மட்டுமே அரசின் தலையாய நோக்கம் என்றால், களப்பணியாளர்கள் ஆவணப்படுத்தும் பணியை மட்டுமே சிரமத்தோடு மேற்கொண்டு செய்யவேண்டிய சூழ்நிலை இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு தேவையான தகுந்த தொழில்நுட்பங்களை அவர்களால் வழங்க இயலாது,

மாவட்ட அளவில் வேளாண்மை துறை உயர் அலுவலர்கள் விருப்ப ஓய்வு பெறுவதையே பெரும்பாலும் விரும்பும் சூழ்நிலையிலும், களப்பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உட்படும் சூழ்நிலையிலும் இருக்கின்றனர்.

களநிலவரங்களை உயர் அலுவலர்களுக்கு காணொளி முறையில் தெரிவிக்கும் போது, அவர்களுக்கு மெமோ கொடுத்துவிடுகிறார்கள் அல்லது பணியிடமாற்றம் செய்து விடுகிறார்கள்.

வேறு எந்த அரசுத் துறையிலும் இல்லாத வகையில், மாநில இயக்குநரிடம், களநிலவரங்களை தெரிவிக்கும் அலுவலர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து விடும் அவல நிலை வேளாண்மைத் துறையில் இருக்கிறது.

இதனால் மாவட்ட மற்றும் வட்டார உயர் அலுவலர்கள், வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில், கள நிலவரத்தை சொல்வதற்கு பயப்படும் சூழ்நிலையும் இருக்கிறது. நமக்கு எதுக்கு வம்பு? வரும் இலக்குகளை களப்பணியாளர்களுக்கு பிரித்துக் கொடுப்பதுடன் நமது வேலை முடிந்துவிடுகிறது.

வேலை முடியாவிட்டால், களப்பணியாளர்கள்தான் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள், இதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற மனநிலையில், மாவட்ட அளவிலான அலுவலர்களும், வட்டார அளவிலான அலுவலர்களும் செயல்படுவதால், இயல்பு நிலையை அரசாங்கம் நிச்சயம் தெரிந்து கொள்ள இயலாது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் பொழுது ஏதேனும் ஒரு மாவட்டத்தில் அல்லது குறிப்பிட்ட பகுதியிலோ அரசாங்கம் கொண்டுவரும் திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டால் நிச்சயமாக களப்பணியாளரையே சாரும்.

ஆனால், ஒட்டுமொத்த மாவட்டங்களிலும் சுணக்கம் ஏற்படும் பொழுது நிச்சயம் பணியாளர்களின் மேல் தவறு இல்லை; திட்டத்திலேயே கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது என்பதை அரசாங்கம் உணர்ந்து, அதன் அடிப்படையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தினால் மட்டுமே, மீதமுள்ள விவசாய பெருமக்களை விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாறாத வண்ணம் காப்பாற்ற இயலும்.

மானியம் என்ற பெயரில்,சந்தை விலையை விட இருமடங்கு விலை நிர்ணயம் செய்து சிறிதளவு விலையை குறைத்து மானியமாக விவசாயிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளிடம் வெறுப்பையே வேளாண்மை துறை அலுவலர்கள் பெறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

குடி தண்ணீருக்கு பற்றாக்குறையாக இருக்கும் வட்டாரங்களில், நீரில் கரையும் உரங்களை கொடுப்பது விவசாயிகளிடம் மேலும் வெறுப்பையே சம்பாதிக்க வைக்கிறது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஆய்வுக்கூடம் அமைத்து லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் பணியாளர்களை பணியமர்த்தி, விவசாயிகளுக்கு தேவையில்லாத செயல்களை செய்வதற்கு பதிலாக, அரசாங்கம் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேறு கோணங்களில் முயற்சி செய்ய வேண்டும்.

