/* */

கோர்ட்-கேஸ்-ஆள் சேர்ப்பு: என்ன தான் நடக்கிறது அ.தி.மு.க.வில்?

இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தரப்பினர் கோர்ட், கேஸ், ஆள் சேர்ப்பு என இருப்பதால் அ.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்குமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

HIGHLIGHTS

கோர்ட்-கேஸ்-ஆள் சேர்ப்பு:   என்ன தான் நடக்கிறது அ.தி.மு.க.வில்?
X

ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு பக்கம் ஓ.பி.எஸ்.ஸும், தாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்று சொல்லி வருகிறார்கள். இவர்களின் அதிரடிகளால் அ.தி.மு.க.வில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவதற்காக ஓ.பி.எஸ், சசிகலா மற்றும் தினகரனுடன் இணையவும் கூடும் என்றும் தகவல்கள் றெக்கை கட்டி பறந்து வருகின்றன..

மற்றொரு பக்கம் தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, போட்டி பொதுக்குழுவுக்கும் தயாராகி வருகிறார் ஓ.பி.எஸ். இதற்கு நடுவில், சுற்றுப்பயணத்தையும் தொடங்கி உள்ளார். ஓ.பி.எஸ்.ஸின் இந்த சுற்றுப்பயணம், நிறைய ஆதரவாளர்களை அவருக்கு பெற்றுத்தரும் என்றும் சொல்கிறார்கள். அன்று, மதுரையில் இருந்து தேனி செல்லும் வரை கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசியதன் சூட்சுமமே இதுதான் என்கிறார்கள் தென்மண்டல அ.தி.மு.க.வினர்.

ஓ.பி.எஸ். சுற்றுப்பயணம் தொடங்கிய அதேசமயம், சசிகலாவும் சென்னையில் தன்னுடைய சுற்றுப் பயணத்தை தொடங்கியதும் இங்கு கவனத்தை பெற்று வருகிறது என்றாலும், எடப்பாடி பழனிசாமி டீமை வீழ்த்துவதற்காக மேலும் சில விஷயங்களை கையில் எடுத்துள்ளாராம் ஓ.பி.எஸ். கடந்த 10 நாட்களாகவே, அதாவது பிரதமர் மோடி சென்னை வந்து சென்ற பிறகு, ஓ.பி.எஸ்.ஸின் அரசியலில் புது வேகம் தென்படுவதாக சொல்கிறார்கள். தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து, அவர்களது ஆலோசனைகளை பெற்று வரும் நிலையில், 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்று ஓ.பி.எஸ். தரப்பு பிடிவாதமாக இருக்கிறதாம்.

முதல் விஷயமாக, தங்களுக்குகென்று ஒரு கட்சி அலுவலகத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. எடப்பாடி கைக்கு கட்சி ஆபீஸ் சென்றிருந்தாலும், சாவியை அவரிடம் ஒப்படைக்ககூடாது என்று ஓ.பி.எஸ். கோர்ட்டுக்கு சென்றுள்ளார். அதனால், இந்த வழக்கு விசாரணை முடியும்வரை, கட்சி அலுவலகத்தை யாரும் பயன்படுத்த முடியாது. இது ஓ.பி.எஸ்.ஸுக்கு தற்காலிக நிம்மதி என்றாலும், தங்களுக்காக எப்போதுமே ஒரு அலுவலகம் இருப்பது, பலத்தை அதிகரிக்கும் என்று நம்புகிறார்.

தன்னுடைய வீட்டிலேயே, ஆதரவாளர்கள், தொண்டர்களை தினமும் சந்தித்து வந்த நிலையில்தான், ஓ.பி.எஸ்ஸுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. எனவே, வீடுகளிலும் இனி யாரையும் சந்திக்க முடியாத சூழல் உள்ளது. மேலும் ஒவ்வொரு முறையும், நிர்வாகிகளை ஹோட்டல்களிலும், மண்டபங்களிலும் சந்திக்க வேண்டி இருப்பதால், ஆபீஸ் ஒன்றை திறந்தே ஆக வேண்டும் என்கிறாராம். இதையடுத்து, சென்னையிலேயே அலுவலகம் எங்கு திறக்கலாம் என்று தேடி வருகிறார்களாம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.

அடுத்ததாக, பொதுமக்களிடம், தங்களை பற்றின செய்திகள், கருத்துக்கள், முடிவுகள், அறிவிப்புகள் அனைத்தும் சென்றடைய வேண்டும் என்றால், சோஷியல் மீடியாவை பலப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாம்.. அ.தி.மு.க.வுக்கு இத்தனை காலமும் இருந்த டி.வி. சேனல், 'நமது அம்மா' பத்திரிகைகள் என அனைத்துமே எடப்பாடி தரப்புக்கு சென்றுவிட்டதால், புது சேனல் ஒன்றை தொடங்கலாம் என்ற திட்டம் உள்ளதாம். ஆனால், அது இப்போதே, உடனே சாத்தியம் இல்லை என்பதால், யூடியூப், பத்திரிகை மற்றும் சமூகவலை தளங்களில் கவனம் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.. இதன்மூலம் தங்கள் தரப்பின் பலத்தை பொதுவெளியில் காட்ட முடியும் என்று நம்பப்படுகிறது.

அடுத்ததாக, எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க.வாக உருவாக்க வேண்டும் என்பது அடுத்த பிளானாம். தற்சமயம் வரை எடப்பாடி பக்கம் 90 சதவீத ஆதரவாளர்கள் உள்ளதாக தெரிகிறது. ஆனால், இவர்களில் பல அதிருப்தியாளர்களும் உண்டு. அத்தகைய அதிருப்தியாளர்களுக்கு போஸ்டிங் தருவதாக சொல்லி, தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளையும் கடந்த 10 நாட்களாகவே ஓ.பி.எஸ். டீம் செய்து வருகிறது. இதில் பல முக்கிய சீனியர்கள் சிக்கிவிட்டதாகவும், விரைவில் அவர்கள் ஓ.பி.எஸ். பக்கம் வருவார்கள், பொதுக்குழு கூடும் அன்று அவர்கள் எல்லாம் யார் என்று தெரியவரும் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

எனவே, ஓ.பி.எஸ். பக்கம் உண்மையிலேயே எத்தனை பேர் ஆதரவாளர்கள் உள்ளனர் என்று உறுதியாக தெரியாத நிலையில், எடப்பாடி இல்லாத அ.தி.மு.க.வை உருவாக்குவதாக ஓ.பி.எஸ். தரப்பில் முடிவெடுத்துள்ளார்களாம்..ஓபிஎஸ்ஸின் இந்த அதிரடிகள் அவருக்கு சாதகமான முடிவை பெற்று தருமா என்று தெரியவில்லை. தங்களுக்கென ஒரு அலுவலகம், பத்திரிகை, சேனல் போன்றவைகளை துவக்குவது சாதாரண விஷயம்தான் என்றாலும், அதன்மூலம் எடப்பாடியை கவிழ்க்க முடியுமா? அல்லது எடப்பாடி இல்லாத அ.தி.மு.க.வை உருவாக்க முடியுமா? என்பதெல்லாம் சந்தேகம்தான் என்கிறார்கள்.

இன்னொன்றையும் சொல்கிறார்கள். கொங்குவில் தன்னுடைய பலத்தை நிரூபிக்க தீவிரம் காட்டி வருகிறாராம் ஓ.பி.எஸ். இந்த நிமிடம் வரை 'முக்குலத்தோர்' அடையாள முகத்துடன் வலம் வரும் ஓ.பி.எஸ்.ஸால், கொங்குவில் ஆதரவையும், ஆதிக்கத்தையும் செலுத்த முடியுமா? என்பதும் கேள்விக்குறியே. கொங்கு அடையாளமான எடப்பாடிக்கு பதிலாக, ஓ.பி.எஸ். தரப்பின் இன்னொரு கொங்கு முகம் அடையாளப்படுத்தப்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் எடப்பாடியின் ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ். பக்கம் தாவுவார்களா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது..

இதைதவிர, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சீனியர்களுக்கு பதவி தருவதன் மூலம், வன்னியர்களை சமாளிக்கவும், வன்னியர்களின் ஆதரவை பெற முடியும் என்றும் நம்புகிறதாம் ஓ.பி.எஸ். டீம். ஒருகாலத்தில் அ.தி.மு.க.வில் சக்தி படைத்தவராக இருந்த பண்ருட்டியால், இன்றைய சூழலில் அரசியல் செய்ய முடியுமா? இதுவரை வன்னியர் சமுதாயத்திலும் பெரிதாக கவனிக்கப்படாத நிலையில், இந்த போஸ்டிங் தருவதாலும் அச்சமுதாய மக்களின் வாக்கு சதவீதத்தை இழுக்க முடியுமா? சி.வி. சண்முகம் போன்றோரே தேர்தலில் சறுக்கி சென்ற நிலையில், பண்ருட்டி என்ன செய்ய போகிறார்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த 5 திட்டங்களும் ஓ.பி.எஸ். டீமுக்கு கைகொடுக்குமா? அ.தி.மு.க. ஓ.பி.எஸ். கையில் செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On: 12 Aug 2022 6:50 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து