/* */

இந்திய அணியின் அலட்சியமே தோல் விக்கு காரணம்- 10 விக்கெட் வித்யாசத்தில் 'மூக்கை உடைத்த' இங்கிலாந்து அணி

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி, தனது சொதப்பலான ஆட்டத்தால், அலட்சியத்தால் இங்கிலாந்து அணியிடம் தோற்றது, கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

இந்திய அணியின் அலட்சியமே தோல்  விக்கு காரணம்- 10 விக்கெட் வித்யாசத்தில் மூக்கை உடைத்த இங்கிலாந்து அணி
X

உலக கோப்பை வெல்லும் வாய்ப்பை ‘கோட்டை விட்ட ’ இந்திய அணி.

'எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும்' என்ற போராட்டமான அரையிறுதி போட்டியில், அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் விளையாடிய இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் 'அபாரமாக' தோற்றுப்போனது.

இறுதி போட்டியில், பரம எதிரியான பாகிஸ்தானிடம் மோதி வெற்றி பெற்று, உலக கோப்பையுடன், எதிரணி பாகிஸ்தானை தோற்கடித்த பெருமையும் என இந்திய மண்ணுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் அற்புதமான வாய்ப்பு கொட்டிக்கிடந்தும், படுமோசமாக தோற்று, இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்த, அல்லது வாய்ப்பை ஏமாந்து 'கோட்டை' விட்ட இந்திய கிரிக்கெட் அணியை, ரசிகர்கள் சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கி வருகின்றனர்.


விளையாட்டு போட்டியில், ஒருவருக்கு வெற்றி என்பதும், எதிர்த்து நிற்பவருக்கு தோல்வி என்பதும் தவிர்க்க முடியாத விதி, என்பதை யாரும் மறுக்கவில்லை. இந்த நியதியை, யாருமே மாற்ற முடியாது என்பதும் மாபெரும் உண்மை. ஆனால், அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை வென்றுவிட்டால், அடுத்து இறுதி போட்டிக்குள் நுழையும் அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது. இறுதி போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தினால், உலக கோப்பை நமக்கு என்ற ஒரு சுலபமான வாய்ப்பு, கண்ணெதிரே இருக்கையில், இந்திய அணி வீரர்கள், வாழ்வா, சாவா என்ற ஒரு போராட்ட மனநிலையில், 20வது ஓவர் கடைசி பந்து வரை, ஒவ்வொரு பந்தையும் துடிப்புடன் நின்று இந்த போட்டியை எதிர்கொண்டிருக்க வேண்டும். இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து, துவம்சம் செய்து ரன் எண்ணிக்கையை, 200, 225 வரை என கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், பேட் செய்த வீரர்களிடம் அந்த விதமான துடிப்பை, ஆர்வத்தை சிறிதும் காண முடியவில்லை.


கேப்டன் ரோகித் ஷர்மா, துணை கேப்டன் கே.எல். ராகுல், அதிரடி ஆட்டக்காரராக பாரக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் 'அவுட்' ஆன போது, அவர்கள் முகத்தில் கடும் அதிர்ச்சியோ, டென்சனோ இல்லை. மூவரும், 'சென்சுரி' அடித்தவர்களை போல, சிரித்தபடி கேஷூவலாக வெளியேறி செல்வதைப் பார்த்த இந்திய ரசிகர்களின் மனம் பதறியது.

முக்கி, முணகி, திணறி, போராடி விராட்கோலியும், ஹிர்திக் பாண்டியாவும் அடித்த அரை சதங்களால், ரன் ரேட் 168 ஐ தொட்டது. இல்லையென்றால், 100 ரன்களுக்குள் இந்திய அணி சுருண்டு விழுந்து, இன்னும் மிக மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டு இருக்கும்.

இந்தியாவிற்கு எதிராக 'டாஸ்' வென்ற இங்கிலாந்து முதலில் 'பவுலிங்' தேர்வு செய்தது. இதையடுத்து 'பேட்டிங்' இறங்கிய இந்திய அணி, தொடக்கத்தில் இருந்தே சொதப்பலாக ஆடியது. ரன் கொஞ்சம், கொஞ்சமாக ஏறியது. 10 ஓவர்களை கடந்தும், 70 ரன்களை கூட தாண்டவில்லை. 15 ஓவர்களில்தான், 100 ரன்களையே கடந்தது. கடைசியில், ஹர்திக் பாண்டியாவின் 63 ரன்கள் அதிரடியால் இந்திய அணி 168 ரன்கள் எடுத்தது.


ஆனால், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி அதிரடியாக ஆடி, 16 ஓவரில் 170 ரன்கள் எடுத்து, போட்டியை சூப்பராக வென்றது.

இந்திய அணி தொடர்ந்து, 'நாக் அவுட்' போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது. 2019 உலகக் கோப்பை 50 ஓவர் போட்டியிலும் இப்படித்தான், இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த முறையும் மோசமாக ஆடி தோல்வி அடைந்து உள்ளது. இந்திய அணியின் பவுலிங், மிகவும் மோசமாக இருந்தது. இங்கிலாந்து அணி, 'ஸ்லோ' பந்துகளால், இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் இந்திய அணியின் பலம் ஸ்விங்தான். அதை பின்பற்றாமல், இந்திய அணியும் 'ஸ்லோ' பந்து போட முயன்றும், இங்கிலாந்து அணியிடம் இந்த பவுலிங் எடுபடவில்லை.

இந்திய அணி, 'பவர் பிளே'வில் மிக மோசமாக திணறியது. இந்திய அணி 'பவர்பிளே'வில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், இங்கிலாந்து 66 ரன்கள் எடுத்து அசத்தியது. 'பவர் பிளே'யில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி ரன்களை வாரி வழங்கியது.

இந்திய அணி, மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை, 'வெற்றிகரமாக' இழந்துள்ளது. கடந்த 2019 உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்தியா மிக சிறப்பாக ஆடி வந்தது. ஆனால் செமி பைனலில், சொதப்பி தோல்வி அடைந்தது. இந்த முறையும் குழு போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. கடைசியில், செமிபைனலில் சொதப்பி தோற்றது.

இந்தியா - பாகிஸ்தான் இடையில் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது இங்கிலாந்து அணி வென்றுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பைனலில் மோதுகிறது.


இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி படுமோசமாக இருந்தது. இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்கவில்லை என்றதும், சரியாக பவுலர்களை, ரொட்டேட் செய்து இருக்க வேண்டும். அதேபோல் அவரின் பீல்டிங் நிற்க வைத்த முறையும் மோசமாக இருந்தது. பேட்டிங்கில், 27 ரன்கள் மட்டுமே ரோஹித் எடுத்தார்.

வங்கதேசம் போன்ற சிறிய அணிகளுடன் சிறப்பாக ஆடிய கே. எல் ராகுல், 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடர் முழுக்கவே பெரிய அணிகளுடன், அவர் மோசமாக சொதப்பினார். 'ஓப்பனர்' என்று கூறி, அவர் எல்லோரையும் ஏமாற்றி வருகிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் எடுத்தது 14 ரன்கள் மட்டுமே. விராத் ஹோலி, 50 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா எடுத்த 68 ரன்கள், அணியை ஒரு மரியாதையான நிலைக்கு கொண்டு வந்தது.


169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய பவுலர்களின் பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல், இந்திய பவுலர்கள் தடுமாறினர். சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என அனைத்து பந்துகளையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 16 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. பட்லர் 80 ரன்களும், அலெக்ஸ் ஹெல்ஸ் 86 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

ஒரு முக்கியமான வெற்றிக்காக, எப்படி அசராமல் நின்று, விக்கெட் இழப்பின்றி விளையாடி வெற்றி பெறும் ஆற்றலை, உழைப்பை இந்திய அணிக்கு, இங்கிலாந்து அணி பாடமாக நடத்தி சென்றனர், என்றே கூட சொல்லலாம்.

நன்றாக விளையாட தெரிந்தது போல் நடிக்கிறார் என, கே.எல். ராகுலை வசைபாடும் ரசிகர்கள், கேப்டன் ரோஹித் சர்மாவை, விளம்பர படங்களில் நடிக்கத்தான், இவர் லாயக்கானவர் என்றும் கடுமையாக விமர்சிக்கின்றனர். 'பாய்காட் ஐபிஎல்' என்ற வாசகமும் தற்போது, சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், விராத் ஹோலி, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள், அடுத்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று பிசிசிஜ கூறியதாகவும், ஒரு தகவல் பரவி வருகிறது.

இறுதிபோட்டியில், பாகிஸ்தான் கூட விளையாடி தோற்றால் படுகேவலம்தான். அதுதான், இந்திய அணி ஆலோசித்து முடிவெடுத்து, முன்னதாகவே, இங்கிலாந்து அணியிடம் தோற்று, 'கவுரவமாக' வெளியேறி விட்டதாகவும், நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். நீங்க எல்லாம் எப்ப திருந்துவீங்க... என்றும் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

Updated On: 11 Nov 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...