/* */

இன்று 9வது சர்வதேச யோகா தினம்; - ‘மனிதனை மகத்தான நிலைக்கு மாற்றும் யோகா’

இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா தரும் அதிசய நன்மைகளை அறிந்து, நாமும் யோகா கலையில் ஈடுபட இனி முயற்சிப்போம்.

HIGHLIGHTS

இன்று 9வது சர்வதேச யோகா தினம்; - ‘மனிதனை மகத்தான நிலைக்கு மாற்றும் யோகா’
X

இன்று சர்வதேச யோகா தினம் (கோப்பு படம்)

சர்வதேச யோகா தினம் இன்று (புதன்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் பதஞ்சலி முனிவரால் தோன்றி வளர்ந்த ஓர் ஒழுக்க நெறி யோகா. உடல், மனம், அறிவு, உணர்வு, சகிப்புதன்மை மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமநிலையில் வாழ்வதற்கும் உரிய கலை பயிற்சியாக யோகா விளங்குகிறது.


இளைஞர்கள் பலர் கட்டுடலுக்காக ஜிம்முக்கு செல்கின்றனர். ஆனால் கட்டுடலுடன் மனதையும் கட்டுப்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது யோகா. இந்த பயிற்சியை செய்ய எந்த ஒரு உபகரணங்களும் தேவையில்லை. மருந்துகள் இல்லாமல் நோயை விரட்டுவது இதன் தனித்துவ குணம். யோகாவில் ஏராளமான ஆசனங்கள் உள்ளன. கல்வியை போல தான் இதுவும் கடல் போன்றது. இருப்பினும் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை அடிப்படை யோகா பயிற்சிகளை செய்தாலே நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உழைக்க ஆற்றலை தருகிறது.


இன்றைய குடும்ப சூழல், பணி சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக மாறி இருக்கிறது. மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும் சிறந்த விஷயமாக யோகா விளங்குகிறது. நேர்மறை எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களால் தான் ஒரு செயலை சாதிக்க முடியும் என்பது அனைவராலும் அறியப்பட்ட விஷயம். இந்த நேர்மறை எண்ணங்களுக்கு உரிய ஆற்றல் யோகா செய்வதன் மூலம் அதிக அளவில் கிடைக்கிறது. இதை காலப்போக்கில் உணர முடியும் என்பது தான் யோகாவின் ஆச்சரியமான விஷயம்.


நேர்த்தியான முறையில் வளைந்து பயிற்சி செய்வதன் மூலம் தசைகளும், எலும்புகளும் வலுவடைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்கிறது. இன்றைய உலகில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரவலான வியாதியாக உருவெடுத்துள்ளது. யோகாவின் மூலம் இந்த வியாதியை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அனைத்து நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்கவும், சிறந்த தூக்கத்திற்கும் யோகா உதவுகிறது.


யோகாவின் சிறப்பு என்னவென்றால், அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு வயது ஒரு தடை இல்லை. உடல் உருவமும் பிரச்சினை இல்லை. இருப்பினும் இளம் வயது முதல் யோகா பயிற்சியை மேற்கொண்டு வந்தால், உடலில் நெகிழ்வு தன்மை அதிகரிக்கும். அதாவது உடலை வில்லாக வளைக்க முடியும். யோகா ரத்த ஓட்ட அமைப்பு, செரிமான செயல்முறை, நரம்பு மற்றும் நாளமில்லா அமைப்புகளை தூண்ட உதவுகிறது. சுவாச பயிற்சிகள் நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது. தியானம் மன அமைதியை மேம்படுத்துகிறது. இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருப்பதை யோகா செய்பவர்களால் உணர முடிகிறது. இருப்பினும் சரியான பயிற்சியாளர்களிடம் யோகா ஆசனங்களை கற்றுக்கொள்ள வேண்டும். ஏடாக்கூடமாக செய்து உடலில் சுளுக்கு, தசைநார்கள் கிழிதல் நிலைக்கு ஆளாகி விடக்கூடாது.


இந்தியாவில் சமீப காலமாக யோகா கலை பிரபலமாகி வருகிறது. பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் தற்போது பயிற்சி செய்து வருவதால், இது முன் எப்போதையும் விட மிகவும் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக யோகாவை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற உறுதியான முடிவு எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. ஜூன் மாதம் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பரில் முன்மொழிந்தார். இந்த கோரிக்கை அதே ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி ஐ.நா. சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு 175 உறுப்புநாடுகள் ஆதரவு அளித்தன.


(கோப்பு படம்)

இதையடுத்து 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய தருணமாக இன்று (புதன்கிழமை) அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.வில் கொண்டாடப்படும் 9-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்.

உலகெங்கும் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் நாள் யோகா தினமாக 2015-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 2014-ம்ஆண்டு ஐ.நா.வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது ஜூன் 21-ம் நாள் யோகா தினமாக உலகெங்கும் கொண்டாடப்படலாம் என்றும் ஒரு ஆண்டில் நீண்ட பகல் பொழுதைக் கொண்டிருக்கும் இந்த நாள் உலகில் உள்ள பல பகுதியினருக்கும் சிறப்பான நாள் என்றும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து ஐ.நா. வில் ஜூன் 21-யோகா தினமாகக் கொண்டாடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


யோக சூத்திரம்: பதஞ்சலி முனிவர் வகுத்த அட்டாங்க யோகம் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு அடுக்கு எனப்படும் அட்டாங்க வழியைக் காண்பிக்கும் ஒன்று. இதனால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும், சமுதாய நலனும் மேம்படும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் உலகெங்கும் யோகா இப்போது நடைமுறைப் பழக்கமாக ஆகிவிட்டது. இதற்கென தனி இடமோ அல்லது விசேஷமான சாதனங்களோ தேவை இல்லை. உடலே இதற்கான கருவி. உள்ளமே உயரத்தை எட்டுவதற்கான ஏணி. யோகத்தினால் மூச்சை அடக்கிய யோகி: உலகெங்கும் உள்ள சோதனைச் சாலைகளில் யோகா பற்றிய ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவை வியக்கத்தகு முடிவுகளை அறிவித்துள்ளன.

மகராஜா ரஞ்சித் சிங் லாகூரை ஆண்டபோது அவருடன் இணைந்து பிரிட்டிஷ் ஜெனரலான சர் கிளாட் வேட் ஒரு சோதனையை நடத்தினார். அரசு முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் யோகியான ஹரிதாஸ் என்பவர் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டார். 120 நாட்கள் கழித்து குழி தோண்டப்பட்டு பெட்டியைத் திறந்து பார்த்த போது முன்னர் எப்படி அமைதியாக இருந்தாரோ அதே போல அவர் எழுந்து வந்தார். இதைப் பார்த்த அனைவரும் பிரமித்தனர்.


1986-ம் ஆண்டு பிரிட்டன் ராணுவ ஆய்வு மையம் பிரெனர் மற்றும் கனாலி ஆகிய இரு விஞ்ஞானிகளை மூச்சை அடக்கும் யோகா திறன் பற்றி ஆய்வு செய்ய நியமித்தது. 'தியானத்தின் மூலமாக மிக அதீத ஓய்வு நிலையைப் பெறுவதால் உடல் இயக்கம் நம்ப முடியாதபடி குறைந்து ஆக்சிஜன் தேவையை வெகுவாகக் குறைக்கிறது. ஆகவே இது சாத்தியமாகிறது' என்று அவர்கள் ஆய்வின் முடிவைக் கூறினர். 1927-ம் ஆண்டு பாரீசில் நடந்த பன்னாட்டு அதீத உளவியல் மாநாட்டில் பேராசிரியர் வான் ஷ்ரெங் நாட்ஜிங் முன்னிலை வகிக்க மாநாட்டில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க ஒரு இளைஞர் 27 முறை மேலே பறந்து காண்பித்தார். யோகத்தால் வந்த - மிதக்கும் - 'லெவிடேஷன்' சக்தி இது என்று அவர் கூறியபோது அனைவரும் வியந்தனர்.

யோகம் தரும் பயன்கள்:

தியானம் மற்றும் எளிய ஆசனங்கள் எல்லையற்ற பயனைத் தருபவை. தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை இதற்கு ஒதுக்கினால் போதும். நல்ல ஒரு ஆசானிடம் எளிய ஆரம்பப் பயிற்சிகளைக் கற்று ஒருவர் இதில் ஈடுபட்டால் ஏராளமான பயன்களைப் பெறலாம்.

1) பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தியானம் ஒருவருக்கு ஆக்கபூர்வமான தொடர் வரிசை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

2) நடத்தையைச் சீராக்கும் மருத்துவ சிகிச்சையில் இது தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாக ஆகிறது.

3) மன அழுத்தத்தை இது நீக்குகிறது. நல்ல ஓய்வை உறுதி செய்கிறது.

4) ஒருவரின் உண்மையாக தற்போது இருக்கும் ஆன்ம அடையாளத்தை அவரது லட்சியபூர்வமான ஆன்ம அடையாளத்துடன் சமப்படுத்துகிறது.


(கோப்பு படம்)

5) அனைத்தும் உள்ளடக்கிய முழு மருத்துவத்தைத் தன்னுள்ளே கொண்டது இது.

6) அகங்காரத்தை நீக்குகிறது.

7) நிகழ்காலத்தில் வாழ வழி வகுக்கிறது.

8) எண்ணங்களைத் தளர்த்தி வெளியேற்றும் சிறந்த உத்தியாக அமைகிறது இது.

9) ஆரோக்கியத்திற்கான அற்புதத் திறவுகோல் இது. மாரடைப்பு, கேன்சர், பக்கவாதம் போன்ற கொடிய நோய்களை வரவிடாமல் செய்ய உள்ள அற்புத வழி இது.

10) தியானத்தால் நம்பமுடியாத உடல் ரீதியான சாகசச் செயல்களைச் செய்ய முடியும்.


11) தியானத்தினால் தானியங்கி நரம்பு மண்டலத்தை நமக்கு உகந்த படி கட்டுப்படுத்த முடியும்.

12) மன அழுத்தம், மன இறுக்கம் சம்பந்தமான உளவியல் மற்றும் இதர பிரச்சினைகளை நீக்குவதற்கு உதவுவது இது.

13) மனிதனுக்கு அகண்ட பார்வையைத் தருவது இது.

14) வேக யுகத்தில் நமக்குள்ள தொழில்நுட்ப கலாசாரத்தின் தீமைகளை எளிதில் அகற்றுவது இது.

15) மனித வாழ்வின் மாண்புகளையும் மதிப்புகளையும் உணர்த்துவது இது.

16) நமக்குத் தெரிந்த கலைகளிலேயே மிக எளிதாகக் கற்கக் கூடிய கலை யோகக் கலையே.

17) நமக்குத் தெரிந்த உத்திகளிலேயே மிக எளிதாகப் பயிற்சியை நடைமுறைக்குக் கொண்டுவருவது இதுவே.

18) இதைச் செய்ய பணம் தேவை இல்லை.

19) இதற்கு வயது வரம்பு கிடையாது.


20) ஆண், பெண் என்ற பால் பாகுபாடு இல்லை.

21) எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.

22) தியானத்தை எந்த நேரத்திலும் மேற்கொள்ளலாம்.

23) இனம், மதம், நாடு, அந்தஸ்து என்ற பாகுபாடோ பேதமோ இல்லை.

24) மனதைப் பண்படுத்தி உயரலாம். 25) உடலை மேம்படுத்தலாம்.

26) ஆன்மீக சக்தியை அதிகப்படுத்தலாம்.

27) மனித குலத்தின் பாரம்பரியத்தின் சிறந்த குணங்கள் தியானத்துடன் சம்பந்தமுள்ளவையாக இருக்கின்றன.

28) தியானத்தின் போது ஆச்சரியகரமான அற்புத அனுபவங்கள் ஏற்படும்.

29) நீண்ட ஆயுளை உறுதி செய்யும்.

30) கெட்ட கனவுகள் அகலும்.

31) இரவில் நல்ல தூக்கம் வரும்.

32) தாடைகளை இறுக்குதல், முதுகெலும்பு, தோள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகலும்.

33) அனைவரையும் கவரும் வண்ணம் எல்லையற்ற அமைதியுடன் எப்போதும் இருக்க முடியும்.

34) புன்னகை ஒளிர முகத்தில் ஒரு ஒளி தோன்றும்.

35) வெட்கம் அகலும்.

36) விளையாட்டு வீரர்கள், கணினி நிபுணர்கள், விஞ்ஞானிகள், பைலட்- என இப்படி எந்தத் துறையினருக்கும் இது பொருந்துவதோடு அவர்களின் திறனை வியத்தகு அளவில் கூட்டும்.


(கோப்பு படம்)

தலாய்லாமாவின் அழைப்பு:

கடந்த 2000-ம் ஆண்டில் தலாய்லாமா அமெரிக்க விஞ்ஞானிகளை தியானம் பற்றி அறிவியல் ரீதியாக ஆராய வருமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் ஒரு யோகியை சோதனைக்கு அனுப்புமாறு வேண்ட அமெரிக்காவிற்கு 30 வயதே ஆன ஒரு யோகியை தலாய்லாமா அனுப்பினார். விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல நியூரோ விஞ்ஞானியான ரிச்சர்ட் டேவிட்சன் அந்த யோகியின் மீது சோதனைகளை மேற்கொண்டார்.

யோகி ஆறு விதமான தியான நிலைகளைச் செய்து காண்பித்தார். மாக்னெடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் மெஷின் (MRI) என்ற நவீன கருவியை உபயோகித்து ஒவ்வொரு தியானத்திலும் லாமாவின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ரிச்சர்ட் ஆராய்ந்தார். ஒவ்வொரு விநாடியும் அந்தச் செயல்பாடுகளை ஸ்கேன் செய்ய முடிந்தது. ஆறு தியான நிலைகளில் 'தயை' என்னும் தியானம் லாமாவின் மூளையில் இடது பக்க பிரண்டள் கைரசின் செயல்பாட்டைக் காண்பித்தன. இந்தப் பகுதி தான் ஒரு மனிதனின் சந்தோஷம், உற்சாகம், சக்தி, விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கும். வலதுபக்க பிரிப்ரண்டல் பகுதி ஒருவரின் சோகம், துக்கம், கவலை, ஏக்கம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறிக்கும்.


'தயை தியானத்தில்' லாமாவின் மூளைப்பகுதி சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் எல்லையற்ற நலத்தையும் காண்பித்தன. இவற்றைப் பயிற்சி மூலம் பெறலாம் என்பதை இது உறுதிப்படுத்தியது. அடுத்த சோதனைத் தொடரை பால் எக்மன் என்னும் விஞ்ஞானி நடத்தினார். முகத்தில் ஏற்படும் நுணுக்கமான முகபாவ வேறுபாடுகளை ஆய்வதில் வல்லவர் அவர். திடீரென ஒரு பயங்கரமான ஓசையை அவர் ஏற்படுத்தி லாமாவைக் கவனித்தார். இந்த சத்தத்திற்கு யாராக இருந்தாலும் திடுக்கிட்டுப் பயப்படாமல் இருக்க முடியாது. ஆனால் லாமாவோ 'ஓபன் ஸ்டேட்' என்னும் தியான நிலையை மேற்கொண்டிருந்ததால் அவர் முகத்தில் எந்த வித பய உணர்ச்சியும் தெரியவில்லை. அவரது இதயத்துடிப்பும், ரத்த அழுத்தமும் சிறிது உயர்ந்தது. எந்த வித அதிர்ச்சி ஏற்பட்டாலும் உடனடியாக சமநிலைக்கு உடனே வர முடியும் என்பதை தியானம் மூலம் அவர் நிரூபித்தார். இப்படி ஏராளமான சோதனைகள் நடந்தன. முடிவுகளை வெளியிட்ட விஞ்ஞானிகள் வியந்தனர்.


பிரபல உளவியல் இதழான சைக்காலஜி டு டே தொடர்ந்து யோகாவின் சிறந்த பயன்களைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளை வெளியிட்டு வருகிறது. பத்து நிமிட தியானத்திற்கே பெரும் பயன் உண்டு என்று விஞ்ஞானிகளின் சோதனைகள் நிரூபிக்கின்றன. இந்த பத்து நிமிட தியானத்திலேயே தியானம் செய்வோர் அதிக அளவுஆல்பா அலைகளை (ஓய்வான மூளை அலைகள்) வெளியிடுவதையும், மனச்சோர்வு, மன அழுத்தம் இல்லாமல் இருப்பதையும் ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


தமனிகளில் தடிப்பு ஏற்படும் ஆர்தெரோலெரோசீஸ் என்ற வியாதியால் அவதிப்பட்ட அமெரிக்கர்களில் அறுபது பேர் ஆறு முதல் ஒன்பது மாதம் வரை தியானம் செய்ய அவர்களின் தமனிகளில் தடிமன் குறைய ஆரம்பித்தது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. மகரிஷி மகேஷ் யோகி கற்பித்த ஆழ்நிலை தியானத்தைப் பற்றி ஏராளமான அறிவியல் சோதனை முடிவுகள் இரு பாகங்களாக படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

கவனத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஒரு தனிமனிதனின் உணர்வில் செல்வாக்கை ஏற்படுத்தும் ஒரு உத்தியே தியானம் என அறிவியல் தியானத்தை வரையறுத்துக் கூறுகிறது. ஆனால் இதைத் தோற்றி வளர்த்துக் காக்கும் இந்து மதமோ, "உடல் ரீதியாக உயர்வது மட்டுமின்றி ஆன்மாவை உணர்வதற்கான கலையே யோகா" என்று கூறுகிறது.

யோகம் கற்போம்! வளமுடன் வாழ்வோம்!!

குறிப்பு; செய்தியில் இடம்பெற்ற அனைத்தும் கோப்பு படங்கள்.

Updated On: 21 Jun 2023 7:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  2. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  3. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  6. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  7. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  8. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  10. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!