களப் பணியாளர்களின் எண்ணிக்கையை விட, கண்காணிக்கும் அலுவலர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதால் எந்த வேலையை பணியாளரிடம் வாங்குவது என்பது கூட தெரியாமல் வேளாண்மை துறை சுழன்று கொண்டு இருக்கிறது.

வேளாண்மைத் துறையை டிஜிட்டல் மயமாக மாற்றுவதால் நிச்சயம் விவசாயிகளின் வாழ்வில் எந்த புரட்சி ஏற்படபோவது கிடையாது. அரசு கொடுக்கும் பெரும்பாலான மானியங்களை விவசாயிகள் விரும்புவது கிடையாது என்பதை வட்டார/ மாவட்ட அலுவலர்கள்,மாநில உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பது கூட கிடையாது. அவ்வாறு தகவல் கொடுத்தால்,நிச்சயம் தகவல் கொடுத்த அலுவலர்கள் பணியிட மாற்றம் அல்லது கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார்கள்.

வீடியோ கான்பிரன்ஸ் முறை மற்றும் ஆய்வு கூட்டம் என்பது இரு வழிப்பாதையாக இருக்க வேண்டும்.ஆனால், சென்னையில் உள்ள அலுவலர்கள் கொடுக்கும் செய்தியை களப் பணியாளர்களுக்கு கொடுக்கும் ஒரு வழிப்பாதையாக மட்டுமே வீடியோ கான்பிரன்ஸ் பயன்படுகிறது.விதைச் சான்றளிப்பு துறை என்ற துறை, மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. ஆனாலும் போலி மற்றும் தரமற்ற விதைகளால்,வருடாவருடம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதும், இழப்பீடு கேட்கும் விவசாயிகள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலையிலும் இருக்கிறார்கள்.

குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு விவசாயிக்கு 20 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. 20 கிலோ விதை நெல்லை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு விவசாயி என்ன விவசாயம் செய்ய முடியும்? என்பதை அரசுக்கு தெரிவிக்க யாரும் முன்வருவது கிடையாது.

மின்சாரம், சிலிண்டர் போன்ற துறைகளுக்கு டிஜிட்டல் முறையில் OTP என்பது கட்டாயம் என்று தொழில்நுட்பம் இருக்கும் நிலையில், விவசாயத்துறைக்கும் அதை கொண்டுவருவது 100% தோல்வியையே தழுவும். மின்சார வாரியத்தில் ஒரு விவசாயி ஏதேனும் ஒரு பயனை பெரும் பொழுது, அந்தப் பயனை தனியார் இடத்தில் இருந்து பெற இயலாது. ஆனால் வேளாண்மை துறை என்பது அவ்வாறு கிடையாது. வேளாண்மை துறை அலுவலர்களை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்து, ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத்துறை,

கூட்டுறவுத்துறை போன்ற அலுவலர்களுடன் இணக்கமாக இருந்து பணிபுரிய, அரசாங்கம் வேளாண்மைதுறை பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளது. அதே சமயத்தில் இதைப் பற்றிய விபரங்களோ குறிப்புகளோ தகவல்களோ ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்களுக்கு சென்றடைவது கிடையாது. கிராமஅளவில் விவசாயிகளுக்கு மீட்டிங் நடத்தும் போது, வேளாண்மைத் துறையை தவிர எந்தத் துறை அலுவலர்களும் பங்கேற்பது கிடையாது. அவர்களிடம் கேட்கும் பொழுது எங்களுக்கு இதுவரை தகவல் எதுவும் இல்லை என்ற பதிலும், இதை விட முக்கியமான வேலை கலெக்டர் அலுவலகத்தில் இருந்தது என்பன போன்ற பதில்கள்தான் தொடர்ச்சியாக வருகிறது. இது போன்றே அத்தனை திட்டங்களிலும் நடைமுறைக்கு ஒத்துவராத விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால் வேளாண்மைத்துறை பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

Updated On: 20 Nov 2022 8:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...