/* */

நான்கு யுகங்களைக் கண்ட திருப்பூர் 'சுக்ரீஸ்வரர்' கோவில்; மிளகீசனை தரிசிக்கலாம் வாங்க...!

2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவில், நான்கு யுகங்களைக் கண்ட புராதனப் பெருமை வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது.

HIGHLIGHTS

நான்கு யுகங்களைக் கண்ட திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவில்; மிளகீசனை தரிசிக்கலாம் வாங்க...!
X

திருப்பூரில், தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையாகக் கூறப்படும் ‘சுக்ரீஸ்வரர்’ கோவில்.

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில், 8 கி.மீ., தொலைவில், சர்க்கார் பெரியபாளையம் உள்ளது. எஸ். பெரியபாளையம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு 2,500 ஆண்டுகள் பழமையான 'சுக்ரீஸ்வரர்' கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இறைவன் 'சுக்ரீஸ்வரர்' அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் 'ஆவுடைநாயகி' என்பதாகும்.


ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு உதவியாக இருந்த 'சுக்ரீவன்' என்ற வானர அரசனால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட சிவலிங்கம் இந்த ஆலயத்தின் மூலவராக இருப்பதாக, தல வரலாறு கூறுகிறது. எனவே தான் மூலவருக்கு 'சுக்ரீஸ்வரர்' என்ற பெயர் வந்தது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், கோவிலின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலை, 2,500 ஆண்டுகள் பழமையானது என்று தொல்லியல் துறையினர் கூறினாலும், இங்கு கி.பி. 1220-ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டுதான் காணப்படுகிறது. ஆனால், இந்த கோவில் 17.28 லட்சம் ஆண்டுகளைக் கொண்ட கிருதாயுகத்தில், காவல் தெய்வமாக வழிபட்டதாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளைக் கொண்ட திரேதாயுகத்தில் சுக்ரீவனால் வழிபடப்பட்டதாகவும், 8.64 லட்சம் ஆண்டுகளைக் கொண்ட துவாபர யுகத்தில் இந்திரனின் வாகனமான 'ஐராவதம்' என்ற வெள்ளை யானையாலும், 4.32 லட்சம் ஆண்டுகளைக் கொண்ட கலியுகத்தில் தேவர்கள், அரசர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்களால் வணங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


அந்த வகையில் நான்கு யுகங்களையும் கண்ட தெய்வீக சக்தி படைத்தவராக, இத்தல இறைவன் சுக்ரீஸ்வரர் போற்றப்படுகிறார்.

இந்த கோவிலில் உள்ள இறைவனை, சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரர் தேவாரப் பாடலால் பாடியிருக்கிறார். பிரமிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கோவிலின் மூலவர் சுக்ரீஸ்வரர், சிவலிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறார். இவருக்கு வலதுபுறம் ஆவுடைநாயகி அம்மன் சன்னிதி அமைந்திருக்கிறது. கோவிலின் சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்கள் உள்ளன.

மேலும் எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளி அம்மன் வீற்றிருக்கிறார். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக அக்னி லிங்கம் இருக்கிறது. ஆலயத்தைச் சுற்றி வரும் பகுதியில் வாயு லிங்கம், அப்புலிங்கம், பிருத்வி லிங்கம் ஆகியவை உள்ளன. வில்வ மரத்தின் கீழ், ஐந்தாவதாக ஆகாச லிங்கம் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.


பெரும்பாலும் சிவாலயங்கள் கிழக்கு நோக்கிய வாசல் கொண்டவையாக இருக்கும். ஆனால் இந்த கோவிலுக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வாசல்கள் அமைந்துள்ளன. மற்ற கோவில்களை போல, மூலவரை நேரடியாக எதிர் திசையில் வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். ஒரு முறை தொல்லியல் துறையினர் இந்த கோவிலை புனரமைக்கும் போது, அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தனா். அப்போது தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியில் இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன் கொண்டதாக இந்த கோவில் திகழ்கிறது.


ஒரு சிலருக்கு உடலில் மருக்கள் தோன்றி, உடல் பொலிவை குறைக்கும். அதுபோன்றவர்கள் இந்த கோவில் உள்ள இறைவனுக்கு மிளகு நிவேதனமாக படைக்கின்றனர். அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து, 8 நாட்களுக்கு உணவில் சேர்த்து சாப்பிட்டால், மருக்கள் மறைந்துவிடுவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதன் காரணமாக இத்தல ஈசனை 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர். இந்த ஆலயத்தில் இரட்டை நந்தி சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்துள்ளன.

Updated On: 4 Feb 2023 5:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி